இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 1ஆம் தேதி நடைபெற்ற 43வது லீக் போட்டியில் லக்னோவை 18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு தோற்கடித்தது. அதை விட டெஸ்ட் கிரிக்கெட்டை போல மிகவும் அலுப்பு தட்டும் வகையில் நடைபெற்ற அந்த போட்டியின் இறுதியில் ஒரு பந்தில் ஆப்கானிஸ்தான் வீரர் நவீன்-உல்-ஹக் வெள்ளை கோட்டுக்கு உள்ளே இருந்தும் முகமது சிராஜ் தேவையின்றி கோபத்துடன் ரன் அவுட் செய்ய முயற்சித்தார். அதனால் அதிருப்தியில் இருந்த நவீனுக்கும் அருகிலிருந்த விராட் கோலிக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை அமித் மிஸ்ரா மற்றும் நடுவர் ஆகியோர் தடுத்து நிறுத்தினர்.
அத்துடன் போட்டி முடிந்ததும் வழக்கம் போல இரு அணி வீரர்கள் கை கொடுத்துக் கொண்ட போது மீண்டும் அவர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை கிளன் மேக்ஸ்வெல் தடுத்தார். இறுதியில் அதை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த லக்னோ அணியின் பயிற்சியாளர் கெளதம் கம்பீர் அனைவரையும் சமாதானப்படுத்துவதற்கு பதிலாக முதல் ஆளாக விராட் கோலியுடன் நெஞ்சோடு நெஞ்சாக மோதும் அளவுக்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மொத்தத்தில் ஜென்டில்மேன் விளையாட்டில் மிகப்பெரிய சண்டையில் ஈடுபட்ட விராட் கோலி மற்றும் கௌதம் கம்பீர் ஆகியோருக்கு 100% போட்டி சம்பளம் அபராதமாகவும் நவீனுக்கு 50% அபராதமும் விதிக்கப்பட்டது.
இப்டி அடிச்சுக்குறாங்களே:
இத்தனைக்கும் தலைநகர் டெல்லி மாநிலத்தில் ஒன்றாகப் பிறந்து இந்தியாவுக்காக 2011 உலகக் கோப்பை உட்பட பல போட்டிகளில் ஒன்றாக இணைந்து விளையாடி ஜாம்பவான்களாக திகழும் அந்த இருவரும் தொடர்ந்து சண்டை போட்டு வருவது ரசிகர்களுக்கு ஏமாற்றமாகவே இருந்து வருகிறது. குறிப்பாக 2013இல் கொல்கத்தாவின் கேப்டனாக விராட் கோலியிடம் சண்டை போட்ட கௌதம் கம்பீர் ஓய்வுக்கு பின் வர்ணனையாளராக சம்பந்தமின்றி விமர்சிப்பதை வழக்கமாக வைத்திருந்த நிலையில் தற்போது பயிற்சிளாகவும் 10 வருடங்கள் கழித்தும் பகையை மறக்காமல் சண்டை போட்டு வருகிறார்.
இந்நிலையில் இந்தியாவின் உலகக்கோப்பை நாயகனாக பார்க்கப்படும் கம்பீர் மற்றும் நவீன கிரிக்கெட்டில் ஜாம்பவானாக போற்றப்படும் விராட் கோலி ஆகியோரிடையே சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தூதராக செல்ல தயாராக இருப்பதாக முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஓரிரு நாட்களில் பைசா குறையும் (அபராதம்) என்று நினைக்கிறேன். அப்போது அவர்கள் அந்த நிகழ்வை சிறப்பாக கையாண்டிருக்கலாம் என்று உணர்வார்கள். இத்தனைக்கும் இருவருமே ஒரே மாநிலத்திற்காக ஏராளமான கிரிக்கெட்டில் விளையாடியுள்ளனர். கௌதம் 2 உலகக் கோப்பை வின்னர். விராட் கோலி ஒரு ஐக்கான்”
“இருவருமே டெல்லியிலிருந்து வந்தவர்கள். எனவே அந்த இருவரையும் ஒன்றாக உட்கார்ந்து பேச வைத்து இவை அனைத்திற்கும் முடிவு கட்டுவதே சிறந்த முடிவாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதை யார் செய்தாலும் விரைவில் அனைத்தும் சரியாகி விடும். ஏனெனில் இவ்வாறு தொடர்ந்து நடப்பதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள். குறிப்பாக ஒவ்வொரு முறையும் அவர்கள் மீண்டும் சந்திக்கும் போது இதே போன்ற நிகழ்வு தான் ஏற்படுகிறது. எனவே மீண்டும் அவ்வாறு நடைபெறுவதற்கு முன்பாக சிறந்த முயற்சியை எடுக்க வேண்டும். அதற்காக அந்த இருவரிடையே சமாதான பேச்சு வார்த்தையை நான் நடத்த விரும்பினால் அதற்கு தயாராக இருக்கிறேன்” என்று கூறினார்.
இதையும் படிங்க:IPL 2023 : எப்போ தான் ஃபார்முக்கு வருவாரு? கெளதம் கம்பீரின் ஆல் டைம் பரிதாப சாதனையை சமன் செய்த ரோஹித் சர்மா
முன்னதாக வங்கதேசத்துக்கு எதிராக முதல் முறையாக விராட் கோலி சதமடித்த போட்டியில் அவரை விட அதிக ரன்கள் விளாசி இந்தியாவை வெற்றி பெற வைத்த கௌதம் கம்பீருக்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டது. இருப்பினும் முதல் முறையாக சதமடித்த இளம் வீரருக்கு அந்த விருது கொடுப்பது மிகப்பெரிய உத்வேகமாக இருக்கும் என்று நினைத்த கம்பீர் தன்னுடைய ஆட்டநாயகன் விருதை விராட் கோலிக்கு பரிசளித்ததை யாராலும் மறக்க முடியாது. ஆனால் அப்படி ஒன்றாக இருந்த அவர்கள் இன்று இப்படி எதிரும் புதிருமாக இருப்பது இந்திய ரசிகர்களுக்கு ஆதங்கத்தை கொடுப்பது குறிப்பிடத்தக்கது.