ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இம்முறை அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு மெகா ஏலம் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டுமே தக்க வைக்க முடியும். ஆனால் இம்முறை அந்த விதிமுறையை மாற்றி 7 – 8 வீரர்களை தக்க வைக்க அனுமதிக்குமாறு பிசிசிஐயிடம் ஐபிஎல் அணி நிர்வாகங்கள் கேட்டுக் கொண்டுள்ளன.
அது போக இம்பேக்ட் வீரர் விதிமுறை நீக்க வேண்டும் என்று சில ஐபிஎல் அணிகள் கேட்டுக் கொண்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. முன்னதாக கடந்த வருடம் நடைபெற்ற ஏலத்தில் ஆஸ்திரேலியாவின் பட் கமின்ஸ் 20.50 கோடிக்கு ஹைதராபாத் அணிக்காக வாங்கப்பட்டார். அதே போல மிட்சேல் ஸ்டார்க் 24.75 கோடிக்கு கொல்கத்தா அணிக்காக வாங்கப்பட்டார்.
அஸ்வின் அதிருப்தி:
அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் நேரடி ஏலத்தில் 20 கோடிகளுக்கு வாங்கப்பட்ட முதல் 2 வீரர்களாக அவர்கள் சாதனை அடைத்தனர். ஆனால் காலம் காலமாக ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் இந்திய ஜாம்பவான்கள் எம்எஸ் தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் கூட தங்களுடைய வாழ்நாளில் 20 கோடி சம்பளத்தை வாங்கியதில்லை. அதனால் வெளிநாட்டு வீரர்களுக்கு பிசிசிஐ உச்சகட்ட சம்பளத்தை நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் உள்ளன.
இந்நிலையில் மெகா ஏலத்தில் வெளிநாட்டு வீரர்கள் பல்வேறு காரணங்களைச் சொல்லி வெளியேறுவதை வாடிக்கையாக வைத்திருப்பதாக ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். ஆனால் மினி ஏலத்தில் குறைந்த வீரர்கள் மட்டுமே பங்கேற்பார்கள் என்பதால் அதிக தொகைக்கு விலை போக வாய்ப்புள்ளது. எனவே வெளிநாட்டு வீரர்கள் மினி ஏலத்தில் தவறாமல் கலந்து கொள்வதாகவும் அவர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
எனவே பிசிசிஐ அதை மாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளும் அஸ்வின் இது பற்றி பேசியது பின்வருமாறு. “மெகா ஏலம் என்றால் வெளிநாட்டு வீரர்கள் எனக்கு கால் இழுத்துக் கொண்டது, ஊருக்கு சென்று விவசாயம் செய்யப் போகிறேன் என்று சொல்கின்றனர். ஆனால் மினி ஏலத்தில் இன்று சிட்னியில் வீடு கட்டப் போகிறேன். நாளை மாலத்தீவுகளை வாங்கப் போகிறேன். நாளை மறுநாள் பிஜியில் கப்பல் வாங்குகிறேன் என்ற வகையில் செயல்படுகின்றனர்”
இதையும் படிங்க: ஜெர்ஸி நம்பர் ஒன்னா இருப்பதை வெச்சு விராட் கோலியுடன் இதை செய்யாதீங்க.. ரசிகர்களுக்கு மந்தனா கோரிக்கை
“ஆனால் இனிமேல் இந்திய வீரர்கள் எவ்வளவு அதிகபட்ச விலைக்கு செல்கிறார்களோ அதே உச்சகட்ட சம்பளம் வெளிநாட்டு வீரர்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்ற விதிமுறை அவசியம். என்னை கேட்டால் அந்த ஏலத்திலேயே மிகவும் குறைந்த தொகைக்குப் போகும் வீரருக்கு வழங்கப்படும் பணத்தை வெளிநாட்டவர்களுக்கு கொடுக்க வேண்டும். அது நடக்கப் போவதில்லை இருப்பினும் சொல்கிறேன்” என்று கூறினார்.



