அவர் இருந்திருந்தா 2019 உ.கோ செமி ஃபைனலில் தோத்துருக்க மாட்டோம், அவருக்கான பாராட்டும் கிடைக்கல – சாஸ்திரி உருக்கம்

Ravi-Shastri-Coach
- Advertisement -

இந்தியாவில் வரும் அக்டோபர் 5 முதல் உலக கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்க போகும் ஐசிசி 2023 உலகக் கோப்பை கோலாகலமாக துவங்குகிறது. அதில் சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் இந்தியா இந்த பொன்னான வாய்ப்பையாவது பயன்படுத்தி 2011 போல கோப்பையை வென்று கடந்த 10 வருடங்களாக சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்துமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இருப்பினும் தற்போதைய அணியில் கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய முக்கிய வீரர்கள் காயத்திலிருந்து குணமடையாமல் இருப்பதற்கு நிகராக டாப் ஆர்டரிலும் மிடில் ஆர்டரிலும் ஒரு இடது கை பேட்ஸ்மேன் இல்லாமல் இருப்பது பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Virat Kohli Shikhar Dhawan

- Advertisement -

அதை சரி செய்வதற்காக இசான் கிசான், திலக் வர்மா போன்ற இளம் வீரர்களை தேர்வு செய்யலாம் என்று நிறைய முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அப்படி உலகக்கோப்பை அணியை பற்றி விவாதிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கடந்த காலங்களில் இந்த பிரச்சனையே இல்லாத வகையில் ஷிகர் தவான் செயல்பட்டதாக ஆதங்கமாக பேசியுள்ளார். அதிலும் குறிப்பாக 2019 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக காயத்துடன் சதமடித்து வெற்றி பெற வைத்து வெளியேறிய அவர் நியூசிலாந்துக்கு எதிரான செமி ஃபைனலில் இருந்திருந்தால் இந்தியா தோற்றிருக்காது என்று ரவி சாஸ்திரி ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

பாராட்டவும் இல்ல:
டெல்லியை சேர்ந்த ஷிகர் தவான் ஆரம்ப காலங்களில் மிடில் ஆர்டரில் தடுமாறிய நிலையில் 2013 சாம்பியன்ஸ் ட்ராபியில் ரோகித் சர்மாவுடன் களமிறங்கும் புதிய தொடக்க வீரராக எம்எஸ் தோனி அறிமுகப்படுத்தினார். அதை இறுக்கமாக பிடித்து அதிக ரன்கள் அடித்து தங்க பேட் விருது வென்ற அவர் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றி 2015 உலக கோப்பையில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரராக சாதனை படைத்து 2017 சாம்பியன்ஸ் ட்ராபியில் மீண்டும் தங்க பேட் விருது வென்றார்.

Dhawan

மேலும் 2018 ஆசிய கோப்பை, நிதஹாஸ் முத்தரப்பு கோப்பைகளின் தொடர் நாயகன் விருதுகளை வென்று பெரிய கிரிக்கெட் தொடர்களில் அபாரமாக செயல்பட்ட அவரை ரசிகர்கள் மிஸ்டர் ஐசிசி என்றழைத்தனர். ஆனால் 2019 உலகக் கோப்பையில் காயத்தை சந்தித்து வெளியேறிய பின் வயது காரணமாக அதிரடியாக செயல்பட முடியாமல் ஃபார்மை இழந்து தடுமாறிய அவருக்கு போட்டியாக கில், இஷான் போன்ற இளம் வீரர்கள் வந்து விட்டனர்.

- Advertisement -

அதனால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு தேர்வுக்குழு கழற்றி விட்டுள்ள நிலையில் இந்தியாவின் வெற்றிகளில் மகத்தான பங்காற்றிய தவானை இங்கே யாரும் விராட் கோலி, ரோஹித் சர்மாவுக்கு நிகராக பாராட்டவில்லை என்று ரவி சாஸ்திரி ஆதங்கத்துடன் பேசியுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “டாப் ஆர்டரில் எப்போதுமே வளைவுத்தன்மை வேண்டும். ரோஹித், விராட், கில் ஆகியோர் 2, 3, 4 ஆகிய இடங்களில் விளையாடுவதற்கு தயாராக இருக்க வேண்டும்”

Shastri

“மேலும் ஒரு முக்கியமான விஷயம் என்னவெனில் பயிற்சியளராக இருந்த போதிலிருந்தே இதை நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன். அதாவது ஷிகர் தவானுக்கு யாரும் போதுமான பாராட்டுகளை கொடுப்பதில்லை. அதாவது பாராட்டுக்கு மிகவும் தகுதியுடையவரான அவர் அற்புதமான வீரர். அத்துடன் 2019 உலகக்கோப்பையில் நாம் மிகச் சிறப்பாக செயல்பட்டும் செமி ஃபைனலில் தோல்வியடைந்தோம். ஆனால் அவர் அந்த போட்டியில் இல்லை”

இதையும் படிங்க:2019இல் சண்டை போட்ட கம்பீருடன் லக்னோ அணியில் புதிய பயிற்சியாளராக இணைந்த எம்எஸ்கே பிரசாத் – விவரம் இதோ

“இருப்பினும் அவர் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துபவர் என்பதை நீங்கள் அறிவீர்கள். அதாவது எதிரணியில் 3 வலது கை வேகப்பந்து வீச்சாளர்கள் பந்தை வெளியே ஸ்விங் செய்யும் போது உங்களுடைய டாப் ஆர்டரில் அவரைப் போன்ற இடது கை பேட்ஸ்மேன் இருப்பது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் அவர் இல்லாதது எதிரணி தொடர்ந்து ஒரே இடத்திலேயே பந்து வீசும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது” என்று கூறினார். இருப்பினும் ஷிகர் தவான் இப்போதும் ஓய்வு பெறாத நிலைமையில் இம்முறை பேக்-அப் வீரராக கூட கண்டுகொள்ளப்படவில்லை என்பது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.

Advertisement