வங்கதேசத்துக்கு எதிராக பாகிஸ்தான் தங்களுடைய சொந்த மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இருப்பினும் அத்தொடரின் முதல் போட்டியில் வங்கதேசத்திடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோற்றது. அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக வங்கதேசத்துக்கு எதிராக பாகிஸ்தான் அவமானத் தோல்வியை பதிவு செய்தது.
அத்துடன் வங்கதேசத்துக்கு எதிராக டிக்ளர் செய்த பின்பும் தோல்வியை சந்தித்த முதல் அணியாகவும் பாகிஸ்தான் மோசமான உலக சாதனை படைத்தது. இத்தனைக்கும் ராவில்பிண்டி மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் முதல் நாள் ஆட்டம் மழையால் பெருமளவு பாதிக்கப்பட்டது. அதன் பின் தார் ரோட் போல இருந்த பிட்ச்சில் விளையாடிய பாகிஸ்தான் 448-6 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
அஸ்வின் வியப்பு:
ஆனால் அடுத்ததாக பேட்டிங் செய்த வங்கதேசம் அதை விட அபாரமாக விளையாடி 565 ரன்கள் குவித்து போட்டியில் திருப்பு முனையை உண்டாக்கியது. அத்துடன் கடைசி நாளில் பாகிஸ்தானை 143 ரன்களுக்கு சுருட்டி வங்கதேசம் வரலாற்று வெற்றியை பெற்றது. மறுபுறம் ஜிம்பாப்வே, அமெரிக்கா போன்ற கத்துக்குட்டிகளிடம் சமீபத்தில் தோற்ற பாகிஸ்தான் தற்போது சொந்த மண்ணில் வங்கதேசத்திடம் பரிதாபமாக தோற்றது.
இந்நிலையில் தார் ரோட் போன்ற பிட்ச்சில் பாகிஸ்தான் இப்படி சரிந்து தோல்வியை சந்தித்தது தமக்கு ஆச்சரியமளிப்பதாக ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “அப்போட்டி முதல் 3 நாட்கள் தூக்கத்தை ஏற்படுத்தும் சூழ்நிலையில் இருந்தது. ஆனால் திடீரென நான் விமானத்தைச் சென்று பிடிப்பதற்குள் பாகிஸ்தான் எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது”
வரலாற்று தோல்வி:
“அந்தப் போட்டியின் ஹைலைட்டை பார்த்த போது எனக்கு ஒன்று புரிந்தது. இறுதி நாளில் பாகிஸ்தான் அணியில் சோர்வான சரிவு ஏற்பட்டது. இது போன்ற சரிவை நான் நீண்ட நாட்களாக பார்க்கவில்லை. அது போன்ற பிட்ச்சில் அணிகள் அப்படி சரண்டராகாது. முதல் தர கிரிக்கெட்டில் வலுவான அணிகள் முதலில் பேட்டிங் செய்து பெரிய ஸ்கோர் அடிக்கும். முதல் 2 நாட்களில் அதிக ரன்கள் குவித்து சோர்வடைவார்கள்”
இதையும் படிங்க: `தல தோனி தலைமையில் தனது தரமான ஆல் டைம் கனவு ஐபிஎல் அணியை தேர்ந்தெடுத்து அஸ்வின்
“அதனால் கடைசி சில நாட்களில் பிட்ச் சுழலும் போது அவர்கள் மீண்டும் ஆல் அவுட் ஆவார்கள். அது போன்ற உணர்வு தான் எனக்கு ஏற்பட்டது. ஏனெனில் அந்தப் பிட்ச்சில் ஒன்றுமே இல்லை. அது ரோட் போல இருந்தது. கடைசியில் ரிஸ்வான் கொஞ்சம் போராடினார். ஆனால் நாசீம் ஷா மோசமாக அவுட்டாகி சென்றார். அவர்கள் எதனால் தோற்றார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை” என்று கூறினார்.



