ஐ அம் பேக்! என்னையா வேணான்னு சொன்னீங்க? கொல்கத்தாவை பழிதீர்த்த இளம்வீரர் – குவியும் வாழ்த்துக்கள்

KKR vs DC
- Advertisement -

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடரில் மார்ச் 10-ஆம் தேதி 2 போட்டிகள் நடைபெற்ற நிலையில் மதியம் 3.30 மணிக்கு நடைபெற்ற 19-ஆவது லீக் போட்டியில் டெல்லி மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ப்ராபோர்ன் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய டெல்லிக்கு தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் ப்ரீத்திவி ஷா ஆகியோர் பவர் பிளே ஓவர்களில் பட்டாசாக விளையாடினர். முதல் ஓவரிலிஇருந்தே கொல்கத்தா பவுலர்களை பிரித்து மேய்ந்த இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 93ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆரம்பத்திலேயே டெல்லியை முன்னிலைப் படுத்தியது.

David Warner Prithivi Shaw

- Advertisement -

இந்த ஜோடியில் பிரிதிவி ஷா 29 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட அரைசதம் கடந்து 51 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த கேப்டன் ரிஷப் பண்ட் தனது பங்கிற்கு வெறும் 14 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 27 ரன்களை தெறிக்கவிட்டு ஆட்டமிழந்தார். இருப்பினும் அடுத்து வந்த லலித் யாதவ் 1 (4) மற்றும் ரோவ்மன் போவல் 8 (6) என அடுத்தடுத்து ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அசத்திய வார்னர்:
ஆனாலும் மறுபுறம் தொடர்ந்து அதிரடி காட்டிக்கொண்டிருந்த டேவிட் வார்னர் 45 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட அரைசதம் கடந்து 61 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். அப்போது 166/5 என்ற ஸ்கோரை பெற்ற டெல்லிக்கு கடைசி நேரத்தில் களமிறங்கிய ஆல்-ரவுண்டர்கள் அக்ஷர் பட்டேல் மற்றும் ஷார்துல் தாகூர் ஆகியோர் இணைந்து 49* ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் அதிரடியான பினிஷிங் கொடுத்தனர்.

இதில் அக்சர் படேல் 14 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் உட்பட 22* ரன்களும் ஷர்டுல் தாகூர் 11 பந்துகளில் 1 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் உட்பட 29* ரன்களும் எடுக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 215/5 என்ற மிகப்பெரிய ஸ்கோரை டெல்லி எட்டியது. கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக சுனில் நரைன் 2 விக்கெட்டுகளை சாய்த்தார். அதை தொடர்ந்து 216 என்ற மெகா இலக்கை துரத்திய கொல்கத்தாவுக்கு தொடக்க வீரர் வெங்கடேஷ் ஐயர் 18 (8) ரன்களிலும் அஜிங்கிய ரஹானே 8 (8) ரன்களிலும் அவுட்டாகி ஏமாற்றம் அளித்ததால் 38/2 என ஆரம்பத்திலேயே அந்த அணி தடுமாறியது.

- Advertisement -

போராடிய ஷ்ரேயஸ், டெல்லி வெற்றி:
அந்த இக்கட்டான சூழ்நிலையில் களமிறங்கிய கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் சக வீரர் நிதிஷ் ராணாவுடன் இணைந்து 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தனது அணியை ஓரளவு மீட்டெடுத்தார். இதில் நிதிஷ் ராணா 30 (20) ரன்களில் ஆட்டமிழக்க அவருடன் விளையாடிய ஸ்ரேயாஸ் அய்யர் 33 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட அரைசதம் அடித்து 54 ரன்களில் அவுட்டானார். அதனால் 117/4 என தடுமாறிய கொல்கத்தாவை அதிரடியாக விளையாடி வெற்றி பெற வைப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி வீரர் ஆண்ட்ரே ரசல் 24 (21) ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

இதனால் கொல்கத்தாவின் தோல்வி ஏறத்தாழ உறுதியான நிலையில் சாம் பில்லிங்ஸ் 15 (9) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த வீரர்களை டெல்லி பவுலர்கள் அடுத்தடுத்து ஒற்றை இலக்க ரன்களில் அவுட் செய்ததால் 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த கொல்கத்தா வெறும் 171 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் காரணமாக 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற டெல்லி தனது கடைசி 2 போட்டிகளில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வந்த நிலையில் இந்த வருடத்தின் 2-வது வெற்றியை பதிவு செய்து புள்ளிப் பட்டியலில் 4 புள்ளிகளுடன் 6-வது இடத்திற்கு முன்னேறி நிம்மதி அடைந்தது.

- Advertisement -

அஜித் ஸ்டைலில் குல்தீப் யாதவ்:
இந்த சிறப்பான வெற்றிக்கு டெல்லி சார்பில் அபாரமாக பந்துவீசி அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை சாய்த்த குல்தீப் யாதவ் ஆட்டநாயகன் விருதை வென்று பலரின் பாராட்டுக்களை பெற்றுள்ளார். ஏனெனில் 2019-ஆம் ஆண்டு வாக்கில் அற்புதமாக பந்துவீசிய அவர் இந்தியாவின் 3 வகையான அணியிலும் முக்கிய சுழல் பந்து வீச்சாளராக வலம் வந்தார். ஆனால் அதன்பின் அவரின் பந்துவீச்சில் சரிவு ஏற்பட்டதால் ஐபிஎல் மற்றும் இந்திய அணியில் இருந்து தூக்கி எறியப்பட்டார். இதனால் கடந்த சில வருடங்களாக தொடர்ச்சியான வாய்ப்புகளைப் பெற முடியாமல் திண்டாடி வந்த அவர் இந்த வருடம் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்டு வருகிறார்.

அந்த வகையில் இந்த வருடம் இதுவரை பங்கேற்ற 4 போட்டிகளில் தனது மாயாஜால சுழல் பந்துவீச்சை மீண்டும் எடுத்து வந்துள்ள அவர் இதுவரை 10 விக்கெட்டுகளை எடுத்து அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் முதலிடம் பிடித்து பழைய பன்னீர்செல்வமாக பழைய பார்முக்கு திரும்பியுள்ளார். அதிலும் இந்த வருடம் உச்சபட்சமாக ஒரே போட்டியில் 4 விக்கெட்டுகளை எடுத்த அவர் அஜித் ஸ்டைலில் ஐ அம் பேக் என்ற லெவெலில் உண்மையான குல்தீப் யாதவாக திரும்பியுள்ளார் என்றே கூறலாம்.

இதையும் படிங்க : தடுமாறும் சென்னை இனியும் பிளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்புகள் இருக்கா? – முழுவிவரம் இதோ

மறுபுறம் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையில் வெற்றி நடை போட்டு வந்த கொல்கத்தா இந்த போட்டியில் பந்து வீச்சில் ரன்களை வாரி வழங்கியதுடன் பேட்டிங்கில் அதிரடியை காட்ட தவறியதால் தோல்வியை சந்தித்தது. இருப்பினும் இதுவரை பங்கேற்ற 5 போட்டிகளில் 2-வது தோல்வியை பதிவு செய்தாலும் 3 வெற்றிகளை பெற்றுள்ளதால் தொடர்ந்து 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.

Advertisement