இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்காக தற்போதே இந்திய அணி தங்களது அணி வீரர்களை தயார் செய்து வருகிறது. ஏற்கனவே இந்தி அணியின் முன்னணி வீரர்களான கே.எல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் மற்றும் பும்ரா போன்ற வீரர்கள் காயம் அடைந்திருப்பதால் இந்த உலகக் கோப்பை தொடருக்கான இந்திய வீரர்களை தேர்வு செய்வதில் தற்போது பிசிசிஐ மும்முரம் காட்டி வருகிறது. அந்த வகையில் காயம் அடைந்த வீரர்களுக்கு மாற்று வீரர்களாக சில வீரர்களை இந்திய அணியின் நிர்வாகம் தேர்வு செய்துள்ளது.
அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணிகள் பல வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்திய ஒருநாள் அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான சஞ்சு சாம்சன் மிகச் சிறப்பான ஆட்டத்தை ஆரம்ப கட்டத்திலேயே வெளிப்படுத்தியதால் அவர் பெரிய நட்சத்திர வீரராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் 2015 ஆம் ஆண்டு டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான சஞ்சு சாம்சன் ஒருநாள் போட்டிகளில் கடந்த 2021-ஆம் ஆண்டு தான் அறிமுகமாகினார். இதுவரை 11 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ள அவர் இரண்டு அரை சதங்களுடன் 330 ரன்களை குவித்துள்ளார். மிகச் சிறந்த திறமை கொண்ட அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்று ரசிகர்களும் கோரிக்கை வைத்து வந்தனர்.
இவ்வேளையில் தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய ஒருநாள் அணியில் அவர் இடம் பிடித்துள்ளார். இந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி அவர் உலக கோப்பை அணியிலும் இடம்பெற வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாகவும் உள்ளது. இந்நிலையில் சஞ்சு சாம்சனின் திறன் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி தற்போது நெகிழ்ச்சியான சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில் : சஞ்சு சாம்சன் மிகவும் திறமையான ஒரு வீரர், அவர் ஒரு மேட்ச் வின்னர். இதுவரை அவருடைய முழு திறனையும் சர்வதேச போட்டிகளில் அவர் வெளிப்படுத்தவில்லை. என்னை பொறுத்தவரை அவரது கரியர் முடிவதற்குள் எந்த சாதனையையும் செய்யாமல் முடித்துக் கொண்டால் நிச்சயம் நான் வருத்தம் அடைவேன்.
இதையும் படிங்க : இந்திய அணியில் இப்போ யாருமே நண்பர்களா இல்ல என ஆதங்கபட்ட அஷ்வினுக்கு – ரவி சாஸ்திரி நக்கலான பதிலடி
நான் பயிற்சியாளராக இருந்தபோது ரோஹித் தொடர்ச்சியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் துவக்க வீரராக இல்லாதது மனவேதனையாக இருந்தது. அதேபோன்று சஞ்சு சாம்சனிடம் திறமை இருந்தும் அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைக்காததும், அவர் எந்த சாதனையும் செய்யாதது எனக்கு வருத்தமாக உள்ளது. எனவே நிச்சயம் தனக்கு கிடைக்கும் வாய்ப்பினை சாம்சன் சரியாக பயன்படுத்தி சர்வதேச கிரிக்கெட்டிலும் சாதனைகளை படைக்க வேண்டும் என ரவி சாஸ்திரி உருக்கமாக பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.