ஆஸ்திரேலியாவுக்கு எதிராக லண்டனில் நடைபெற்று முடிந்த 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் படுதோல்வியை சந்தித்த இந்தியா அடுத்ததாக ஜூலை மாதம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. அதில் ஃபைனலில் சுமாராக செயல்பட்ட புஜாரா, உமேஷ் யாதவ், முகமது ஷமி போன்றவர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில் வாய்ப்பு பெறாத தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வாகியுள்ளார். முன்னதாக சுழலுக்கு சாதகமான ஓவல் மைதானத்தில் நடைபெற்ற ஃபைனலில் ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசையில் 5 இடது கை பேட்ஸ்மேன்கள் இருந்தும் தரவரிசையில் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் அஸ்வினை தேர்வு செய்யாதது தோல்வியை கொடுத்ததாக அனைவருமே ஒப்புக்கொண்டனர்.
அந்தளவுக்கு தரமான அவர் ஆரம்ப காலங்களில் சுழலுக்கு சாதகமான மைதானத்தில் மட்டுமே அசத்திய நிலையில் நாளடைவில் அனுபவத்தால் வெளிநாடுகளிலும் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்த துவங்கினார். ஆனாலும் வெளிநாட்டு மண்ணில் சரிப்பட்டு வர மாட்டார் என்று ஒதுக்கிய ரவி சாஸ்திரி – விராட் கோலி கூட்டணி செய்த அதே தவறை தற்போதைய ராகுல் டிராவிட் – ரோகித் சர்மாவும் செய்துள்ளது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. குறிப்பாக இதுவே சுழலுக்கு சாதகமான மைதானத்தில் ரன்களை குவித்தார் என்பதற்காக நம்பர் ஒன் பேட்ஸ்மேனை ஃபைனலில் கழற்றி விடுவீர்களா என்று ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்திருந்தார்.
நக்கலான பதிலடி:
அப்படி 450+ விக்கெட்களையும் 3000க்கு மேற்பட்ட ரன்களை அடித்து ஜாம்பவான் சச்சினை விட அதிக தொடர் நாயகன் விருதுகள் வென்ற வீரராக சாதனை படைத்தும் இதுவரை விளையாடும் 11 பேர் அணியில் நிலையான வாய்ப்பு கிடைக்காததால் ஏமாற்றமடைந்த ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வுக்கு பின் பவுலராக ஏன் வந்தோம் என்று வருந்த போவதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். மேலும் தம்மை அதிகப்படியாக சிந்திப்பவர் என்று முத்திரை குத்தி கேப்டனாக செயல்பட்டால் அதிக பிரசிங்கித்தனமாக நடந்து கொள்வார் என்ற காரணத்தால் அந்த பதவி மறுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியிருந்தார்.
அதை விட ஒரு காலத்தில் நண்பர்களாக இருந்த இந்திய அணியினர் தற்போது சீனர்களாக மாறிவிட்டதால் ஒருவருக்கொருவர் உதவுவதில்லை என்று அவர் தெரிவித்தது ரசிகர்களை திருப்பி பார்க்க வைத்தது. அதாவது இந்திய அணிக்குள் இப்போதெல்லாம் ஒன்றாக விளையாட வேண்டும் என்ற ஒற்றுமையான எண்ணம் இல்லாமல் அனைவரும் தங்களது இடத்திற்காக விளையாடுவதால் எப்படி ஐசிசி உலகக் கோப்பையை வெல்ல முடியும் என்று அவர் மறைமுகமாக தெரிவித்திருந்தார்.
அவரது கருத்து 2019 உலகக் கோப்பையில் கேப்டன்ஷிப் பதவி சம்பந்தமாக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரிடையே சண்டை ஏற்பட்டதாகவும் அதை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சரி செய்து வைத்ததாகவும் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் கடந்த சில மாதங்களுக்கு முன் தெரிவித்ததை உண்மையாகும் வகையில் அமைந்தது. இந்நிலையில் ஒரு கட்டத்திற்கு பின் அனைவரும் ஏன் நண்பர்களாக இருக்க வேண்டும்? என்று அஸ்வினுக்கு நக்கலாக பதிலடி கொடுத்துள்ள ரவி சாஸ்திரி எந்த துறையாக இருந்தாலும் நம்மால் குறிப்பிட்ட அளவு மட்டுமே சக ஊழியர்களாக அருகில் வைத்துக்கொள்ள முடியும் என்று கூறியுள்ளார்.
இது பற்றி யூடியூப் நிகழ்ச்சியில் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தது பின்வருமாறு. ” என்ன பொறுத்த வரை நீங்கள் எப்போதும் சக ஊழியர்களாக இருக்க வேண்டும். உங்களுக்கு சக ஊழியர்களாக இருப்பவர்களின் நண்பர்கள் இருப்பார்கள். அதாவது ஒவ்வொருவருக்கும் எத்தனை பேர் நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள்? நீங்கள் யாரிடமாவது போய் கேட்டால் தங்களது வாழ்க்கையில் 4 முதல் 5 பேர் மட்டுமே நெருங்கிய இருக்கிறார்கள் என்று சொல்வார்கள்”
இதையும் படிங்க:துணை கேப்டனா ரகானேவுக்கு பதில் அந்த 2 பேர போட்ருக்கலாம் – ஐடியா இல்லாத தேர்வுக்குழுவை சாடிய கவாஸ்கர்
“என் வாழ்க்கையில் நான் 5 நெருங்கிய நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அதற்கு மேல் வேண்டாம். நான் சொல்வது என்னவென்றால் எல்லா நேரத்திலும் நண்பர்களாக இல்லாமல் அனைவரும் சக ஊழியர்களாக இருப்பது சரியாகும். குறிப்பாக வர்ணனையாளர்கள் அறையிலும் என்னுடன் சக ஊழியர்களை இருப்பார்கள்” என்று கூறினார்.