நியாயமா அஸ்வின், முரளிதரன், வால்ஷை தடை பண்ணிருக்கணும் – ஜாம்பவான்களை வம்பிழுக்கும் சயீத் அஜ்மல்

ajmal
- Advertisement -

சர்வதேச முதன்மை அணிகளில் ஒன்றாக திகழும் பாகிஸ்தான் பல தருணங்களில் இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற அணிகளுக்கு சவாலாக இருந்து 1992 உலககோப்பையை வென்ற பெருமைமிக்க நாடாகும். அதற்கு நிகராக சூதாட்ட புகாரில் சிக்கிய அந்நாட்டு வீரர்களில் முன்னாள் சுழல் பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் வித்யாசமாக விதிமுறைக்கு புறம்பாக பந்து வீசியதால் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தால் 2014ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டார். கடந்த 2008ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக அறிமுகமான அவர் ஒரு வருடத்திலேயே விதிமுறைகளுக்கு எதிராக பந்து வீசியதால் நடுவர்களின் புகாருக்கு உள்ளானார்.

இருப்பினும் அதில் முன்னேற்றத்தை கண்டு கடந்த 2009 டி20 உலக கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் 2011 – 2014 வரையிலான காலகட்டங்களில் உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்தி ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பவுலராகவும் ஜொலித்து வந்தார். அதே போல் டி20 கிரிக்கெட்டில் 2012 வாக்கில் நம்பர் ஒன் பவுலராக முன்னேறிய அவர் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் 2வது இடத்தைப் பிடித்து உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

- Advertisement -

வம்பிழுக்கும் அஜ்மல்:
ஆனால் 2014ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற தொடரில் மீண்டும் விதிமுறைக்கு எதிராக பந்து வீசியதாக புகார் எழுந்ததை தொடர்ந்து ஐசிசி அவருக்கு அதிரடியான தடை விதித்தது. அதனால் 2015 உலக கோப்பையில் இருந்து வெளியேறிய அவர் ஜாம்பவான் சக்லைன் முஷ்டக் மேற்பார்வையில் தன்னுடைய பந்து வீச்சில் மாற்றங்களை செய்து மீண்டும் 2016 வாக்கில் விளையாடி போதிலும் பழைய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. அதன் காரணமாக 2017இல் ஓய்வு பெற்ற அவர் சர்வதேச அளவில் மொத்தமாக 448 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

இந்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின், ஹர்பஜன் சிங் போன்ற பவுலர்களும் தம்மை போலவே விதிமுறைக்கு எதிராக பந்து வீசியும் இந்தியா அதிக வருமானத்தை பெற்றுக் கொடுக்கும் நாடாக இருப்பதால் ஐசிசி தடை விதிக்கவில்லை என சயீத் அஜ்மல் பரபரப்பான குற்றம் சாட்டியுள்ளார். அதை விட இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரன் தோள்பட்டை பிரச்சனையை கொண்டிருந்தும் விதிமுறைக்கு புறம்பாக பந்து வீசியதை ஐசிசி தடுக்கவில்லை என தெரிவிக்கும் அவர் கர்ட்ல்லி ஆம்ப்ரோஸ், கோர்ட்னி வால்ஷ் போன்ற ஜாம்பவான் வேகப்பந்து வீச்சாளர்களும் விதிமுறைகளுக்கு எதிராக பந்து வீசியதாக கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி பிரபல பாகிஸ்தான் யூடியூப் நிகழ்ச்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்த பவுலிங்கை பயன்படுத்திய 20 – 25 வீரர்களின் பெயர்களை என்னால் சொல்ல முடியும். அதில் 400 – 500 விக்கெட்களை எடுத்தவர்கள் கூட அந்த பட்டியலில் இருக்கிறார்கள். குறிப்பாக ரவிச்சந்திரன் அஸ்வின், ஹர்பஜன் சிங் ஆகியோருடன் முத்தையா முரளிதரனும் மருத்துவ காரணங்களால் அந்த வகையில் பந்து வீசினார். அதே போல அந்த காலத்தில் விளையாடிய கர்ட்டலி ஆம்ப்ரோஸ், கோர்ட்டினி வால்ஷ் போன்ற நிறைய வேகப்பந்து வீச்சாளர்களும் அந்த பட்டியலில் இருக்கின்றனர்”

“இந்த பவுலர்கள் பந்து வீசும் போது கைக்கு ஒரு ஜெர்க் கொடுக்கிறார்கள். அதனால் அவர்களுடைய பவுலிங் விதிமுறைக்கு எதிரானது. எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. என்னுடைய மணிக்கட்டு மற்றும் கை முழுவதுமாக சரியாக இல்லை. அதனால் 90 டிகிரி தோள்பட்டை வளைந்திருக்கும் ஒருவரால் தோள்பட்டையை வளைக்காமல் உயர்த்தி பந்து வீச முடியாது. அந்த மருத்துவ நிலையில் தான் நான் மீண்டும் பந்து வீச அனுமதிக்கப்பட்டேன். அதே வகையில் விளையாடி 448 சர்வதேச விக்கெட்டுகளை எடுத்த பின் அவர்கள் சயீத் அஜ்மல் பவுலிங் ஆக்சன் சரியாக இல்லை என்று அவர்கள் சொன்னார்கள்”

இதையும் படிங்க:2023 உ.கோ ஜெயிக்கிறமோ இல்லையோ ஆனா இந்தியா நாக் அவுட் போறது 100% உறுதி – கவாஸ்கர் அடித்துக்கூறும் காரணம் என்ன

“இதை பற்றி இலங்கையில் இருந்த நடுவரிடம் நான் கேட்டேன். அதற்கு அவர் மருத்துவ காரணங்களுக்காக உங்களுக்கு விலக்கு அளிக்க முடியாது என்ற கடிதத்தை என்னிடம் கொடுத்தார். ஆனால் அதே காரணத்தால் முத்தையா முரளிதரன் தொடர்ந்து விளையாடினாரே? என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள் இப்போது முரளிதரன் ஓய்வு பெற்று விட்டார் என்று சொன்னார்கள். குறிப்பாக முரளிதரன் ஓய்வு பெற்றதும் அந்த விதிமுறையை ஐசிசி நீக்கி விட்டார்கள்” என்று உலகின் ஜாம்பவான் வீரர்களை விமர்சிக்கும் வகையில் பேசினார்.

Advertisement