உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வதற்காக அனைத்து அணிகளும் இறுதிக்கட்டமாக தயாராகி வருகின்றன. அதில் பல்வேறு அம்சங்களிலும் தங்களை புறக்கணிக்க நினைக்கும் இந்தியாவுக்கு தங்களுடைய பலத்தை காட்டி அவர்களின் சொந்த மண்ணில் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியினர் 7 வருடங்கள் கழித்து முதல் முறையாக வந்துள்ளனர்.
இருப்பினும் நியூசிலாந்துக்கு எதிராக நேற்று முன்தினம் ஹைதராபாத்தில் நடைபெற்ற பயிற்சி போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் பரிதாபமாக தோற்றது. இத்தனைக்கும் அந்த போட்டியில் ஆரம்பத்திலேயே டாஸ் அதிர்ஷ்டத்தை பெற்ற பாகிஸ்தான் 50 ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டு 346 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 103 ரன்களும் பாபர் அசாம் 80 ரன்களும் குவித்து அசத்தினார்கள்.
கருணை காட்டாதீங்க:
ஆனால் அதைத் துரத்திய நியூசிலாந்துக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா 97, காயத்திலிருந்து குணமடைந்த கேன் வில்லியம்சன் 54*, மார்க் சாப்மேன் 65*, டார்ல் மிட்சேல் 59* ரன்களும் எடுத்து எளிதாக வெற்றி பெற வைத்தனர். அந்த வகையில் சிறந்த பவுலிங் கூட்டணியை கொண்டிருந்தும் நீண்ட நாட்கள் கழித்து இந்திய மண்ணில் களமிறங்கிய முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் தோற்றது.
அதனால் ஏற்கனவே 2023 ஆசிய கோப்பையிலும் படுதோல்வியை சந்தித்த அந்த அணி இந்த உலகக் கோப்பையில் சாதிக்குமா என்ற தயக்கம் பாகிஸ்தான் ரசிகர்களிடம் இருக்கிறது. இந்நிலையில் ஹைதராபாத் பிட்ச் பந்து வீச்சுக்கும் சாதகமாக இல்லாமல் பேட்டிங்க்கு மட்டும் அதிக சாதகமாக இருந்ததாக ரமீஸ் ராஜா கூறியுள்ளார். எனவே இந்த உலகக்கோப்பை முழுவதும் இந்தியாவில் சமமான பிட்ச்களை எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
அதனால் இது போன்ற பிட்ச்கள் தான் கிடைக்கும் என்பதை தெரிந்து வெற்றிக்காக எதிரணிக்கு கருணை காட்டாமல் அனைத்து போட்டியிலும் பாகிஸ்தான் 400 ரன்களை அடிக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இது பயிற்சி போட்டி என்பதை நான் அறிவேன். ஆனால் வெற்றி என்பது வெற்றியே. வெற்றி என்பது பொழுதுபோக்காக இருக்க வேண்டும். ஆனால் பாகிஸ்தான் தற்போது தோல்வியை பொழுதுபோக்காக சந்திப்பதாக நான் உணர்கிறேன்”
இதையும் படிங்க: எனக்கு இதெல்லாம் பழகிப்போச்சி .. ஆனாலும் என்னோட ஆசை இதுமட்டும் தான் – உ.கோ வாய்ப்பை இழந்த சாஹல் பேட்டி
“முதலில் ஆசிய கோப்பையில் தோற்ற அவர்கள் தற்போது இங்கு தோற்றுள்ளார்கள். குறிப்பாக பாகிஸ்தான் 345 ரன்கள் அடித்தும் எதிரணி அதை சேசிங் செய்து விட்டனர். எனவே இந்திய மண்ணில் இது போன்ற பிட்ச்கள் தான் உங்களுக்கு கிடைக்கும். அதனால் பந்து வீச்சில் சற்று தடுமாறும் நீங்கள் தொடர்ந்து 400 ரன்கள் அடிக்க வேண்டும். நீங்கள் அதற்கு தகுந்தார் போல் திட்டங்களை மாற்றி ரிஸ்க் எடுக்க வேண்டும். ஆனால் நாம் அதை செய்வதில்லை. மாறாக முதல் 10 – 15 ஓவர்கள் மெதுவான ஆட்டத்தை வெளிப்படுத்தி பின்னர் வேகமாக அடிக்க முயற்சிக்கிறோம்” என்று கூறினார்.



