
டெல்லியை சேர்ந்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி கடந்த 15 வருடங்களாக இந்திய அணியின் வெற்றிகளில் மிகவும் முக்கிய பங்காற்றி வருகிறார். 2008 அண்டர்-19 உலகக் கோப்பையை கேப்டனாக வென்று சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் குறுகிய காலத்திலேயே மிகச்சிறப்பாக விளையாடத் துவங்கினர். அப்போதிலிருந்து இதுவரை 26000+ ரன்கள் குவித்து 80 சதங்கள் அடித்துள்ள அவர் இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.
குறிப்பாக 2024 டி20 உலகக் கோப்பை ஃபைனலில் ஆட்டநாயகன் விருது வென்ற அவர் இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார். இருப்பினும் பேட்டிங்க்கு சவாலான விதிமுறைகளும் பவுலர்களும் ராஜங்கம் நடத்திய 80, 90 காலகட்டங்களில் விராட் கோலி விளையாடியிருந்தால் இந்தளவுக்கு அசத்தியிருக்க மாட்டார் என்ற கருத்துக்கள் காணப்படுகின்றன. அதனால் சச்சின் தான் எப்போதும் சிறந்த பேட்ஸ்மேன் என்ற பேச்சுக்களும் காணப்படுகின்றன.
ரவி சாஸ்திரி பாராட்டு:
இந்நிலையில் ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித் போன்றவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் மட்டுமே ஆதிக்கம் செலுத்துவதாக ரவி சாஸ்திரி கூறியுள்ளார். ஆனால் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 விதமான கிரிக்கெட்டிலும் கிட்டத்தட்ட 50 என்ற பேட்டிங் சராசரியில் அசத்தும் திறமை விராட் கோலியிடம் இருப்பதாக அவர் பாராட்டியுள்ளார்.
எனவே இந்தக்காலம் மட்டுமின்றி தங்களுடைய காலத்திலும் விராட் கோலி விளையாடியிருந்தால் அசத்தியிருப்பார் என்று ரவி சாஸ்திரி பாராட்டியுள்ளார். இது பற்றி ஐசிசி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “நீங்கள் வெவ்வேறு சகாப்தங்களை ஒப்பிட முடியாது. ஆனால் யாரேனும் நீண்ட காலம் இந்த விளையாட்டில் முதலிடத்தில் இருக்க முடிந்தால் அது அவரது மாற்றியமைக்கும் திறனை காட்டுகிறது. பலரால் இங்கே அவ்வாறு செய்ய முடியாது”
“இருப்பினும் விராட் கோலி ஏன் வித்தியாசமானவர் என்பதை அதில் காட்டியுள்ளார். அவர் இந்த விளையாட்டின் ஒரு மகத்தானவர் என்று நினைக்கிறேன். கடந்த தசாபத்தில் அவர் 3 வகையான கிரிக்கெட்டிலும் ஆதிக்கம் செலுத்தினார் என்று நினைக்கிறேன். 10 வருடங்களாக 3 வகையான கிரிக்கெட்டிலும் ஆதிக்கம் செலுத்திய ஒரு வீரர் என்று பார்த்தால் அது விராட் கோலியாக தான் இருக்க வேண்டும்”
இதையும் படிங்க: இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான கடைசி போட்டியில் ஏற்படவுள்ள 2 முக்கிய மாற்றங்கள் – விவரம் இதோ
“உங்களுக்கு ஒரு ஃபார்மட்டில் அசத்தக்கூடிய ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித், மற்றொரு ஃபார்மட்டில் அசத்தக்கூடிய ரோஹித் சர்மா கிடைப்பார்கள். ஆனால் விராட் கோலி அந்த 3 விதமான ஃபார்மட்டிலும் மேலே இருப்பார்” என்று கூறினார். அந்த வகையில் 3 விதமான கிரிக்கெட்டிலும் அசத்தும் விராட் கோலி தற்போது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.