IND vs ENG : டெஸ்ட் போட்டியின் நேரலை வர்ணனையில் பீட்டர்சனுக்கு கொட்டு வைத்த ரவி சாஸ்திரி – எதற்குனு பாருங்க

Ravi Shastri Kevin Pieterson
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் 5-வது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 2 – 1* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கும் இந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கப் போகும் இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்சில் போராடி 416 ரன்கள் சேர்த்தது. புஜாரா, கில், விஹாரி, விராட் கோலி உட்பட முக்கிய பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே இங்கிலாந்தின் தரமான பந்துவீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 98/5 என தடுமாறிய இந்தியாவை 6-வது விக்கெட்டுக்கு 222 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தூக்கி நிறுத்திய ரிஷப் பண்ட் டி20 இன்னிங்ஸ் போல அதிரடியாக பேட்டிங் செய்து 146 (111) ரன்கள் குவித்து அவுட்டானார்.

அவருடன் நிதானமாக பேட்டிங் செய்த ரவீந்திர ஜடேஜா தனது பங்கிற்கு 13 பவுண்டரியுடன் சதமடித்து 104 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். கடைசியில் யாருமே எதிர்பாராத வகையில் ஸ்டூவர்ட் பிராட் வீசிய கடைசி ஓவரில் 35 ரன்களை பறக்கவிட்ட ஜஸ்பிரித் பும்ரா உலக சாதனை படைத்தார். இங்கிலாந்து சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை எடுத்தார்.

- Advertisement -

வெல்லுமா இந்தியா:
அதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து இந்தியாவின் தரமான பந்துவீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வெறும் 284 ரன்களுக்கு சுருண்டது. ஜோ ரூட், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் என அந்த அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்த நிலையில் அதிக பட்சமாக அதிரடியாக விளையாடிய ஜானி பேர்ஸ்டோ சதமடித்து 106 ரன்கள் விளாசினார். இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக சிராஜ் 4 விக்கெட்டுகளும் பும்ரா 3 விக்கெட்டும் எடுத்தனர்.

அதை தொடர்ந்து 132 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியாவுக்கு தனது 2-வது இன்னிங்சில் கில் 4, விராட் கோலி 20, விஹாரி 11, ஷ்ரேயஸ் ஐயர் 19 என மீண்டும் முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்காமல் ஏமாற்றினர். இருப்பினும் பொறுப்புடன் பேட்டிங் செய்த மூத்த வீரர் புஜாரா 8 பவுண்டரிகளுடன் அரைசதம் அடித்து 66 ரன்கள் எடுத்தார். அவருடன் அசத்தலாக பேட்டிங் செய்த ரிஷப் பண்ட் மீண்டும் அரைசதம் அடித்து 57 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இருப்பினும் இதர வீரர்கள் கைகொடுக்க தவறியதால் இந்தியா 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானதை தொடர்ந்து 378 என்ற இலக்கை இங்கிலாந்து துரத்தி வருகிறது.

- Advertisement -

நேரலை கலகலப்பு:
முன்னதாக கடந்த வருடம் இந்த தொடரில் பயிற்சியாளராக இருந்த ஜாம்பவான் ரவி சாஸ்திரி தற்போது அந்த பதவியில் விலகியுள்ளதால் மீண்டும் வர்ணனையாளர் வேலைக்கு திரும்பியுள்ளார். இருப்பினும் அவர் இங்கிலாந்தில் இப்போட்டியை ஒளிபரப்பும் ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் தான் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார். அவருடன் குமார் சங்ககாரா, கெவின் பீட்டர்சன், மார்க் பட்சர், இயன் வார்டு, மைக்கல் அதேர்டன் போன்ற நட்சத்திர முன்னாள் வீரர்களும் வர்ணனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த நிலைமையில் தம்முடன் இணைந்து பணியாற்றிய நட்சத்திரங்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட ரவிசாஸ்திரி அதை தனது ட்விட்டர் பக்கத்தில் 3-வது நாளில் பதிவிட்டிருந்தார்.

ஆனால் அதைப் பார்த்த முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹூசைன் தனது புகைப்படத்தை வெட்டிய பின்பு பதிவிட்டதை கண்டு ஆச்சரியப்பட்டார். அதை மனதில் மட்டும் வைக்காத அவர் இந்தியா-இங்கிலாந்து மோதிய இப்போட்டியின் 3-வது நாளில் நேரலையில் இயன் வார்ட் பதிவிட்ட புகைப்படத்தை ஆதாரத்துடன் ரசிகர்களுக்கு காட்சிப்படுத்தி “ரவி சாஸ்திரியின் வாழ்க்கையிலிருந்து நான் வெட்டி எடுக்கப்பட்டுள்ளேன்” என்று சிரித்துக்கொண்டே அருகில் இருந்த கெவின் பீட்டர்சனுடன் கலகலப்பான வர்ணனையில் ஈடுபட்டார்.

- Advertisement -

அதற்கு காரணம் என்னவெனில் கடந்த 2011இல் டிஆர்எஸ் தொழில்நுட்பத்தை இந்தியா ஏற்றுக் கொள்ளாததை நேரலையில் விவாதித்த ரவி சாஸ்திரி மற்றும் நாசர் உசேன் ஆகியோரிடையே லேசான மனக்கசப்பு ஏற்பட்டது. அதன் காரணமாகவே ரவி சாஸ்திரி அவ்வாறு செய்ததாக தெரிகிறது. இருப்பினும் 10 வருடங்கள் கழித்து அதை மறந்து விட்டதாக இப்போட்டிக்கு முன்பு ரவி சாஸ்திரி தன்னிடம் கூறியதையும் நாசர் உசேன் நேரலையில் பகிர்ந்தார்.

இறுதியில் அதை பார்த்த கெவின் பீட்டர்சன் உட்பட மேலும் சில நட்சத்திர வீரர்கள் நேரலையில் ரவி சாஸ்திரியின் இந்த செயலுக்கு சிரித்து மகிழ்ந்தார்கள். மேலும் ஒரு ஜாம்பவானான அவர் வர்ணனை செய்தது போக எஞ்சிய தருணங்களில் இதுபோல எடிட்டிங் வேலையும் செய்வாரா என்று அவர்கள் சிரித்து மகிழ்ந்தனர். அதை வர்ணனையாளர் அறைக்கு வெளியே இருந்த பார்த்த ரவிசாஸ்திரி உடனடியாக நேரலைக்கு வந்து சிரித்துக் கொண்டிருந்த கெவின் பீட்டர்சன் தலையில் கொட்டு வைப்பதைப் போல ஜாலியான கோபத்தை வெளிப்படுத்தினார்.

இதையும் படிங்க : IND vs ENG : பயற்சி போட்டியிலும் பரபரப்பு, தினேஷ் கார்த்திக் தலைமையில் இந்தியா போராடி வெற்றி – முழுவிவரம்

இறுதியில் தாம் செய்த ஜாலியான தவறுக்காக நாசர் உசேனுடன் ஸ்பெஷலாக எடுத்துக்கொண்ட செல்பியில் பின்புறம் ஜாலியாக போஸ் கொடுக்கும் கெவின் பீட்டர்சன் அடங்கிய புகைப்படத்தை ரவி சாஸ்திரி தற்போது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Advertisement