ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 2008 முதல் நடைபெற்று வருகிறது. கடந்த 17 வருடங்களாக நடைபெற்று வரும் அந்தத் தொடர் ஐசிசி உலகக் கோப்பைக்கு நிகரான திரில்லர் போட்டிகளை ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறது. அந்தத் தொடரில் நிறைய வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளனர்.
இந்நிலையில் ஐபிஎல் வரலாற்றில் சிறந்து விளங்கிய 11 வீரர்களைக் கொண்ட தனது ஆல் டைம் கனவு அணியை ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்ந்தெடுத்துள்ளார். அந்த அணியில் ரோஹித் சர்மாவை அவர் முதல் துவக்க வீரராக தேர்ந்தெடுத்துள்ளார். மும்பை அணிக்காக சிறந்த ஓப்பனிங் பேட்ஸ்மேனாக விளையாடும் ரோஹித் சர்மா கேப்டனாக 5 கோப்பைகளை வெல்வதற்கு முக்கிய பங்காற்றியுள்ளார்.
அஸ்வின் லெவன்:
அவரை துவக்க வீரராக தேர்ந்தெடுத்துள்ள அஸ்வின் மற்றொரு துவக்க வீரராக விராட் கோலியை தேர்ந்தெடுத்துள்ளார். 2008 முதல் பெங்களூரு அணிக்காக மட்டுமே விளையாடி வரும் விராட் கோலி ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்துள்ள வீரராக சாதனை படைத்துள்ளார். அவரைத் தொடர்ந்து சின்ன தல என்று ரசிகர்கள் அழைக்கும் சுரேஷ் ரெய்னா அவருடைய அணியில் 3வது இடத்தில் தேர்வாகியுள்ளார்.
2019 வரை அதிக ரன்கள் குவித்த வீரராக சாதனை படைத்து சென்னை 4 கோப்பைகளை வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய ரெய்னா மிஸ்டர் ஐபிஎல் என்று அழைக்கப்படுகிறார். அதைத்தொடர்ந்து நான்காவது இடத்தில் இந்தியாவின் 360 டிகிரி பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவையும் ஐந்தாவது இடத்தில் ஒரிஜினல் 360 டிகிரி பேட்ஸ்மேன் ஏபி டீ வில்லியர்ஸ் ஆகியோர் அஸ்வின் அணியில் உள்ளனர் .
கனவு ஐபிஎல் அணி:
இந்த அணிக்கு கேப்டனாகவும் விக்கெட் கீப்பராகவும் மகத்தான எம்எஸ் தோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிஎஸ்கே அணிக்காக 5 கோப்பைகளை கேப்டனாக வென்றுள்ள தோனி ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த விக்கெட் கீப்பராகவும் சாதனை படைத்துள்ளார். அதைத்தொடர்ந்து சுனில் நரேன், ரசித் கான் ஆகிய மகத்தான ஸ்பின்னர்கள் அஸ்வின் அணியில் சுழல் பந்து வீச்சாளர்களாக தேர்வாகியுள்ளனர்.
இதையும் படிங்க: அண்டர்ரேட்டட் பிளேயர்.. ஷிகர் தவான் தான் இந்தியா அந்த கோப்பையை ஜெய்க்க காரணம்.. அஸ்வின் பாராட்டு
வேகப்பந்து வீச்சு துறையில் இந்தியாவின் யார்கர் கிங் பும்ரா, மும்பை அணிக்காக மிரட்டிய இலங்கையின் யார்கர் கிங் மலிங்கா, ஸ்விங் கிங் புவனேஸ்வர் குமார் ஆகியோரை அஸ்வின் தேர்ந்தெடுத்துள்ளார். அஸ்வின் ஆல் டைம் கனவு ஐபிஎல் அணி: ரோஹித் சர்மா, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, சூரியகுமார் யாதவ், ஏபி டீ வில்லியர்ஸ், எம்எஸ் தோனி (கேப்டன் – கீப்பர்), சுனில் நரேன், ரசித் கான், புவனேஸ்வர் குமார் லசித் மலிங்கா, ஜஸ்ப்ரித் பும்ரா



