ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது தற்போது நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் முதல் 5 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் எட்டாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளில் ஹாட்ரிக் தோல்வியை சந்தித்த சென்னை அணி கடைசியாக நடைபெற்ற டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு எதிரான போட்டிகளில் அடுத்தடுத்து வெற்றியை பெற்று தற்போது மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ருதுராஜ் கெய்க்வாடுக்கு ஆதரவு தெரிவித்த : ரவிச்சந்திரன் அஷ்வின்
ஆனாலும் இந்த தொடரின் ஆரம்பத்திலிருந்து சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டின் பேட்டிங் ஃபார்ம் மிக மோசமாக இருந்து வருகிறது. ஏனெனில் இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் வெறும் 12 ரன்கள் சராசரியுடனும் 105 ஸ்ட்ரைக் ரேட்டுடனும் 63 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார். இதன் காரணமாக அவரது பேட்டிங் ஃபார்ம் மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்து வருகின்றன.
அதுமட்டுமின்றி சஞ்சு சாம்சனுடன் ஆயுஷ் மாத்ரேவை துவக்க வீரராக களமிறக்க வேண்டும் என்றும் பார்மின்றி தவிக்கும் ருதுராஜ் கெய்க்வாட் மூன்றாவது இடத்திலும் விளையாட வேண்டும் என்ற பேச்சுக்களும் இருந்து வருகிறது. இந்நிலையில் ருதுராஜ் கெய்க்வாட் தற்போது ரன் குவிக்கவில்லை என்றாலும் அவர் மீண்டும் மிகச் சிறப்பான பேட்டிங் பார்முக்கு திரும்புவார் என சி.எஸ்.கே அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஷ்வின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : தற்போது ருதுராஜ் கெய்க்வாட்டின் பேட்டிங் பார்ம் மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்து வருகின்றன. தோனி கேப்டனாக இருக்கும்போது அனைத்து போட்டிகளிலும் ரன்களை அடித்து விட்டாரா என்ன? கேப்டன்சி என்பது ஒரு அழுத்தம் நிறைந்த பதவி. அப்படி ஒரு பதவியில் இருக்கும் போது இதுபோன்ற சரிவு ஏற்படலாம். அந்த வகையில் தான் தற்போது ருதுராஜ் கேப்டன்சி அழுத்தத்தினால் சிறிய பின்னடைவை சந்தித்துள்ளார். ஆனால் கடைசியாக நடைபெற்ற இரண்டு வெற்றிகளின் மூலம் சிஎஸ்கே அணிக்கு நல்ல நம்பிக்கை கிடைத்திருக்கும்.
இதையும் படிங்க : நூர் அகமதுவின் சிறப்பான பந்துவீச்சுக்கு தோனி தான் காரணம்.. பவுலிங் கோச் – ஸ்ரீதரன் ஸ்ரீராம் பேட்டி
எனவே இந்த சமயத்தில் நமது கேப்டன் மீது ஒரு ரசிகராக நாமும், நமது அணியின் நிர்வாகமும் கொடுக்கும் ஆதரவு தான் அவரை சிறப்பாக செயல்பட வைக்கும். அவர் மீது தொடர்ந்து அழுத்தத்தை கொடுக்காமல் ஆதரவு கொடுங்கள். நிச்சயம் ருதுராஜ் போன்ற மிகச் சிறப்பான வீரர் பார்முக்கு திரும்ப நிறைய நேரம் ஆகாது. நாம் கொடுக்கும் ஆதரவு நிச்சயம் அவரை மீண்டும் பார்முக்கு கொண்டு வரும் என ரவிச்சந்திரன் அஷ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.



