
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனிக்கு ஹால் ஆஃப் பேம் எனும் உயரிய கௌரவத்தை வழங்கி ஐசிசி கௌரவித்துள்ளது. 2004 – 2019 வரை விளையாடிய தோனி 3 வகையான கிரிக்கெட்டிலும் 17000க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார். அதே போல மின்னல் வேகத்தில் விக்கெட் கீப்பிங் செய்த அவர் இந்திய விக்கெட் கீப்பர்களின் இலக்கணத்தை மாற்றியமைத்தவர்.
அவை அனைத்தையும் விட அனுபவமற்ற கேப்டன்ஷிப் பொறுப்பில் தோனி 2007 டி20 உலகக் கோப்பையை கேப்டனாக வென்று காட்டினார். அவரது தலைமையில் இந்தியா 2010ஆம் ஆண்டு முதல் முறையாக நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக முன்னேறி சாதனை படைத்தது. அதே போல கங்குலி உருவாக்கிய வீரர்களை வைத்து தோனி 2011 உலகக் கோப்பையை சொந்த மண்ணில் வென்று மற்றொரு சாதனை படைத்தார்.
அதோடு நிற்காத அவர் சீனியர்களை கழற்றி விட்டு ரோஹித் சர்மா, தவான் உள்ளிட்ட இளம் வீரர்களை வைத்து 2013 சாம்பியன்ஸ் டிராபியை வென்று இந்திய கிரிக்கெட்டின் வருங்காலத்தை வளமாக கட்டமைத்தார். அந்த வகையில் சிறந்த கேப்டனாக போற்றப்படும் தோனி மகத்தான ஃபினிஷராகவும் அறியப்படுகிறார். அப்படி இந்தியாவுக்காக நிறைய பங்காற்றிய அவருக்கு ஹால் ஆஃப் பேம் கௌரவத்தை ஐசிசி வழங்கியுள்ளது.
அதனால் கபில் தேவ், சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே, விரேந்தர் சேவாக் போன்ற ஜாம்பவான்களுக்கு பின் ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் கௌரவத்தை பெறும் 11வது இந்தியராக தோனி சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் பிக் பாக்கெட் செய்வதை விட தோனி மிகவும் வேகமாக விக்கெட் கீப்பிங் செய்யக்கூடியவர் என்று ரவி சாஸ்திரி பாராட்டியுள்ளார். அப்படிப்பட்ட தோனி இந்த கௌரவத்திற்கு தகுதியானவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது பற்றி ஐசிசி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ஒரு பிக் பாக்கெட்டை விட தோனியின் கைகள் மிகவும் வேகமாக இருக்கும். நீங்கள் இந்தியாவில் அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் ஒரு கிரிக்கெட் போட்டியை பார்த்தால் உங்களுக்கு பின்னே தோனி போன்றவர்கள் இருப்பதை விரும்ப மாட்டீர்கள். உங்களுடைய பணப்பை காணாமல் போய்விடும்”
இதையும் படிங்க: ஆல் கிரேட் பெயர்களில் இருப்பதை என்றென்றும் போற்றுவேன்.. ஐசிசி வழங்கிய கெளரவம் பற்றி தோனி
“உலகக் கோப்பையை வென்றாலும் தோனி அப்படியே இருப்பார். சதத்தை அடித்தாலும் அதே போலவே இருப்பார். இரட்டை சதத்தை அடித்தாலும் அப்படியே இருப்பார். அவரிடம் பெரியளவில் எந்த மாற்றமும் இருக்காது என்பது உங்களுக்குத் தெரியும்” என்று கூறினார். தோனியுடன் சேர்ந்து மேத்தியூ ஹைடன், டேனியல் வெட்டோரி, ஹாசிம் அம்லா, கிரேம் ஸ்மித் ஆகியோரும் இந்த கௌரவத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.