
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரங்கனா ஹெராத் அந்நாட்டின் சிறந்த ஸ்பின்னர்களில் ஒருவராக போற்றப்படுகிறார். முதல் தர கிரிக்கெட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விக்கெட்டுகள் எடுத்துள்ள அவர் சர்வதேச கிரிக்கெட்டில் 500க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் 434 விக்கெட்டுகளை எடுத்துள்ள அவர் இலங்கையின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார்.
குறிப்பாக 2014 டி20 உலகக் கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான முக்கியமான போட்டியில் அவர் 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அந்த வகையில் கடைசியாக இலங்கை டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் 2018ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இந்நிலையில் உலக கிரிக்கெட்டில் தற்சமயத்தில் தமக்கு பிடித்த சிறந்த ஸ்பின்னர்களை ஹெராத் தேர்வு செய்துள்ளார்.
பிடித்த ஸ்பின்னர்கள்:
அதில் முதலாவதாக இந்தியாவின் ரவிச்சந்திரன் மற்றும் ஆஸ்திரேலியாவின் நேதன் லயன் ஆகியோர் தமக்கு மிகவும் பிடித்த ஸ்பின்னர்கள் என்று அவர் பாராட்டியுள்ளார். கடந்த 10 வருடங்களாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ராஜாங்கம் நடத்தி வரும் அஸ்வின் மற்றும் நேதன் லயன் தலா 500 விக்கெட்டுகளை எடுத்துள்ளனர். அந்த இருவரையும் தேர்ந்தெடுத்துள்ள ஹெராத் இந்தியாவின் இளம் ஸ்பின்னர் குல்தீப் யாதவும் பிடித்த ஸ்பின்னர் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தென்னாபிரிக்காவின் கேசவ் மகாராஜ் இலங்கையின் பிரபத் ஜெயசூர்யா ஆகியோரும் தமக்கு பிடித்த ஸ்பின்னர்கள் என்று ஹெராத் கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “விரல் ஸ்பின்னர்கள் என்று பார்க்கும் போது ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் நேதன் லயன் ஆகியோரை பிடிக்கும். அதே போல தென்னாப்பிரிக்காவில் இருந்து கேசவ் மகாராஜ்”
“இந்திய வீரர் குல்தீப் யாதவ் பந்து வீசுவதை நான் எப்போதும் ஆர்வமாக பார்ப்பேன். இலங்கை அணியிலிருந்து கண்டிப்பாக பிரபத் ஜெயசூர்யாவை பிடிக்கும். எனவே பிடித்த ஸ்பின்னர்கள் என்று வரும் போது அவர்களின் பெயர்கள் தான் எனது மனதிற்குள் வரும்” என்று கூறினார். இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் ஸ்பின்னர்களை வைத்து இந்தியாவை 27 வருடங்கள் கழித்து இலங்கை தோற்கடித்தது.
இதையும் படிங்க: ரோஹித்தை விட அவர் தான் சிறந்த ஸ்பின் பேட்ஸ்மேன்.. இந்தியா தங்களோட பிட்ச்களை மாத்தணும்.. சல்மான் பட்
குறிப்பாக துணித் வெல்லாலகே, ஃஜெப்ரி வண்டர்சே ஆகிய ஸ்பின்னர்கள் விராட் கோலி உள்ளிட்ட தரமான இந்திய பேட்ஸ்மேன்களை சாய்த்தனர். அதனால் நம்பர் ஒன் அணியாக இருக்கும் வலுவான இந்தியாவை 1997க்குப்பின் ஒருநாள் தொடரில் வீழ்த்தி இலங்கை வெற்றி வாகை சூடியது. அந்த வெற்றியை தற்போது இலங்கை ரசிகர்கள் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.