அதுதான் அவரின் தரம், என்னுடைய லெவனில் இடம் உண்டு – தினேஷ் கார்த்திக்கை மனதார பாராட்டும் முன்னாள் பாக் வீரர்

DInesh Karthik
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 3 போட்டிகளின் முடிவில் தென் ஆப்பிரிக்கா 2 – 1* என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. எனவே சொந்த மண்ணில் தலை நிமிர்ந்து நடக்க கடைசி 2 போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு ரிஷப் பண்ட் தலைமையிலான இந்திய அணியினர் போராட உள்ளனர். முன்னதாக தமிழகத்தைச் சேர்ந்த நட்சத்திர வீரர் தினேஷ் கார்த்திக் 3 வருடங்கள் கழித்து இந்த தொடரின் வாயிலாக இந்திய அணிக்குள் கம்பேக் கொடுத்துள்ளார். முன்னாள் நட்சத்திர ஜாம்பவான் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் எம்எஸ் தோனி இருந்ததால் தனது இளமைக் காலத்தில் பெரும்பாலும் இந்திய அணியில் தொடர்ச்சியாக விளையாடும் வாய்ப்பு இவருக்கு கிடைக்கவில்லை.

Dinesh-Karthik-1

- Advertisement -

இருப்பினும் மனம் தளராமல் உள்ளூர் கிரிக்கெட்டில் தமிழகத்திற்காகவும் ஐபிஎல் தொடரிலும் விளையாடி வந்த இவர் சமீபத்தில் நடந்த ஐபிஎல் 2022 தொடரில் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்று கங்கணம் கட்டி எதிரணிகளை சொல்லி அடித்தார் என்றே கூறலாம். ஆரம்ப காலத்தில் பெரும்பாலும் டாப் ஆர்டரில் விளையாடி வந்த இவர் சமீப காலங்களில் மிடில் ஆர்டரில் விளையாடத் துவங்கியுள்ளார்.

மிரட்டல் டிகே:
அந்த வகையில் 6, 7 போன்ற லோயர் மிடில் ஆடரில் இந்த வருடம் பெங்களூரு அணிக்காக விளையாடிய அவர் விராட் கோலி, டு பிளசிஸ், கிளன் மேக்ஸ்வெல் போன்ற நட்சத்திரங்கள் தடுமாறிய பெரும்பாலான போட்டிகளில் கடைசி நேரத்தில் களமிறங்கி யாருமே எதிர்பாராத வகையில் சரவெடியாக பேட்டிங் செய்து குறைந்தது 4 – 5 போட்டிகளை தனி ஒருவனாக பெற்றுக் கொடுத்திருப்பார் என்றே கூறலாம். அதனால் எம்எஸ் தோனி, பொல்லார்ட், ரசல் என இந்தத் தொடரில் விளையாடிய இதர பினிஷர்களை காட்டிலும் அட்டகாசமாக செயல்பட்ட அவர் இந்த வருடத்தின் மிகச்சிறந்த பினிஷராக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்.

Dinesh Karthik 3

அதிலும் இந்தியாவுக்காக வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற உயர்ந்த லட்சியத்தில் 16 இன்னிங்சில் 330 ரன்களை 183.33 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கிய அவர் ரசல், லிவிங்ஸ்டன் போன்ற வெளிநாட்டு காட்டடி பேட்ஸ்மேன்களை காட்டிலும் இந்த சீசனில் அதிக ஸ்டிரைக் ரேட்டில் ரன்கள் குவித்த பேட்ஸ்மேனாக சாதனை படைத்து அதற்கான ஸ்பெஷல் “சூப்பர் ஸ்ட்ரைக்கர்” விருதையும் வென்றார். அதனால் சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி போன்ற ஜாம்பவான்களின் ஆதரவை பெற்ற அவருக்கு இஷான் கிசான், ரிஷப் பண்ட் போன்ற இளம் விக்கெட் கீப்பர்கள் இருந்தபோதிலும் 36 வயதை கடந்த போதிலும் திறமைக்கு மதிப்பளித்து இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு தாமாக தேடி வந்துள்ளது.

- Advertisement -

ரசித் லதீப் பாராட்டு:
அப்படி பொன்னாக கிடைத்த வாய்ப்பில் 1* (2), 30* (21), 6 (8) என இதுவரை சிறப்பாகவே செயல்பட்டு வரும் அவரை தற்போது முன்னாள் பாகிஸ்தான் வீரர் ரஷித் லதீப் பாராட்டியுள்ளார். அழுத்தமான கடைசி கட்ட ஓவர்களில் லோயர் ஆர்டரில் களமிறங்கி அபாரமாக செயல்படும் திறமை பெற்றுள்ள அவர் உலகின் இதர விக்கெட் கீப்பர்களைக் காட்டிலும் தனித்துவமாக திகழ்கிறார் என்று பாராட்டியுள்ள அவர் தன்னுடைய கனவு அணியில் எப்போதுமே தினேஷ் கார்த்திக்க்கு இடமுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இதுபற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

latif

“உலகில் அனைத்து விக்கெட் கீப்பர்களும் ஒரு பேட்ஸ்மேனாக ஏறக்குறைய சிறப்பாக செயல்படுகின்றனர். இந்த அணியில் கூட சஞ்சு சாம்சன் ஒரு சிறந்த டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக உள்ளார். ஆனால் கடினமான லோயர் ஆர்டருக்கு தினேஷ் கார்த்திக் தான் கச்சிதமாக பொருந்துகிறார். விளையாடும் 11 பேர் அணியில் நேரிடையாக இடம் பிடிக்கும் அளவுக்கு அவரின் புள்ளிவிவரங்கள் பேசுகின்றன”

“பெங்களூரு அணிக்காக இந்த ஐபிஎல் தொடரில் அவர் பேட்டிங் செய்த விதம் அபாரமானது. அவர் லோயர் ஆர்டரில் அதிகபட்ச ஸ்டிரைக் ரேட்டில் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தார். சொல்லப்போனால் டி20 கிரிக்கெட்டில் உலகிலேயே லோயர் ஆர்டரில் அவரை போல் சிறப்பாக செயல்படக்கூடிய விக்கெட் கீப்பர்கள் ஒரு சிலர் மட்டுமே உள்ளனர். இந்த ஐபிஎல் தொடரில் பேட்டிங் செய்த விதத்திற்காகவே தினேஷ் கார்த்திக்கை ப்ளேயிங் லெவனில் நான் தேர்வு செய்வேன்” என்று பாராட்டினார்.

Dinesh Karthik

தற்போதைய தென் ஆப்பிரிக்க தொடரில் சிறப்பாக செயல்பட்டதை தொடர்ந்து வரும் ஜூன் 26, 28 ஆகிய தேதிகளில் அயர்லாந்தில் நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியிலும் தினேஷ் கார்த்திக் தேர்வாகியுள்ளார். அதிலும் அவர் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் டி20 உலக கோப்பையில் தேர்வாவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

Advertisement