வீடியோ : 9 வருடங்களுக்கு பின் ஐபிஎல் வரலாறு படைத்த ரசித் கான், டி20 கிரிக்கெட்டில் ஹாட்ரிக் எடுப்பதில் உலக சாதனை

Rashid Khan
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 9ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு அகமதாபாத் நகரில் நடைபெற்ற 13வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத்தை 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த கொல்கத்தா தங்களது 2வது வெற்றியை பதிவு செய்தது. அந்த போட்டியில் கேப்டன் ஹர்திக் பாண்டியா விலகிய நிலையில் தற்காலிக கேப்டனாக வழி நடத்திய ரஷீத் கான் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய குஜராத் 20 ஓவரில் அதிரடியாக செயல்பட்டு 207/7 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக தமிழக வீரர்கள் சாய் சுதர்சன் 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் 53 (38) ரன்கள் எடுக்க கடைசி நேரத்தில் விஜய் சங்கர் அதிரடியாக 4 பவுண்டரி 5 சிக்ஸருடன் 63* (24) ரன்கள் எடுத்த நிலையில் கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக சுனில் நரேன் 3 விக்கெட்டுகளை எடுத்தார். அதை தொடர்ந்து 205 ரன்களை துரத்திய கொல்கத்தாவுக்கு ரஹ்மத்துல்லா குர்பாஸ் 15, ஜெகதீசன் 6 என தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தாலும் 3வது விக்கெட்டுக்கு 100 ரன்கள் பார்ட்னர்சிப் அமைத்த கேப்டன் நிதிஷ் ராணா 45 (29) ரன்களும் நீண்ட நாட்கள் கழித்து அதிரடியாக விளையாடிய வெங்கடேஷ் ஐயர் 8 பவுண்டரி 5 சிக்ஸருடன் 83 (40) ரன்களும் குவித்து வெற்றியை உறுதி செய்து அவுட்டானார்கள்.

- Advertisement -

ஹாட்ரிக் உலக சாதனை:
ஆனால் அப்போது உள்ளே புகுந்த ரசித் கான் 17வது ஓவரில் மேஜிக் நிகழ்த்தி முதல் 3 பந்துகளில் ஆண்ட்ரே ரசல் 1, சுனில் நரேன் 0, சர்துல் தாக்கூர் 0 என அடுத்தடுத்த 3 வீரர்களை அவுட்டாக்கி ஹாட்ரிக் விக்கெட்டுகளை சாய்த்து போட்டியில் திருப்பு முனையை ஏற்படுத்தினார். அதனால் கொல்கத்தாவின் வெற்றி கிட்டத்தட்ட பறிபோன நிலையில் மனம் தளராமல் போராடிய ரிங்கு சிங் ஜோஸ்வா லிட்டில் வீசிய 19வது ஓவரின் கடைசி 2 பந்துகளில் அடுத்தடுத்த சிக்சர்களை விளாசினார்.

அதை விட யாஷ் தயால் வீசிய கடைசி ஓவரின் கடைசி 5 பந்துகளில் 28 ரன்கள் தேவைப்பட்ட போது அடுத்தடுத்த 5 சிக்சர்களை தெறிக்க விட்ட அவர் 1 பவுண்டரி 6 சிக்சருடன் 48* (21) ரன்கள் விளாசி கொல்கத்தாவுக்கு அசாத்தியமான நம்ப முடியாத வரலாற்று வெற்றியை பெற்றுக் கொடுத்தார். அதன் காரணமாக ரசித் கான் ஹாட்ரிக் விக்கெட்டுகள் போராட்டம் வீணானதால் இந்த சீசனில் குஜராத் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் வாய்ப்பை நழுவ விட்டது.

- Advertisement -

இருப்பினும் ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக ஹாட்ரிக் எடுத்த முதல் பவுலர் என்ற சாதனை படைத்த அவர் ஐபிஎல் வரலாற்றில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்த முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற பெருமையை பெற்றார். அதை விட இப்போட்டியில் கேப்டனாக செயல்பட்டு ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்த அவர் ஐபிஎல் வரலாற்றில் 9 வருடங்களுக்கு பின் ஹாட்ரிக் விக்கெட்டுகளை பதிவு செய்த 3வது கேப்டன் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இதற்கு முன் கடந்த 2009இல் யுவராஜ் சிங் 2 முறையும் 2014ஆம் ஆண்டு ஹைதராபாத் அணிக்கு எதிராக ராஜஸ்தான் அணிக்காக ஷேன் வாட்சனும் முதலிரண்டு கேப்டன்களாக ஹாட்ரிக் விக்கெட்களை எடுத்தனார்.

அதை விட உலகம் முழுவதிலும் நடைபெறும் பிரீமியர் லீக் டி20 தொடர்களில் விளையாடி 500க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்து ஏற்கனவே ஜாம்பவானாக போற்றப்படும் செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் ரசித் கான் இதற்கு முன் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் கரீபியன் பிரீமியர் லீக், ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பேஷ் ஆகிய டி20 தொடர்களிலும் தலா 1 ஹாட்ரிக் எடுத்துள்ளார். அத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானுக்காக 1 முறை ஹாட்ரிக் எடுத்துள்ள அவர் தற்போது ஐபிஎல் தொடரில் எடுத்துள்ள இந்த ஹாட்ரிக் விக்கெட்டையும் சேர்த்து மொத்தம் 4 ஹாட்ரிக் எடுத்துள்ளார்.

இதையும் படிங்க: IPL 2023 : அதிக விலைக்கு வாங்கப்பட்ட 2 சி.எஸ்.கே வீரர்கள் தற்காலிக விலகல் – இதுக்கு அவங்கள வாங்காமலே இருந்திருக்கலாம்

இதன் வாயிலாக ஒட்டுமொத்த உலக டி20 கிரிக்கெட்டில் அதிக முறை ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்ற உலக சாதனையும் ரசித் கான் படைத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக பாகிஸ்தானின் முகமது சமீ, ஆஸ்திரேலியாவின் ஆண்ட்ரூ டை, வெஸ்ட் இண்டீஸின் ஆண்ட்ரே ரசல், தென் ஆப்பிரிக்காவின் இம்ரான் தாகிர், இந்தியாவின் அமித் மிஸ்ரா ஆகியோர் தலா 3 ஹாட்ரிக் விக்கெட்களை எடுத்துள்ளதே முந்தைய சாதனையாகும்.

Advertisement