மிகுந்த விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடரில் மார்ச் 7-ஆம் தேதியன்று நடந்த 15-வது லீக் போட்டியில் டெல்லியை தோற்கடித்த லக்னோ 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் வாயிலாக இதுவரை பங்கேற்ற 4 போட்டிகளில் 3 வெற்றிகளை பதிவு செய்துள்ள அந்த அணி புள்ளி பட்டியலில் 2-வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. மும்பையில் உள்ள டிஒய் பாட்டில் மைதானத்தில் நடந்த அந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய டெல்லி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 149/3 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக பவர்பிளே ஓவர்களில் பட்டையை கிளப்பிய இளம் வீரர் பிரிதிவி ஷா லக்னோ பவுலர்களை சரமாரியாக அடித்து வெறும் 34 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் உட்பட 61 ரன்களை விளாசினார்.

சொதப்பிய டெல்லி:
அதிலும் முதல் விக்கெட்டுக்கு டெல்லி சேர்த்த 67 ரன்களில் அவர் மட்டும் தனி ஒருவனாக 61 ரன்களைக் அடித்து நொறுக்கினார். ஆனால் அடுத்து வந்த டேவிட் வார்னர் 4, ரோமன் போவெல் 3 என முக்கிய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி அந்த அற்புதமான தொடக்கத்தை பயன்படுத்த தவறினர். இதனால் 74/3 என சரிந்த டெல்லியை அடுத்து களமிறங்கிய கேப்டன் ரிஷப் பண்ட் 36 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 39* ரன்களும் சர்பராஸ் கான் 28 பந்துகளில் 3 பவுண்டரி உட்பட 36* ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் மீட்டெடுத்தனர் என்றாலும் அதிரடியாக ரன்களை குவிக்க தவறினர்.
அதை தொடர்ந்து 150 என்ற சுலபமான இலக்கை துரத்திய லக்னோவுக்கு தொடக்க வீரர்கள் கேப்டன் கேஎல் ராகுல் மற்றும் குவின்டன் டி காக் ஆகியோர் அதிரடியாக இணைந்து முதல் விக்கெட்டுக்கு 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்தனர். இதில் 25 பந்துகளில் 24 ரன்கள் எடுத்திருந்த போது கேஎல் ராகுல் ஆட்டமிழக்க அடுத்து வந்த அதிரடி வீரர் எவின் லெவிஸ் 5 (13) ரன்களில் நடையை கட்டினார். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து பட்டைய கிளப்பிய குயின்டன் டி காக் 52 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட அரைசதம் கடந்து 80 ரன்கள் விளாசி முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார்.

இருப்பினும் கடைசி நேரத்தில் ஜோடி சேர்ந்த க்ருனால் பாண்டியா 14 பந்துகளில் ஒரு சிக்சர் உட்பட 19* ரன்களும் இளம் வீரர் ஆயுஷ் படோனி 3 பந்துகளில் 1 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் உட்பட 10* ரன்கள் எடுத்து பினிஷிங் கொடுத்ததால் 19.4 ஓவர்களில் 155/4 ரன்களை எடுத்த லக்னோ அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு 80 ரன்கள் விளாசி முக்கிய பங்காற்றிய குயின்டன் டீ காக் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
தெறித்து ஓடும் வார்னர்:
மறுபுறம் இந்த தோல்வியால் இதுவரை பங்கேற்ற 3 போட்டிகளில் 1 வெற்றி 2 தோல்விகளை சந்தித்துள்ள டெல்லி புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் திண்டாடுகிறது. முன்னதாக இந்த போட்டியில் ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் தனது நாட்டுக்காக விளையாடிய பின் முதல் முறையாக இந்த வருடம் ஐபிஎல் தொடரில் டெல்லிக்காக விளையாடினார். முதல் 2 போட்டிகளில் அவர் இல்லாத குறை டெல்லிக்கு பின்னடைவாக இருந்த நிலையில் இந்த போட்டியில் அதிரடியாக விளையாடுவார் என அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் பவர்பிளே ஓவரில் பிரித்து மேய்ந்த ப்ரீத்திவி ஷா’வை வெறும் வேடிக்கை மட்டுமே பார்த்த அவர் 67 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பில் 4 ரன்கள் மட்டுமே பங்காற்றினார். அதிலும் பிரிதிவி ஷா அவுட்டானதும் அதிரடி காட்டுவார் என எதிர்பார்த்த நிலையில் 12 பந்துகளில் டெஸ்ட் இன்னிங்ஸ் போல 4 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த அவர் இந்திய இளம் சுழல்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோயிடம் அவுட்டானார்.
இந்த போட்டி மட்டுமல்லாது ஒட்டுமொத்தமாக ஐபிஎல் கிரிக்கெட்டில் டேவிட் வார்னருக்கு எதிராக இதுவரை 3 போட்டிகளில் 6 பந்துகளை மட்டுமே வீசியுள்ள ரவி பிஸ்னோய் அதில் 5 ரன்களை மட்டுமே கொடுத்து 3 முறை அவுட் செய்துள்ளார் என்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் அம்சமாக உள்ளது.

இதை பார்த்த பல ரசிகர்கள் ரவி பிஷ்னோய்க்கு இவ்வளவு திறமையா என மனதார பாராட்டி வருகிறார்கள். ஏனெனில் கடந்த 2020-ஆம் ஆண்டு நடந்த ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையில் அசத்திய அவர் அதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றார். அந்த நிலையில் 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் பஞ்சாப் அணியில் அசத்திய அவர் கடந்த பிப்ரவரி மாதம் சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடந்த டி20 தொடரில் இந்தியாவுக்காக முதல் முறையாக விளையாடும் வாய்ப்பை பெற்றார்.
இதையும் படிங்க : 5 கப் வாங்கி கொடுத்ததால சும்மா விடுறோம்! ரோஹித் மீது அலுத்துக்கொள்ளும் மும்பை ரசிகர்கள் – விவரம் இதோ
அதிலும் அசத்திய அவரை 4 கோடி என்ற பெரிய விலைக்கு லக்னோ அணி வாங்கியது. இப்படி கிரிக்கெட்டில் காலடி வைத்து ஆரம்ப நிலையில் மட்டுமே இருக்கும் அவர் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் போன்ற தரமான ஒருவரை தெறிக்க விட்டு ஓட விடுகிறார் என்றால் நிச்சயமாக திறமை படைத்தவர் என்பதில் சந்தேகமில்லை.



