IND vs AUS : ஃபிளாட்டான பிட்ச்சிலும் தரத்தை காட்டி இந்தியாவை காப்பாற்றிய அஷ்வின், கும்ப்ளேவை மிஞ்சி 3 புதிய வரலாற்று சாதனை

Ashwin-and-Kumble
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியது. ஆனால் இந்தூரில் நடைபெற்ற 3வது போட்டியில் ஆஸ்திரேலியா வென்றதால் பெரிய பின்னடைவை சந்தித்த இந்தியா மார்ச் 9ஆம் தேதியன்று அகமதாபாத் நகரில் துவங்கிய கடைசி போட்டியில் வென்றால் மட்டுமே 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலைமையில் களமிறங்கியுள்ளது.

ஆனால் இத்தொடரில் முதல் முறையாக ஃபிளாட்டாக அமைக்கப்பட்டுள்ள அகமதாபாத் பிட்ச்சில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. அந்த அணிக்கு உஸ்மான் கவாஜாவுடன் சேர்ந்து 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த டிராவிஸ் ஹெட்டை 32 ரன்களில் ரவிச்சந்திரன் அஸ்வின் அவுட்டாக்கிய நிலையில் மார்னஸ் லபுஸ்ஷேன் 3, கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 38 என உலகின் டாப் 2 பேட்ஸ்மேன்களை முகமது ஷமி மற்றும் ரவீந்திர ஜடேஜா குறைவான ரன்களில் அவுட்டாக்கினர்.

- Advertisement -

பிளாட்டான பிட்ச்சிலும்:
அடுத்து வந்த பீட்டர் ஹேண்ட்ஸ்கோப் 17 ரன்களில் மீண்டும் முகமது சமியின் வேகத்தில் அவுட்டானாலும் மறுபுறம் நங்கூரமாக நின்ற உஸ்மான் கவஜா சதமடித்து இந்தியாவுக்கு தொல்லை கொடுத்தார். அவருடன் தனது பங்கிற்கு சிறப்பாக பேட்டிங் செய்த கேமரூன் கிரீன் தன்னுடைய முதல் சதமடித்து 5வது விக்கெட்டுக்கு 208 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து மிரட்டினார். அப்போது அவரை 114 ரன்களில் அவுட்டாக்கி பார்ட்னர்ஷிப்பை உடைத்த அஷ்வின் அடுத்து வந்த அலெக்ஸ் கேரியை டக் அவுட்டாக்கி மிட்சேல் ஸ்டார்க்கை 6 ரன்களுடன் பெவிலியனுக்கு அனுப்பி வைத்து இந்தியாவை முன்னிலைப்படுத்தினார்.

ஆனாலும் மறுபுறம் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து இந்தியாவுக்கு பெரிய சவாலாக மாறிய உஸ்மான் கவஜா 21 பவுண்டரியுடன் 180 (422) ரன்கள் குவித்து ஒரு வழியாக அக்சர் பட்டேலிடம் அவுட்டாகி சென்றார். இறுதியில் 8வது விக்கெட்டுக்கு 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மீண்டும் இந்தியாவுக்கு பெரிய தொல்லை கொடுத்த நேதன் லயனை 34 ரன்களிலும் முர்பியை 41 ரன்களிலும் அஷ்வின் அவுட்டாக்கினார். இருப்பினும் முதல் இன்னிங்ஸில் 480 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா இப்போட்டியில் வலுவான தொடக்கத்தை பெற்றுள்ளது.

- Advertisement -

அதை தொடர்ந்து பேட்டிங் செய்து வரும் இந்தியா 2வது நாள் முடிவில் 36/0 ரன்கள் எடுத்துள்ளது. ஆனாலும் டெய்ல் எண்டர்கள் 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்கும் அளவுக்கு ஃபிளாட்டாக இருந்த பிட்ச்சில் 500 ரன்கள் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலியாவை 480 ரன்களுக்கு கட்டுப்படுத்த உதவிய ரவிச்சந்திரன் அஷ்வின் 46.2 ஓவர்கள் வீசி 91 ரன்களை 1.92 என்ற எக்கனாமியில் கொடுத்து 6 விக்கெட்களை சாய்த்து அசத்தினார்.

ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட இதர பவுலர்கள் தடுமாறிய போதும் ஆரம்பம் முதலே தனது திறமையை வெளிப்படுத்தி மிகச்சிறப்பாக செயல்பட்டு இந்தியாவை ஓரளவு காப்பாற்றிய அஸ்வின் தன்னை நம்பர் ஒன் பவுலர் என்பதற்கு நிகராக செயல்பட்டு அசத்தியுள்ளது தமிழக ரசிகர்களை பெருமையடைய வைக்கிறது.

- Advertisement -

1. அதை விட இந்த 6 விக்கெட்டுகளையும் சேர்த்து பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் அதிக விக்கெட்களை எடுத்த இந்திய வீரர் என்ற அனில் கும்ப்ளேவின் சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்துள்ள அஷ்வின் ஒட்டுமொத்த பட்டியலில் நேதன் லயன் சாதனையை சமன் செய்துள்ளார். அந்த பட்டியல்:
1. ரவிச்சந்திரன் அஷ்வின் : 113* விக்கெட்கள் (41 இன்னிங்ஸ்)
2. நேதன் லயன் : 113 விக்கெட்கள் (47 இன்னிங்ஸ்)
3. அனில் கும்ப்ளே : 111 விக்கெட்கள் (38 இன்னிங்ஸ்)
4. ஹர்பஜன் சிங் : 95 விக்கெட்கள் (35 இன்னிங்ஸ்)

2. அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக விக்கெட்களை எடுத்த இந்திய வீரர் என்ற அனில் கும்ப்ளேவின் சாதனையையும் தகர்த்துள்ள அஸ்வின் புதிய வரலாறு படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ரவிச்சந்திரன் அஷ்வின் : 113*, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக
2. அனில் கும்ப்ளே : 111, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக
3. கபில் தேவ் : 99, பாகிஸ்தானுக்கு எதிராக

இதையும் படிங்க:இந்திய அணியில் கேஎல் ராகுல் இடத்தில் விளையாட தகுதியுடைய 4 விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள்

3. அது போக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய மண்ணில் அதிக முறை ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை எடுத்த பவுலர் என்ற வரலாற்றுச் சாதனையும் அஸ்வின் படைத்துள்ளார். இந்த 6 விக்கெட்டுகளையும் சேர்த்து இதுவரை அவர் இந்திய மண்ணில் 26 இன்னிங்ஸில் 5க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதற்கு முன் அனில் கும்ப்ளே 25 இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் எடுத்திருந்ததே முந்தைய சாதனையாகும்.

Advertisement