மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் மும்பை நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் இதுவரை பங்கேற்ற 4 போட்டிகளிலும் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து புள்ளிப் பட்டியலில் 9-வது இடத்தில் திண்டாடி வருகிறது. இந்த வருட ஐபிஎல் பயணத்தை டெல்லிக்கு எதிராக துவங்கிய மும்பை அதன்பின் ராஜஸ்தான், கொல்கத்தா ஆகிய அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்த தோல்வியை சந்தித்து ஹாட்ரிக் தோல்விகளை பதிவு செய்தது.

அந்த நிலையில் ஏப்ரல் 9-ஆம் தேதியான நேற்று பெங்களூருவுக்கு எதிராக நடந்த 4-வது போட்டியில் 50/0 என அற்புதமாக தொடங்கிய மும்பை அடுத்த ஒரு சில ஓவர்களில் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து 62/5 என திண்டாடிய போது தனி ஒருவனாக தாங்கிய சூர்யகுமார் யாதவ் அதிரடியாக 68* ரன்கள் குவித்து மானத்தை காப்பாற்றினார். அதன்பின் 152 என்ற இலக்கை துரத்திய பெங்களூருவுக்கு எதிராக பந்து வீச்சிலும் சுமாராக செயல்பட்ட அந்த அணி 4-வது வெற்றியை பதிவு செய்தது அந்த அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது.
மீண்டெழுமா மும்பை:
இப்படி அடுத்தடுத்த தோல்விகளால் தடுமாறி நிற்கும் மும்பை இதிலிருந்து மீண்டு தொடர் வெற்றிகளுடன் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுமா என்ற எதிர்பார்ப்பு அந்த அணி ரசிகர்களிடம் காணப்படுகிறது. ஏனெனில் கடந்த 2013-ஆம் ஆண்டு ரோகித் சர்மா தலைமையில் முதன்முறையாக களமிறங்கிய மும்பை ஒவ்வொரு வருடமும் இதே போல ஆரம்பத்தில் சொதப்பி மோசமான தொடக்கத்தை பெற்றாலும் அதற்கு அசராமல் அதிலிருந்து மீண்டெழுந்து அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்த ஒரு அணியாகவே இருந்து வருகிறது.

அதிலும் 2013 – 2020 வரையிலான காலகட்டங்களில் இதே போல் ஆரம்பத்தில் தடுமாறினாலும் அதன் பின் அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்த அணி 5 கோப்பைகளை வென்று ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான அணியாக சாதனை படைத்துள்ளது. இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில் கடந்த 2015-ஆம் ஆண்டு இதேபோல முதல் 4 போட்டிகளில் தோல்வி அடைந்த அந்த அணி அதன்பின் நடந்த 10 போட்டிகளில் தொடர்ச்சியாக 8 வெற்றிகளை பதிவு செய்து புள்ளிப் பட்டியலில் 4-வது இடத்தைப் பிடித்து ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது மட்டுமல்லாமல் சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதனை படைத்தது. எனவே அதேபோல் ஒரு மேஜிக் நிகழ்த்தி மீண்டும் நிச்சயமாக மும்பை கோப்பையை முத்தமிடும் என அந்த அணி ரசிகர்கள் நம்புகின்றனர்.
இம்முறை கடினம்:
ஆனால் இந்த வருடம் அது போன்றதொரு எழுச்சி மும்பையிடம் பார்ப்பது கடினம் என்று முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் கணித்துள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இது போன்ற கடினமான தருணங்களில் இருந்து மீண்டெழுவது எப்படி என மும்பைக்கு நன்றாக தெரியும். கடந்த 2014, 2015 போன்ற தருணங்களில் இதேபோல தவித்த அந்த அணி மீண்டு வந்துள்ளது. அதிலும் 2015-ஆம் ஆண்டு இதே போன்ற சூழ்நிலையில் தவித்தாலும் அதன்பின் எழுச்சி கண்டு கோப்பையை வென்றது. ஆனால் அந்த மும்பை அணி சற்று வித்தியாசமாக இருந்தது”

“அபாரமாக செயல்படும் இளம் வீரர் திலக் வருமா, காயத்திலிருந்து குணமடைந்தது சக்கை போடு போடும் சூரியகுமார் யாதவ், டாப் ஆர்டரில் அனல் தெறிக்கும் பேட்டிங்கை வெளிப்படுத்த இசான் கிசான் ஆகியோரால் மும்பை பேட்டிங் இப்போதும் ஓரளவு நன்றாக உள்ளது. அதேபோல் இந்த தொடரில் வரும் போட்டிகளில் கைரன் பொல்லார்ட் மற்றும் ரோகித் சர்மா ஆகியோரும் கண்டிப்பாக ரன்கள் அடிப்பார்கள். ஆனால் அவர்களின் பந்துவீச்சு மிகவும் பலவீனமாக உள்ளது. குறிப்பாக வேகப்பந்து வீச்சு மோசமாக உள்ளது. பும்ராவுக்கு துணையாக யாரும் இல்லை” என கூறினார்.
அணியில் தரமில்லை:
அவர் கூறுவது போல இதற்கு முன் இதுபோன்ற தருணங்களில் இருந்து மும்பை மீண்டெழுந்து கோப்பையை வென்றது என்றாலும் அப்போது இருந்த மும்பை அணி இப்போது இல்லை. இர்பான் பதான் கூறுவது போல அந்த அணியின் பேட்டிங் ஓரளவு சிறப்பாக இருந்தாலும் பந்துவீச்சு படுமோசமாக உள்ளது. அதிலும் குறிப்பாக வேகப்பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு துணையாக தரமான வேகப்பந்துவீச்சாளர் இல்லாததால் அவர் மட்டும் தனியாளாக போராடி வருகிறார். ஆனால் கடந்த வருடம் வரை அவருக்கு துணையாக ட்ரெண்ட் போல்ட், ஹர்டிக் பாண்டியா போன்றவர்கள் இருந்தனர்.

ஆனால் இந்த வருடம் அந்த இடத்தில் ஒரே ஓவரில் 35 ரன்களை வாரி வழங்கி வெற்றியை எதிரணியிடம் கோட்டைவிட்ட டேனியல் சாம்ஸ், பாசில் தம்பி போன்ற ரன்களை வாரி வழங்கும் வள்ளல்கள் தான் இருக்கின்றனர். அதேபோல் சுழல்பந்து வீச்சில் தமிழக வீரர் முருகன் அஸ்வினுக்கு ஜோடியாக மற்றொரு தரமான சுழல்பந்து வீச்சாளர் இல்லை. இதுபற்றி இர்பான் பதான் மேலும் பேசியதாவது :
இதையும் படிங்க : ஆரம்பத்திலேயே தோனி தப்பு பண்ணிட்டாரு! சென்னையின் தொடர் தோல்விக்கான காரணத்தை உடைக்கும் ஜாம்பவான்
“மகாராஷ்டிராவில் உள்ள மைதானங்கள் பொதுவாகவே வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். எனவே வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டால் முருகன் அஸ்வினால் சிறப்பாக பந்து வீச முடியும்” என கூறினார்.



