எப்போ பாரு உங்களுக்கு இதே வேலையா போச்சு, ஜானி பேர்ஸ்டோ சர்ச்சை அவுட்டில் – அஸ்வின் கருத்து என்ன

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2023 ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் தோற்ற இங்கிலாந்து 2வது போட்டியிலும் 43 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று ஆரம்பத்திலேயே பின்தங்கி விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. குறிப்பாக அதிரடியாக விளையாடுகிறோம் என்ற பெயரில் முக்கிய தருணங்களில் சொதப்பிய அந்த அணியின் தவறுகளை தங்களுக்கு சாதமாக்கிய ஆஸ்திரேலியா அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற்று தங்களை உலக சாம்பியன் என்பதை நிரூபித்துள்ளது.

அதை விட லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2வது போட்டியில் 371 ரன்களை துரத்திய இங்கிலாந்து 45/4 என ஆரம்பத்திலேயே சரிந்த நிலையில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் உடன் இணைந்து போராடிய பென் டூக்கெட் 83 ரன்களில் அவுட்டானார். அவருக்கு பின் வந்த ஜானி பேர்ஸ்டோ நிதானமாக விளையாட முயற்சித்த போதிலும் கேமரூன் கிரீன் வீசிய 56வது ஓவரில் பவுன்ஸ் ஆகி வந்த கடைசி பந்தை குனிந்து அடிக்காமல் விட்டார். ஆனால் அப்போது எதைப்பற்றியும் யோசிக்காமல் உடனடியாக வெள்ளை கோட்டை விட்டு அவர் வெளியேறிய நிலையில் பந்தை பிடித்த விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி ஸ்டம்ப்களில் அடித்து ரன் அவுட் செய்தார்.

- Advertisement -

அஸ்வின் கருத்து:
அதை தொடர்ந்து 3வது நடுவர் சோதித்த போது வெள்ளைக்கோட்டை விட்டு வெளியேறியதால் 10 ரன்களில் ஜானி பேர்ஸ்டோ அவுட் என்று அறிவிக்கப்பட்டது. அந்த தருணம் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி கடைசியில் பென் ஸ்டோக்ஸ் 155 ரன்கள் அடித்தும் இங்கிலாந்துக்கு வெற்றியை கொடுக்கவில்லை. அப்படிப்பட்ட நிலையில் ஆஸ்திரேலியா நேர்மைக்கு புறம்பானதாக நடந்து கொண்டதாக இங்கிலாந்து ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் விமர்சித்து வருகின்றனர்.

குறிப்பாக பந்தை திரும்பி பார்க்கவில்லை என்றாலும் “அதை எதிர்கொண்டு முடித்து விட்டேன்” என்பதை உணர்த்தும் வகையில் உலகின் அனைத்து பேட்ஸ்மேன்களும் செய்வது போல் தம்முடைய காலால் வெள்ளைக்கோட்டில் குறியிட்டு பின்பு தான் ஜானி பேஸ்ட் வெளியேறினார். மறுபுறம் அந்த தருணத்தில் பந்தை கையில் பிடித்து விட்ட அலெக்ஸ் கேரி அவர் வெளியேறிய சமயம் பார்த்து சரியாக அடித்து ரன் அவுட் செய்து விட்டார். அந்த வகையில் விதிமுறைக்குட்பட்டு அது அவுட் என்றாலும் நியாயத்தின் அடிப்படையில் நேர்மைக்கு எதிரானதாகவே அமைந்தது என்றால் மிகையாகாது.

- Advertisement -

இந்நிலையில் கிட்டத்தட்ட மன்கட் அவுட்டை போல நேர்மை தன்மையின் மீது கேள்வியை எழுப்பி சர்ச்சை ஏற்பட்டுள்ள இந்த விவகாரத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக பேசியுள்ளார். குறிப்பாக ஜோஸ் பட்லரை அவுட் செய்ததால் உலக அளவில் விமர்சனங்களை வாங்கி கட்டிக் கொண்ட அவர் விதிமுறைக்குட்பட்டே நடந்து கொண்டதாக விடாப்பிடியாக நின்றார். அத்துடன் ஒரு இன்ச் வெளியே காலை வைத்து பந்து வீசினால் அதற்கு தண்டனையாக நோபால் மற்றும் ஃப்ரீ ஹிட் கொடுக்கப்படும் போது பேட்ஸ்மேன்கள் மட்டும் அடி கணக்கில் வெளியேறி விதிமுறையை மீறுவதாக கொந்தளித்த அவர் உலகின் அனைத்து பவுலர்களும் மன்கட் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

அப்படி தொடர்ந்து கொடுத்த அவரது குரலில் நியாயம் இருந்ததை ஏற்றுக் கொண்ட இதே லண்டனின் எம்சிசி மன்கட் அவுட்டை ரன் அவுட் பிரிவுக்கு மாற்றியுள்ளது. அந்த நிலையில் விதிமுறையை பின்பற்றி விழிப்புணர்வுடன் செயல்பட்ட அலெக்ஸ் கேரியை பாராட்ட வேண்டுமே தவிர எப்போதும் நேர்மை தன்மை என்ற பெயருடன் விமர்சிப்பதே விமர்சகர்களுக்கு வேலையாய் போய்விட்டது என அஸ்வின் பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி ரசிகர் ஒருவர் எழுப்பிய கருத்துக்கு ட்விட்டரில் அவர் பதிலளித்தது பின்வருமாறு.

இதையும் படிங்க:தோனி என்னோட தோளின் மீது கைபோட்டு எனக்கு கொடுத்த அறிவுரை இதுதான் – இந்திய அணிக்கு தேர்வான முகேஷ் குமார் நெகிழ்ச்சி

“ஒரு உண்மையை நாம் சத்தமாகவும் தெளிவாகவும் புரிந்து கொள்ள வேண்டும். பேர்ஸ்டோ பந்தை அப்படி அடிக்காமல் விட்டு வெளியேறியதை அவர் அல்லது அவருடைய அணி கவனித்தாலே தவிர டெஸ்ட் போட்டியில் கீப்பர் அவ்வளவு தூரத்திலிருந்து வேண்டுமென்று அடிக்க மாட்டார். நாம் நியாயமற்ற விளையாட்டோ அல்லது விளையாட்டின் உணர்வையோ நோக்கி செல்வதை விட தனிநபரின் புத்திசாலித்தனத்தை பாராட்ட வேண்டும்” என்று கூறினார்.

Advertisement