இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 61-வது லீக் போட்டியானது நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.
அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் குவித்தது.
ராஜஸ்தான் அணி சார்பாக அதிகபட்சமாக ரியான் பராக் 47 ரன்களையும், துருவ் ஜுரேல் 28 ரன்களையும் குவித்தனர். பின்னர் 142 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய சென்னை அணியானது 18.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் குவித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் சென்னை அணி சார்பாக அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வார் 42 ரன்களையும், ரச்சின் ரவீந்திரா 27 ரன்களையும் குவித்தனர். இந்த போட்டியின் போது ராஜஸ்தான் அணி சார்பாக விளையாடிய தமிழக சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தினார்.
அந்தவகையில் நேற்றைய போட்டியில் முழுவதுமாக 4 ஓவர்களை வீசிய அவர் 35 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் அவர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற தனது சாதனையை தக்க வைத்துள்ளார்.
இதையும் படிங்க : அவரை கொல்கத்தா அணியிலிருந்து விட்டதற்காக இப்போவும் ஃபீல் பண்றேன்.. கெளதம் கம்பீர் வருத்தம்
அந்த வகையில் சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை அதிக விக்கெட் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையில் தற்போது 49 விக்கெட்டுகளுடன் அஸ்வின் முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்து பிராவோ 44 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.