ஆரம்பத்திலேயே தோனி தப்பு பண்ணிட்டாரு! சென்னையின் தொடர் தோல்விக்கான காரணத்தை உடைக்கும் ஜாம்பவான்

Faf
- Advertisement -

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடரில் நடப்பு சாம்பியனாக விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை பங்கேற்ற 4 போட்டிகளிலும் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்துள்ளது. மார்ச் 9-ஆம் தேதியன்று ஹைதராபாத்துக்கு எதிராக நடந்த 4-வது போட்டியிலும் மண்ணைக்கவ்விய சென்னை வரலாற்றிலேயே முதல் முறையாக தனது முதல் 4 போட்டிகளில் தோல்வியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் கடைசி இடமான 10-வது இடத்தில் அதலபாதாளத்தில் திண்டாடுகிறது.

CSK vs SRH 3

கேப்டன்ஷிப் தவறு:
இந்த அடுத்தடுத்த தோல்விகளுக்கு அந்த அணியின் கேப்டன்ஷிப் கைமாறியது தான் காரணம் என பலரும் பேசி வருகின்றனர். ஏனெனில் ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008 முதல் அந்த அணியை தொடர்ந்து வழி நடத்தி வந்த முன்னாள் இந்திய கேப்டன் எம்எஸ் தோனி ஒவ்வொரு வருடமும் தனது அபார கேப்டன்ஷிப் வாயிலாக நிறைய வெற்றிகளை வாங்கி கொடுத்தார். அந்த வகையில் மொத்தம் 12 தொடர்களில் கேப்டன்ஷிப் செய்த அவர் 11 முறை பிளே ஆப் சுற்றுக்கு அழைத்து சென்று 9 சீசன்களில் இறுதிப்போட்டியில் விளையாட வைத்து 4 கோப்பைகளை பெற்றுக் கொடுத்து 2-வது வெற்றிகரமான ஐபிஎல் அணியாக சென்னையை மாற்றியுள்ளார்.

- Advertisement -

அப்படிப்பட்ட அவர் 40 வயதை கடந்த காரணத்தால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு கேப்டன்சிப் பொறுப்பை மற்றொரு நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்து அவர் தலைமையில் சாதாரண வீரராக விளையாடி வருகிறார். ஆனால் இந்த வருடம் ஐபிஎல் துவங்குவதற்கு ஒருசில நாட்கள் முன்பாக அவர் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியது தான் அனைவருக்கும் அதிர்ச்சியாக அமைந்தது. ஏனெனில் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ஜடேஜா இதற்கு முன் உள்ளூர் போட்டிகளில் கூட கேப்டன்ஷிப் செய்த அனுபவம் கிடையாது. கடைசியாக கடந்த 2007-ஆம் ஆண்டுதான் அதுவும் அண்டர்-19 அணிக்கு கேப்டனாக செயல்பட்டிருந்தார்.

Jadeja

தோனியின் தவறு:
அப்படிப்பட்ட நிலையில் அவருக்கு உதவியாக எம்எஸ் தோனி இருந்தபோதிலும் அது சென்னையின் வெற்றிக்கு இதுவரை பங்காற்ற வில்லை. இந்நிலையில் சென்னையின் தோல்விகளுக்கு தொடர் காரணம் புதிய கேப்டனை பற்றி தோனி எடுத்த முடிவுதான் என்று முன்னாள் இந்திய ஜாம்பவான் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு.”ஜடேஜா போன்ற ஒருவர் எப்போதும் தனது போட்டியில் கவனம் செலுத்த வேண்டும். கேப்டன் பொறுப்பை மாற்றுவதை பற்றி சென்னை சிந்தித்திருந்தால் பப் டு பிளேசிசை அவர்கள் வெளியே விட்டுருக்கக் கூடாது.

- Advertisement -

மேலும் கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி விலகலாம் என்று நினைத்திருந்தால் அடுத்ததாக அந்த பொறுப்பை செய்வதற்கு டு பிளசிஸ் தான் சரியானவர். மறுபுறம் ஜடேஜா ஒரு சாதாரண வீரராக விளையாடி இருக்க வேண்டும். ஏனெனில் அப்போது தான் அவரால் கேப்டன்ஷிப் அழுத்தம் இல்லாமல் சுதந்திரமாக விளையாடி இருக்க முடியும். அதுபோல அழுத்தம் இல்லாமல் அவர் விளையாடி இருந்தால் இந்நேரம் சென்னையின் நிலைமை வேறுமாதிரி இருந்திருக்கும்” என தெரிவித்தார்.

Shastri

அதாவது 40 வயதை கடந்த தோனி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகலாம் என நினைத்திருந்தால் அந்த பொறுப்பை டு பிளேசிஸ் போன்ற ஏற்கனவே கேப்டன்ஷிப் அனுபவம் நிறைந்தவரிடம் ஒப்படைத்திருக்க வேண்டும் எனக் கூறிய ரவிசாஸ்திரி இந்த விஷயத்தில் எம்எஸ் தோனி ஆரம்பத்திலேயே தவறு செய்து விட்டதாக தெரிவித்தார். அவரின் தவறு காரணமாக தற்போது ரவீந்திர ஜடேஜா சுதந்திரமாக விளையாட முடியாமல் தவிக்கிறார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

அவர் கூறுவது போல கடந்த சில வருடங்களில் எம்எஸ் தோனி பேட்டிங்கில் தடுமாறிய போது அவரின் இடத்தில் களமிறங்கி பட்டையை கிளப்பிய ரவீந்திர ஜடேஜா சென்னையின் புதிய பினிஷராக உருவெடுத்தார். ஆனால் தற்போது கேப்டன்ஷிப் பொறுப்பேற்றுள்ள அவர் அதில் கவனம் செலுத்துவதால் பேட்டிங்கில் ரன்கள் அடிக்க முடியாமல் திணறி வருகிறார். அத்துடன் கடந்த 2012 முதல் சென்னை அணிக்காக விளையாடி ரன் மழை பொழிந்த டுப்லஸ்ஸிஸ் கடந்த வருடம் கூட 633 ரன்கள் குவித்து 4-வது முறையாக சென்னை கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார்.

மேலும் ஐபிஎல் தொடரில் கேப்டனாக செயல்படவில்லை என்றாலும் தென்ஆப்பிரிக்காவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் 3 வகையான கேப்டன்ஷிப் செய்த அற்புதமான அனுபவம் கொண்டவர். எனவே தீபக் சஹர் போன்ற ஒருவருக்கு 14 கோடிகளை செலவழித்ததற்கு பதிலாக அதே தொகையை டு பிளேசிஸ்க்கு செலவழித்து கேப்டனாக நியமித்திருந்தால் இந்நேரம் ஜடேஜாவும் சுதந்திரமாக விளையாடியிருப்பார் சென்னையும் வெற்றி நடைபோடும் என ரவிசாஸ்திரி உண்மையை பேசினார்.

இதையும் படிங்க : ஐ அம் பேக்! என்னையா வேணான்னு சொன்னீங்க? கொல்கத்தாவை பழிதீர்த்த இளம்வீரர் – குவியும் வாழ்த்துக்கள்

அதற்கேற்றார்போல் சென்னை கோட்டை விட்ட டு பிளேசிஸ் தற்போது பெங்களூருவுக்கு கேப்டனாக செயல்பட்டு இதுவரை பங்கேற்ற 4 போட்டிகளில் 3 வெற்றிகளை பதிவு செய்து அந்த அணியை வெற்றி நடை போட வைத்துள்ளார். இதிலிருந்தே எப்போதும் சரியான முடிவுகளை எடுக்கக்கூடிய நபராக கருதப்படும் எம்எஸ் தோனி சென்னை கேப்டன்ஷிப் விஷயத்தில் தவறு செய்துள்ளது தெளிவாக தெரியவருகிறது.

Advertisement