
ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றது. அத்தொடரின் முதல் 2 போட்டிகளில் இந்திய அணியை தோற்கடித்த ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியது. மறுபுறம் புதிய கேப்டன் சுப்மன் கில் தலைமையில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த இந்தியா கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது.
அந்த தோல்விக்கு நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி அடுத்தடுத்து டக் அவுட்டானது முக்கிய காரணமானது. ஒருநாள் கிரிக்கெட்டில் 14,000+ ரன்கள் 51 சதங்கள் அடித்து இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ள அவர் 7 மாதங்கள் கழித்து இத்தொடரில் விளையாடுகிறார். அந்த வாய்ப்பில் முதல் போட்டியில் அவர் ஆஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் முறையாக டக் அவுட்டானார்.
அடுத்த போட்டியிலும் டக் அவுட்டான அவர் தம்முடைய கேரியரில் முதல் முறையாக அடுத்தடுத்த போட்டிகளில் 0 ரன்களில் அவுட்டாகி மோசமான சாதனை படைத்தார். ஏற்கனவே 2027 உலகக் கோப்பையில் அவரையும் ரோஹித் சர்மாவையும் கழற்றி விட தேர்வுக்குழு முயற்சித்து வருகிறது. அதனாலேயே 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை வென்றும் ரோஹித் சர்மாவை கழற்றி விட்ட தேர்வுக்குழு சுப்மன் கில்லை புதிய கேப்டனாக நியமித்துள்ளது.
அப்படிப்பட்ட சூழ்நிலையில் விராட் கோலி இப்படி அடுத்தடுத்து டக் அவுட்டாகியுள்ளது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது. இந்நிலையில் 2027 உலகக் கோப்பை வாய்ப்பை பிடிப்பதற்கு விராட் கோலி சீக்கிரம் ஃபார்மை கண்டறிந்து பெரிய ரன்கள் குவிப்பது அவசியம் என்று ரவி சாஸ்திரி அறிவுறுத்துள்ளார். ஏனெனில் போட்டிக்கு ஜெய்ஸ்வால், அபிஷேக் சர்மா போன்ற இளம் வீரர்கள் காத்திருப்பதால் விராட் கோலியை கழற்றி விட கௌதம் கம்பீர் காத்திருப்பதாகவும் அவர் மறைமுகமாக எச்சரித்துள்ளார்.
இது பற்றி சாஸ்திரி பேசியது பின்வருமாறு. “அவர் ஃபார்மை கொஞ்சம் வேகமாக கண்டறிய வேண்டும். ஏனெனில் இந்தியாவில் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அதிகப்படியான போட்டி நிலவுகிறது. அதனால் இந்திய அணியில் இருக்கும் விராட், ரோஹித் உட்பட யாராக இருந்தாலும் ரிலாக்ஸ் செய்ய முடியாது. எனவே விராட் கோலிக்கு எதுவும் எளிதாக இருக்காது”
இதையும் படிங்க: கோலிக்கு சொதப்பவும் உரிமை இருக்கு.. ரசிகர்களுக்கு நன்றி சொன்னதால் ஓய்வு பெற மாட்டாரு.. கவாஸ்கர் பேட்டி
“2வது போட்டியில் அவர் ரன்கள் குவிக்கும் வாய்ப்பை மீண்டும் தவற விட்டார். அவருடைய ஃபுட் வொர்க் சரியாக இல்லை. இருப்பினும் அவர் அப்படி அடிக்கடி தவறுகளை செய்யக்கூடியவர் கிடையாது. ஒருநாள் கிரிக்கெட்டில் அற்புதமான ரெக்கார்டை வைத்துள்ள விராட் கோலி அடுத்தடுத்த போட்டிகளில் டக் அவுட்டானதால் ஏமாற்றத்தைச் சந்தித்திருப்பார்” என்று கூறினார்.