IPL 2023 : ரகானேவுடன் மோதல் – சென்னையில் பிறந்து அடுத்தடுத்த போட்டிகளில் சென்னையை தோற்கடித்த தமிழக லெஜெண்ட் அஷ்வின்

Ashwin vs Rahane
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 தொடரில் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெற்ற 15வது லீக் போட்டியில் சென்னையை 3 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த ராஜஸ்தான் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவரில் சிறப்பாக செயல்பட்டு 175/8 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 52 (36) தேவ்தூத் படிக்கல் 38 (26) ஹெட்மயர் 30* (18) என முக்கிய பேட்ஸ்மேன்கள் தேவையான ரன்களை எடுக்க சென்னை சார்பில் அதிகபட்சமாக ஜடேஜா, துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்களை எடுத்தனர்.

அதை தொடர்ந்து 176 ரன்களை துரத்திய சென்னைக்கு ருதுராஜ் 8 ரன்களில் ஆரம்பத்திலேயே அவுட்டாகி சென்றாலும் அஜிங்கிய ரகானே 31 (19) ரன்களும் டேவோன் கான்வே 50 (38) ரன்களும் எடுத்து முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தனர். ஆனால் மிடில் ஆர்டரில் சிவம் துபே 8, மொயின் அலி 7, ராயுடு 1 என 3 முக்கிய பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானதால் பின்னடைவை சந்தித்த சென்னைக்கு கடைசி 5 ஓவரில் 63 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது தோனியும் ஜடேஜாவும் போராடியதால் கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட்டாலும் 2 சிக்ஸர்களை வழங்கி சந்திப் சர்மா கடைசி பந்தில் துல்லியமான யார்க்கர் வீசி சென்னைக்கு தோல்வியை பரிசளித்தார்.

- Advertisement -

சென்னையின் தமிழன்:
அதனால் தோனி 35* (17) ரன்களும் ஜடேஜா 25* (15) ரன்களும் எடுத்த போராட்டம் வீணானது. அப்படி பரபரப்பாக நடைபெற்ற அந்த போட்டியில் 6வது ஓவரை வீசிய அஸ்வின் 2வது பந்தை வீசுவது போல் வந்து வீசாமல் எதிர்ப்புறம் இருந்த பேட்ஸ்மேனுக்கும் அதை எதிர்கொண்ட ரகானேவுக்கும் எச்சரிக்கை கொடுத்தார். ஆனால் அடுத்த பந்தை அஸ்வின் வீச வந்த போது அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரகானே ஒதுங்கி சென்றது ரசிகர்களை ஆரவாரப் படுத்தியது. அதைத்தொடர்ந்து வீசப்பட்ட பந்தில் கவர்ஸ் திசையில் ரகானே அழகான சிக்சரை பறக்க விட்டார்.

ஆனாலும் அடுத்த சில ஓவர்களில் ரஹானேவை அவுட்டாக்கிய அஸ்வின் இறுதியில் வெற்றி கண்டார். இந்தியாவுக்காக நண்பர்களாக கடந்த காலங்களில் நிறைய வருடங்கள் இணைந்து விளையாடி இவர்கள் இவ்வாறு மோதிக்கொண்டது ரசிகர்கள் எதிர்பாராத ஒன்றாக அமைந்தது. இந்த வெற்றிக்கு பந்து வீச்சில் 2 விக்கெட்டுகளை 6.25 என்ற குறைவான எக்னாமியில் எடுத்த அஷ்வின் பேட்டிங்கில் யாருமே எதிர்பாராத வகையில் 5வது இடத்தில் களமிறங்கி 1 பவுண்டரி 2 சிக்சருடன் 30 (22) ரன்களை எடுத்து ஆல் ரவுண்டராக முக்கிய பங்காற்றியதால் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

சொல்லப்போனால் கடைசியாக 2022ஆம் ஆண்டு மும்பையின் ப்ராபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற சென்னைக்கு எதிரான போட்டியிலும் இதே போல 1 விக்கெட் மற்றும் 40* (23) ரன்கள் எடுத்த அஸ்வின் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெல்வதற்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். குறிப்பாக கடைசி ஓவரில் 6 ரன்கள் தேவைப்படுவது போது பவுண்டரி அடித்து வெற்றியில் முக்கிய பங்காற்றிய அவர் தற்போது மீண்டும் ராஜஸ்தானின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியுள்ளார்.

அதாவது சென்னைக்கு எதிராக ராஜஸ்தான் பங்கேற்ற கடைசி 2 போட்டிகளில் அடுத்தடுத்த ஆட்டநாயகன் விருதுகளை வென்று அஷ்வின் வெற்றி பெற வைத்துள்ளார். அந்த வகையில் பெயரில் மட்டும் தமிழை வைத்துக்கொண்டு கடந்த சில வருடங்களாக தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் இருந்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஷ்வின் தோற்கடித்தது தமிழக ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

- Advertisement -

மேலும் சென்னையில் பிறந்து சேப்பாக்கத்தில் கிரிக்கெட் விளையாடப் பழகி அங்குள்ள கால சூழ்நிலைகளை நன்கு தெரிந்த அவர் இவ்வளவு சிறப்பாக செயல்பட்டதில் எந்த ஆச்சரியமும் இல்லை என்றே சொல்லலாம். இருப்பினும் சில ரசிகர்கள் தமிழகத்தில் பிறந்து தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்காத சென்னை அணியை தோற்கடித்த தமிழனாக அஷ்வின் அசத்தியுள்ளதாக வன்மத்துடன் பேசுகிறார்கள்.

இதையும் படிங்க:IPL 2023 : பாவம் அவரு, உண்மை தெரியாம பேசாதீங்க? நொண்டுகிறார் என தோனியை விமர்சித்த ஹெய்டனுக்கு பிளெமிங் பதில்

ஆனால் உண்மை என்னவெனில் ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் அறிமுகமாகி அங்கு தோனியால் வளர்க்கப்பட்ட அஸ்வின் 2010, 2011 காலகட்டங்களில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி இந்தியாவுக்காகவும் அறிமுகமாகி அசத்தினார். அந்த சமயங்களில் இந்திய அணியில் ஹர்பஜன் சிங்கை ஒதுக்கி விட்டு இன்று ஜாம்பவானாக அஷ்வின் போற்றப்படும் அளவுக்கு தோனி ஆதரவு கொடுத்ததை யாரும் மறந்து விடக்கூடாது.

Advertisement