ஆசியக் கோப்பை 2025 தொடரில் பாகிஸ்தான் அணிக்கு இந்திய அணி கை கொடுக்காமல் வெளியேறியது சர்ச்சையை உண்டாக்கியது. சில மாதங்களுக்கு முன்பாக பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் நடத்திய தாக்குதலில் 26 இந்தியர்கள் இயற்கை எய்தினார்கள். அதற்கு பதிலடி கொடுக்கும் நோக்கத்தில் ஆசியக் கோப்பையில் டாஸ் வீசிய பின்பும் போட்டி முடிந்த பின்பும் இந்திய அணி பாகிஸ்தானுக்கு கை கொடுக்கவில்லை.
அதனால் அதிருப்தியடைந்த பாகிஸ்தான் வாரியம் இந்தியா மீது ஐசிசியில் புகார் செய்தது. மேலும் இரு அணி கேப்டன்களும் கை கொடுத்துக் கொள்ளாதீர்கள் என்று போட்டி நடுவர் ஆண்டி பைகிராஃப்ட் தனிப்பட்ட முறையில் கேட்டுக் கொண்டதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியது. எனவே அவரை உடனடியாக நீக்காவிட்டால் ஆசியக் கோப்பையிலிருந்து பாகிஸ்தான் வெளியேறும் என்றும் அறிவிக்கப்பட்டது.
மன்னிப்பு கேட்டாங்க:
இருப்பினும் விதிமுறைகளை மீறாத இந்திய அணி மற்றும் பைஃகிராப்ட் மீது ஐசிசி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் நேற்று அமீரகத்துக்கு எதிரானப் போட்டியிலிருந்து பாகிஸ்தான் விலகுவதாக செய்திகள் வெளியானது. அதற்கு தகுந்தார் போல் 8 மணிக்குத் துவங்க வேண்டிய போட்டியில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் வீரர்கள் துபாய் வரவில்லை.
அப்போது இஸ்லாமாபாத்தில் இந்நாள், முன்னாள் பாகிஸ்தான் வாரியத் தலைவர்கள் பங்கேற்ற அவசரக் கூட்டம் நடைபெற்றது. அதில் ஆசியக் கோப்பையிலிருந்து விலகினால் பாகிஸ்தானுக்கு பல லட்சம் டாலர்கள் இழப்பு ஏற்படும் என்பது கருத்தில் கொள்ளப்பட்டது. எனவே நடுவர் ஃபைகிராப்ட் மன்னிப்பு கேட்டதைத் தொடர்ந்து ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் தொடர்ந்து விளையாடும் என்று அறிவிக்கப்பட்டது.
நீதி வென்றது:
அதற்கு ஆதாரமாக பைகிராஃப்ட் பாகிஸ்தான் அணியிடம் மன்னிப்பு கேட்கும் ஒலியற்ற வீடியோவையும் அந்நாட்டு வாரியம் வெளியிட்டது. இந்நிலையில் இந்தியா தங்களுக்கு கை கொடுக்காத விவகாரத்தில் நீதி வென்றதாக முன்னாள் பாகிஸ்தான் வாரியத் தலைவர் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார். ஏனெனில் இந்தியாவின் நிரந்தர நடுவராக பிக்சிங் செய்யப்பட்ட பைகிராஃப்ட் பாகிஸ்தானிடம் மன்னிப்பு கேட்டதாக அவர் கூறியுள்ளார்.
மேலும் பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியை இந்திய ராணுவத்துக்கு அர்பணிப்பதாக தெரிவித்த சூரியகுமாரை விளாசிய அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இது எங்களுக்கு வெற்றியாகும். அந்த இக்கட்டான சூழ்நிலையில் உணர்வுகள் உச்சமாக ஓடின. அப்போது நாங்கள் உணர்வுபூர்வமாக எந்த முடிவையும் எடுக்கவில்லை என்பதில் மகிழ்ச்சியடைகிறேன். ஒருவேளை நாங்கள் ஆசியக் கோப்பையிலிருந்து வெளியேறினால் எங்களுடைய கிரிக்கெட் பாதிப்படையும்”
ராஜாவின் உருட்டு:
“போட்டியின் முடிவில் (சூரியகுமார்) சொல்லப்பட்டதில் தான் எனது மிகப்பெரிய ஆட்சேபனை இருந்தது. அதற்காக மன்னிப்பு வந்தால் அது நல்லது. களத்தில் கிரிக்கெட் அரசியலாக மாறினால் எதுவும் சாதிக்க முடியாது. எங்களுடைய அணி இன்னும் சிறப்பாக விளையாடும் என்று நம்புகிறேன். ஃபைகிராப்ட் எப்போதும் இந்தியா அணிக்கு சாதகமானவர் என்பதை நான் பார்த்துள்ளேன்”
இதையும் படிங்க: இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் நான் பேட்டிங்கில் அசத்த காரணமே அவர்தான் – வாஷிங்டன் சுந்தர் பகிர்வு
“இந்திய அணி என்று வரும் போது அவர்தான் நிரந்தர ஃபிக்ஸராக இருக்கிறார். இதுவரை அவர் 90 இந்திய போட்டிகளில் நடுவராக இருந்துள்ளார். பொதுவான கிரிக்கெட்டில் அப்படி இருக்கக்கூடாது” என்று கூறினார். ஆனால் ஃபைகிராப்ட் 124 இந்தியா, 107 இங்கிலாந்து, 102 பாகிஸ்தான், 202 மற்ற அணிகள் என மொத்தம் 535 போட்டிகளில் நடுவராக இருந்துள்ளார். எனவே ரமீஸ் இந்தியா மீது பொய்யான குற்றச்சாட்டை வைப்பது குறிப்பிடத்தக்கது.



