
தமிழ்நாடு பிரீமியர் லீக் 2024 டி20 கிரிக்கெட் தொடர் உச்சகட்டத்தை தொட்டுள்ளது. ஜூலை 28ஆம் தேதி திண்டுக்கல்லில் உள்ள என்பிஆர் காலேஜ் மைதானத்தில் கடைசி லீக் போட்டி நடைபெற்றது. அப்போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற நெல்லை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய திண்டுக்கல் தடுமாற்றமாக விளையாடி 19.4 ஓவரில் 136 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக சிவம் சிங் அதிரடியாக 70 (59) ரன்கள் எடுத்தார். நெல்லை சார்பில் அதிகபட்சமாக சோனு யாதவ் 2 விக்கெட்டுகள் சாய்த்தார். அதன் பின் 137 ரன்களை துரத்திய நெல்லைக்கு அதிகபட்சமாக அருண் கார்த்திக் 45 (30) கேப்டன் அஜித் குருசாமி 43 (39) ஹரிஷ் 22 (15) சோனு யாதவ் 15 (8) ரன்கள் எடுத்தனர்.
அஸ்வினுக்கே விபூதி:
அதனால் 17.5 ஓவரிலேயே 138/6 ரன்கள் எடுத்த நெல்லை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. அதனால் திண்டுக்கல் சார்பில் அதிகபட்சமாக கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. முன்னதாக அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணிக்கு கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் 15வது ஓவரில் எதிர்புறம் இருந்தார்.
அந்த ஓவரை வீசிய நெல்லையின் மோகன் பிரசாந்த் ஒரு பந்தில் பந்து வீசுவதை நிறுத்தி விட்டு ரவிச்சந்திரன் அஸ்வின் வெள்ளைக்கோட்டை விட்டு வெளியேற முயற்சித்ததற்காக மன்கட் செய்து விடுவேன் என்று எச்சரித்தார். அதைப் பார்த்த ரசிகர்கள் அஸ்வினுக்கே விபூதியா? என்று சமூக வலைதளங்களில் கலகலப்பை வெளிப்படுத்துகின்றனர். ஏனெனில் 2019 ஐபிஎல் தொடரில் ஜோஸ் பட்லரை மான்கட் முறையில் அவுட்டாக்கிய அஸ்வின் உலக அளவில் திட்டுக்களை வாங்கி கட்டிக்கொண்டார்.
ஆனால் விதிமுறைக்கு உட்பட்டே செயல்பட்டதாக தெரிவித்த அவர் அனைவரும் மன்கட் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். அத்துடன் தொடர்ந்து அதற்கு ஆதரவாக அஸ்வின் குரல் கொடுத்ததால் ஒரு கட்டத்தில் லண்டனின் எம்சிசி அமைப்பு மன்கட் அவுட்டை அதிகாரப்பூர்வ ரன் அவுட் பிரிவுக்கு மாற்றியது. அப்படிப்பட்ட அஸ்வினையே இப்போட்டியில் மன்கட் செய்து விடுவேன் என்று தமிழக வீரர் பிரசாந்த் எச்சரித்தது வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: தப்பா போட்டதும் சரியா வேலை செஞ்சுது.. இலங்கையை 2வது போட்டியில் வீழ்த்திய.. ஆட்டநாயகன் பிஸ்னோய் பேட்டி
இதைத்தொடர்ந்து 2024 டிஎன்பிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்று ஜூலை 30 ஆம் தேதி துவங்குகிறது. அதில் திண்டுக்கல்லில் நடைபெறும் குவாலிபயர் 1 போட்டியில் புள்ளிப்பட்டியலில் டாப் 2 இடங்களை பிடித்த நடப்பு சாம்பியன் கோவை மற்றும் திருப்பூர் அணிகள் மோதுகின்றன. அதன் பின் ஜூலை 31ஆம் தேதி நடைபெறும் எலிமினேட்டரில் 3, 4வது எங்களை பிடித்த சேப்பாக் சூப்பர் கில்லிஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன