IND vs AUS : ஜாம்பவான் ஜேக் காலிஸ் ஆல் டைம் சாதனையையும் உடைத்த அஷ்வின் – முரளிதரனை முந்த பிரகாச வாய்ப்பு

Ashwin Kallis
- Advertisement -

ஐசிசி தரவரிசையில் டாப் 2 அணிகளான ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா மோதி வந்த 2023 பார்டர் – கவாஸ்கர் கோப்பை விறுவிறுப்பான தருணங்களை ரசிகர்களுக்கு விருந்து படைத்து வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. அத்தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றிய இந்தியாவை ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் கொதித்தெழுந்து 3வது போட்டியில் தோற்கடித்த ஆஸ்திரேலியா நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்று அசத்தியது. அதனால் அகமதாபாத் நகரில் நடைபெற்ற கடைசி போட்டியில் வென்றால் தான் ஃபைனலுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலைமைக்கு இந்தியா தள்ளப்பட்டது.

ஆனால் பிளாட்டான அந்த பிட்ச்சில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 480 ரன்கள் குவிக்க அதற்கு 571 ரன்கள் விளாசிய இந்தியா தக்க பதிலடி கொடுப்பதற்குள் 4 நாட்கள் முடிந்து விட்டது. உஸ்மான் கவஜா 180, கேமரூன் கிரீன் 114, விராட் கோலி 186, சுப்மன் கில் 128 என இரு அணிகளைச் சேர்ந்த பேட்ஸ்மேன்களும் போட்டி போட்டுக் கொண்டு சதமடித்து அசத்தினார்கள். அதைத் தொடர்ந்து கடைசி நாளில் 91 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா டிராவிஸ் ஹெட் 90, மார்னஸ் லபுஸ்ஷேன் 60* என முக்கிய வீரர்களின் ரன் குவிப்பால் 175/2 ரன்கள் எடுத்திருந்த போது போட்டி ராவில் முடிந்தது.

- Advertisement -

அசத்தல் அஷ்வின்:
இருப்பினும் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் நியூசிலாந்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றதால் ஜூன் 7ஆம் தேதி லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் மீண்டும் ஆஸ்திரேலியாவுடன் பலப்பரீட்சை நடத்த இந்தியா தகுதி பெற்றது. மேலும் 2 – 1 (4) என்ற கணக்கில் இத்தொடரை வென்ற இந்தியா 2017, 2018/19, 2020/21, 2023* என 4 அடுத்தடுத்த பார்டர் – கவாஸ்கர் கோப்பைகளை வென்ற முதல் அணியாக சாதனை படைத்தது. இப்போட்டியின் ஆட்டநாயகனாக விராட் கோலி அறிவிக்கப்பட்ட நிலையில் தொடர் நாயகன் விருதை ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் ஜோடியாக தட்டிச் சென்றனர்.

அதில் ஜடேஜா 135 ரன்களும் 22 விக்கெட்டுகளும் ரவிச்சந்திரன் அஸ்வின் 86 ரன்களும் 25 விக்கெட்களும் எடுத்து ஆல்-ரவுண்டர்களாக அசத்தியதால் இந்த விருதுகளை ஒன்றாக வென்றனர். குறிப்பாக ஜடேஜாவை விட அகமதாபாத் மைதானத்தில் பிளாட்டான பிட்ச்சில் மொத்தம் 7 விக்கெட்களை எடுத்து அனைவரது பாராட்டுகளை பெற்ற ரவிச்சந்திரன் அஷ்வின் தன்னை நம்பர் ஒன் பவுலர் என்பதை நிரூபித்தார்.

- Advertisement -

அதை விட தம்மை சிறப்பாக எதிர்கொள்வதற்காக ஆரம்பத்திலேயே தம்மை போலவே பந்து வீசும் மகேஷ் பிதியா எனும் லோக்கல் ஸ்பின்னரை தேடிப் பிடித்து பயிற்சிகளை எடுத்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களின் திட்டங்களை தவிடு பொடியாக்கிய அவர் மார்னஸ் லபுஸ்ஷேன், ஸ்டீவ் ஸ்மித் ஆகிய உலகின் டாப் 2 பேட்ஸ்மன்களுக்கு இந்தத் தொடர் முழுவதும் சிம்ம சொப்பனமாக திகழ்ந்து நிறைய தருணங்களில் அவுட்டாக்கி தனது தரத்தை நிரூபித்தார்.

அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 450 விக்கெட்டுகள் எடுத்த இந்திய பவுலர், பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய பவுலர், இந்திய மண்ணில் அதிக முறை ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை எடுத்த இந்திய பவுலர் என இத்தொடரில் முன்னாள் ஜாம்பவான் அனில் கும்ப்ளேவின் நிறைய சாதனைகளையும் ரவிச்சந்திரன் அஷ்வின் தூளாக்கினார். அந்த வரிசையில் இத்தொடரின் நாயகன் விருதை வென்றுள்ள அவர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக தொடர் நாயகன் விருது வென்ற 2வது வீரர் என்ற தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஜேக் காலிஸ் ஆல் டைம் சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்துள்ளார்.

இதையும் படிங்க:வீடியோ : டிராவிஸ் ஹெட்டை சதமடிக்க விடாமல் போல்ட்டாக்கிய அக்சர் படேல் – பும்ராவின் தனித்துவ சாதனையை தகர்த்து புதிய சாதனை

குறிப்பாக காலிஸை விட 74 போட்டிகள் குறைவாக அவரது சாதனையை உடைத்துள்ள அஷ்வின் முதலிடத்தில் இருக்கும் முத்தையா முரளிதரனையும் ஓய்வு பெறுவதற்குள் முந்தி வரலாற்று சிறப்புமிக்க உலக சாதனை படைக்க அதிக வாய்ப்புள்ளது. அந்த பட்டியல்:
1. முத்தையா முரளிதரன் : 11 விருதுகள் (133 போட்டிகள், 61 தொடர்கள்)
2. ரவிச்சந்திரன் அஸ்வின் : 10* விருதுகள் (92 போட்டிகள், 37 தொடர்கள்)
3. ஜேக் காலிஸ் : 9 விருதுகள் (166 போட்டிகள், 61 தொடர்கள்)

Advertisement