ஐ.பி.எல் வரலாற்றில் முதல்முறை வித்தியாசமான முடிவை எடுத்து வெளியேறிய அஷ்வின் – இதை கவனிச்சீங்களா?

Ravi Ashwin RR
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் ஏப்ரல் 10-ஆம் தேதியான நேற்று நடைபெற்ற 20-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பை வான்கடே மைதானத்தில் பரபரப்பாக நடந்த அந்த போட்டியில் லக்னோவை தோற்கடித்த ராஜஸ்தான் வெறும் 3 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது. அந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 165/6 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் சிம்ரோன் ஹெட்மையர் 36 பந்துகளில் 1 பவுண்டரி மற்றும் 6 மெகா சிக்ஸர்கள் உட்பட 59* ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் நல்ல பினிஷிங் கொடுத்தார்.

லக்னோ சார்பில் பந்துவீச்சில் அசத்திய கிருஷ்ணப்பா கெளதம் மற்றும் ஜேசன் ஹோல்டர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதை தொடர்ந்து 166 என்ற இலக்கைத் துரத்திய லக்னோவுக்கு தொடக்க வீரர் கேப்டன் கேஎல் ராகுல் நியூசிலாந்து வீரர் ட்ரெண்ட் போல்ட் வீசிய முதல் பந்திலேயே கிளீன் போல்டானார். அவரின் அடுத்த பந்திலேயே அடுத்ததாக களமிறங்கிய கிருஷ்ணப்பா கவுதமும் கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

- Advertisement -

ராஜஸ்தான் திரில் வெற்றி:
அதனால் 1/2 என திண்டாட்ட தொடக்கத்தை பெற்ற லக்னோவுக்கு அடுத்து களமிறங்கிய ஜேசன் ஹோல்டர் 8 (14) ரன்களில் அவுட்டாகி மேலும் அதிர்ச்சி அளித்தார். இதனால் 14/3 என சரிந்த லக்னோவை அடுத்து களமிறங்கிய தீபக் ஹூடா 25 (24) ரன்கள் எடுத்து ஓரளவு காப்பாற்றி அவுட்டாக அடுத்து வந்த இளம் வீரர் ஆயுஷ் படோனியும் 5 (7) ரன்களில் நடையை கட்டினார். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அதிரடியாக பேட்டிங் செய்த மற்றொரு தொடக்க வீரர் குயின்டன் டி காக் 39 (32) ரன்கள் எடுத்து முக்கியமான நேரத்தில் ஆட்டமிழந்தார்.

இதனால் 101/6 என தடுமாறிய லக்னோவின் தோல்வி உறுதி என எதிர்பார்த்த நிலையில் கடைசி நேரத்தில் களமிறங்கிய க்ருனால் பாண்டியா அதிரடியாக தன் பங்கிற்கு 22 (15) ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஆனால் அவருடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஸ்டோனிஸ் அதிரடியாக சிக்ஸர்களை பறக்க விட்டதால் திடீரென போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.

- Advertisement -

த்ரில் வெற்றி:
இறுதியில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்ட போது அதை முதல் முறையாக ஐபிஎல் தொடரில் அறிமுகப் போட்டியில் விளையாடிய இளம் ராஜஸ்தான் வீரர் குல்தீப் சென் வீச அதை ஆஸ்திரேலிய அதிரடி வீரர் மார்க்கஸ் ஸ்டோனிஸ் எதிர்கொண்டார். அதில் முதல் பந்தை சந்தித்த அவேஷ் கான் சிங்கிள் எடுக்க அடுத்த பந்துகளை சந்தித்த ஸ்டோனிஸ்க்கு எதிராக அற்புதமாக பந்துவீசிய அவர் அடுத்த 3 பந்துகளில் ரன் எதுவும் கொடுக்காமல் அசத்தினார்.

இருப்பினும் 5-வது பந்தில் பவுண்டரி பறக்கவிட்ட ஸ்டோனிஸ் கடைசி பந்தில் சிக்ஸர் பறக்க விட்ட போதிலும் தனது அணியை வெற்றிபெற வைக்க முடியாததால் அவரின் 38* (17) ரன்கள் போராட்டம் வீணானது. இந்த வெற்றியால் பங்கேற்ற 4 போட்டிகளில் 3-வது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தியது.

- Advertisement -

திரும்பி பார்க்க வைத்த அஷ்வின்:
முன்னதாக இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 10 ஓவர்களில் 67/4 என தடுமாறி நின்ற போது தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் களமிறங்கினார். ஒருபுறம் அதிரடி காட்டிய சிம்ரோன் ஹெட்மையர் உடன் ஜோடி சேர்ந்த அவர் தன் பங்கிற்கு அதிரடியாக 2 சிக்சர்கள் உட்பட 23 பந்துகளில் விலைமதிப்பில்லா 28 ரன்கள் எடுத்திருந்த போது அவர் எடுத்த முடிவு இந்த உலகையே திரும்பிப் பார்க்கவைத்தது.

ஏனெனில் அந்த சமயத்தில் 18.2 ஓவர்களில் 135/5 என ஓரளவு நல்ல ஸ்கோரை எட்டிய ராஜஸ்தானை மேலும் வலுப்படுத்த நினைத்த அவர் யாருமே எதிர்பாராத வண்ணம் அடுத்த வீரருக்கு வழிவிடும் வகையில் ரிட்டயர்டு அவுட்டாகி சென்றார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய ரியான் பராக் அதிரடியாக 8 (4) ரன்கள் எடுத்தார். மொத்தத்தில் அணியின் நலனுக்காக சுயநலமில்லாமல் பெவிலியனுக்கு திரும்பிய ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்கள் மற்றும் ஜாம்பவான்களிடமிருந்து பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.

- Advertisement -

ஏனென்றால் டி20 போட்டிகளில் அதுபோன்ற கடைசிகட்ட தருணங்களில் கடைசி வரை நின்று அடிக்கலாம் என்ற எண்ணத்தில் பெரும்பாலான வீரர்கள் அடம் பிடிப்பார்கள். அதிலும் கடந்த 2020-ஆம் ஆண்டு சென்னை அணிக்காக விளையாடிய கேதார் ஜாதவ் இது போன்ற தருணங்களில் செய்த லீலைகளை ரசிகர்கள் மறக்கவே மாட்டார்கள்.

இதையும் படிங்க : 2015 மாதிரி மீண்டும் மேஜிக் நடக்கும்னு கனவு காண வேண்டாம், ஒர்த் இல்ல – மும்பை ரசிகர்களை எச்சரித்த முன்னாள் வீரர்

அப்படிப்பட்ட நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் இது போன்ற ஒரு அற்புதமான முடிவு எடுத்து தமிழன் என்றால் சுயநலம் இல்லாதவன் என்ற கூற்றை இந்த உலகிற்கு நிரூபித்து தமிழக ரசிகர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார் என்பதில் சந்தேகமே இல்லை. அத்துடன் இதன் வாயிலாக “ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ரிட்டயர்டு அவுட் முறையில் அவுட்டான முதல் வீரர்” என்ற காலத்திற்கும் பெருமைப்படக் கூடிய வித்தியாசமான சாதனையையும் ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்துள்ளார்.

Advertisement