கேமராமேன் பாக்குற வேலையா இது, வைரல் வீடியோவால் அனைவரது கிண்டலுக்கு உள்ளான அஷ்வின் – கொடுத்த கூலான பதில் இதோ

Ravichandran Ashwin Rohit Sharma
Advertisement

ஆஸ்திரேலியாவில் அனல் பறக்க நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதில் நடைபெற்று முடிந்த சூப்பர் 12 சுற்றின் முடிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் கோப்பையை தக்க வைக்க முடியாமல் பரிதாபமாக வெளியேறிய நிலையில் நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளன. குறிப்பாக ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தன்னுடைய 5 போட்டிகளில் 4 வெற்றிகளை பதிவு செய்து குரூப் 2 பிரிவில் முதலிடம் பிடித்ததால் நவம்பர் 10ஆம் தேதி நடைபெறும் 2வது அரையிறுதி போட்டியில் குரூப் 1 பிரிவில் 2வது இடத்தை பிடித்த இங்கிலாந்தை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.

முன்னதாக இத்தொடரில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான தன்னுடைய கடைசி சூப்பர் 12 போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா சூரியகுமார் யாதவின் அதிரடியால் 186 ரன்கள் குவித்து பின்னர் 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அப்போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பேசிக் கொண்டிருக்கும் போது அவரை மிகவும் அருகில் கேமராமேன் ஃபோக்கஸ் செய்து படம் பிடித்தார். ஆனால் அதில் ரோகித் சர்மாவின் பின்புறத்தில் தமிழகத்தின் நட்சத்திர மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் செய்த ஒரு குறும்புத்தனமான வேலை சிக்கியது தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்ட்டாகி வருகிறது.

- Advertisement -

அடேய் கேமராமேன்:
அதாவது மைதானத்தில் இருந்த 2 ஸ்வெட்டர் ஜெர்ஸிகளில் தம்முடையது எது என்பதை கண்டுபிடிப்பதற்காக அவை இரண்டையும் கையிலெடுத்த ரவிச்சந்திரன் அஷ்வின் தன்னுடைய வியர்வையின் வாசத்தை வைத்து கண்டுபிடிப்பதற்காக மோப்பம் பிடித்தார். இறுதியில் ஒரு சில நொடிகளிலேயே தன்னுடைய உடல் வியர்வை வாசத்தை கண்டறிந்த அவர் தன்னுடைய ஜெர்சியை கையில் எடுத்துக்கொண்டு மற்றொன்றை கீழே போட்டுவிட்டு கூலாக சென்றார். ஆரம்பத்தில் அது கட்டுக்கொள்ளப்படாத நிலையில் ஒரு ரசிகர் மட்டும் தொலைக்காட்சியில் படமெடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதால் வைரலானது.

அதை கிரிக்கெட் பார்த்த ரசிகர்கள் பள்ளி அல்லது கல்லூரி ஹாஸ்டலில் சக நண்பர்களுடன் தங்கியிருக்கும் போது அனைவரது துணிமணிகளும் ஒன்றாக கலந்து போகும் சமயங்களில் இப்படி வியர்வை வாசத்தை வைத்து தங்களுடைய துணியை பிரத்தியேகமாக கண்டுபிடிக்கும் யுக்தியை அஷ்வின் கையாண்டதாக கலகலப்பான பதிலளித்து கலாய்த்தனர். அதே போல் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் அப்படி என்ன மோந்து பார்க்கிறீர்கள் அஷ்வின் என்று சிரித்து சிரித்து கிண்டலடித்தார். அதை விட அந்த வீடியோவை பலமுறை பார்த்து சிரித்ததாக தெரிவித்த முன்னாள் வீரர் அபிநவ் முகுந்த் உங்களுடைய சரியான ஸ்வெட்டரை கண்டுபிடிக்க என்ன லாஜிக்கை பயன்படுத்தினீர்கள் என்று அஷ்வினிடம் ட்விட்டரில் கேள்வி எழுப்பினார்.

- Advertisement -

அதற்கு ரவிச்சந்திரன் பதிலளித்தது பின்வருமாறு. “முதலில் இரண்டுக்கும் இடையேயான அளவுகளை (சைஸ்) சோதித்தும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் அதில் எந்த வீரருடைய பெயரின் முதல் எழுத்து எழுதப்பட்டுள்ளது என்பதை சோதித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் கடைசியாக நான் உபயோகப்படுத்தும் வாசனை திரவியத்தின் (பெர்பிஃயூம்) வாசனையை வைத்து கண்டுபிடித்தேன். அடேய் கேமராமேன்” என்று சிரிப்புடன் பதிலளித்துள்ளார்.

அதாவது சிறுபிள்ளைத்தனமாக ஸ்வட்டரை கண்டுபிடித்த யுக்தியை உலகம் முழுவதிலும் அப்பட்டமாக படம் பிடித்து காட்டியதால் கிண்டல்களுக்கு உள்ளாக காரணமாக அமைந்த கேமராமேனை அஷ்வின் விளையாட்டாக திட்டினார். அதைப் பார்த்த ரசிகர்கள் மற்றவர்கள் துணிமணிகளுடன் கலந்து கிடக்கும் நம்முடைய துணியை கச்சிதமாக கண்டுபிடிக்க அஷ்வின் புதிய ஒரு வழியை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளதாக மீண்டும் கலகலப்பாக தெரிகின்றனர்.

முன்னதாக இந்த தொடரில் பந்து வீச்சில் கட்டுக்கோப்பாக செயல்பட்டு வரும் அவர் பேட்டிங்கில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிரான போட்டியில் கடைசி நேரத்தில் கணிசமான ரன்களை எடுத்து வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டது பாராட்டுகளை பெற்றது. அந்த வகையில் அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும் அரை இறுதி போட்டியில் அதே போன்ற பங்கை ஆற்றி இந்தியாவுக்கு வெற்றியை பெற்றுக் கொடுக்க அஷ்வின் தயாராகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement