
ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வென்று சாதனை படைத்தது. குறிப்பாக கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் லீக் சுற்றில் அசத்திய இந்தியா நாக் அவுட் சுற்றில் தோல்விகளை சந்தித்து வந்தது. ஆனால் அதை தற்போது உடைத்துள்ள இந்தியா 17 வருடங்கள் கழித்து டி20 உலகக் கோப்பையை வென்றது ஒட்டுமொத்த ரசிகர்களையும் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது.
மறுபுறம் இந்தியாவை விட சிறந்தவர்கள், ஐபிஎல் தொடரை விட பிஎஸ்எல் தொடர் தான் சிறந்தது என்று சொல்லக்கூடிய பாகிஸ்தான் சுமாராக விளையாடி லீக் சுற்றுடன் வெளியேறியது. குறிப்பாக முதல் போட்டியிலேயே கத்துக்குட்டியாக கருதப்படும் அமெரிக்காவிடம் சூப்பர் ஓவரில் பாகிஸ்தான் அவமானத் தோல்வியை சந்தித்தது. அத்துடன் இந்தியாவிடம் 120 ரன்களை சேசிங் செய்ய முடியாமல் பாகிஸ்தான் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
நெருங்க முடியாது:
இது போக சமீப காலங்களில் ஜிம்பாப்வே, அயர்லாந்து போன்ற கத்துக்குட்டி அணிகளிடம் தோற்ற பாகிஸ்தான் தற்சமயத்தில் பாதாளத்தில் தவிக்கிறது என்றே சொல்லலாம். இந்நிலையில் ஐபிஎல் முதல் சர்வதேசம் வரை இந்தியாவை தற்சமயத்தில் பாகிஸ்தானால் நெருங்க முடியாது என்று முன்னாள் கேப்டன் ரசித் லத்தீப் தெரிவித்துள்ளார். இதற்கான காரணம் பற்றி நியூஸ்18 தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.
“அவர்களின் திரைத் துறையை போலவே இந்தியா கிரிக்கெட்டிலும் முன்னேறியுள்ளது. நாம் கிரிக்கெட்டை பொழுது போக்காக பார்க்கிறோம். அதனாலேயே நம்மால் அதை வியாபாரமாக மாற்ற முடியவில்லை. அதனாலேயே பிஎஸ்எல் எங்கு துவங்கியதோ அங்கேயே இன்னும் நிற்கிறது. அத்தொடரில் நட்சத்திர வீரருக்கு வழங்கப்படும் அதிகபட்ச சம்பளம் வெறும் 1.40 மில்லியன் டாலர்கள்”
“அதை ஏன் நம்மால் முன்னோக்கி நகர்த்த முடியவில்லை? ஏன் நம்மால் பட் கமின்ஸ் அல்லது மிட்சேல் ஸ்டார்க் போன்றவர்களை கொண்டு வர முடியவில்லை? ஏனெனில் நம்மிடம் பணமில்லை. எனவே வியாபாரமும் இல்லை. இந்தியா ஒன்றும் சமீப காலத்தில் மட்டும் உலக கிரிக்கெட்டின் சக்தியாக உருவெடுக்கவில்லை. 2007, 2011, 2015 காலகட்டங்களில் அவர்கள் வெளிநாட்டு பயிற்சியாளர்களிடமிருந்து நிறைய பாடங்களைக் கற்றனர்”
இதையும் படிங்க: ஐபிஎல் அணியின் பயிற்சியாளராகும் டிராவிட்.. கம்பீர் இந்தியாவின் பயிற்சியாளராக தாமதம் ஏன்? வெளியான தகவல்
“மேலும் கவனிக்கப்படாத அடிப்படைகளில் வேலை செய்தனர். அதன் பின்பே ஐபிஎல் வந்தது. அதன் காரணமாக தற்போது அவர்களிடம் சிறந்த ரிக்கி பாண்டிங், ஹசி, ப்ராவோ போன்ற சிறந்த அறிவைக் கொண்டவர்கள் இருக்கின்றனர்” என்று கூறினார். அத்துடன் இந்தியாவைப் போல பாகிஸ்தானில் கிரிக்கெட்டுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் உலகத்தரமாக இல்லை என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.