சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 44-வது லீக் போட்டியானது நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை அணி சார்பாக பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. அந்த வகையில் கடந்த போட்டியின் போது விளையாடியிருந்த குர்ஜப்நீத் சிங் மற்றும் அகில் ஹுசைன் ஆகியோர் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர்.
அறிமுக போட்டியிலேயே காயமடைந்த சி.எஸ்.கே வீரர் :
அவர்களுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ராமகிருஷ்ணா கோஷ் மற்றும் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான பிரசாந்த் வீர் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதிலும் குறிப்பாக 28 வயதான மகாராஷ்டிராவை சேர்ந்த வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ராமகிருஷ்ணா கோஷிற்கு நேற்றைய போட்டியின் போது அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டது.
அந்த வகையில் இந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசிய அவர் 3 ஓவர்களை வீசி 24 ரன்களை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றி அசத்தியிருந்தார். அறிமுக போட்டியிலேயே சூரியகுமார் யாதவ் விக்கெட்டை அவர் வீழ்த்தியிருந்த வேளையில் நேற்றைய போட்டியின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது அவருக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தவும் வாய்ப்பிருக்கிறது.
நேற்று அவர் வீசிய முதலாவது ஓவரிலேயே கீழே விழுந்து தசைப்பிடிப்பை சந்தித்த அவர் எப்படியோ மூன்று ஓவர்களை வீசி இருந்தாலும் மைதானத்தில் அவ்வப்போது கால் பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக அசவுகரியத்தை சந்தித்தார். வீரர்களுக்கு காயம் ஏற்படுவது சகஜம் தான் என்றாலும் முதல் போட்டியிலேயே காயமடைந்த அவர் அடுத்த போட்டியில் விளையாடுவாரா? மாட்டாரா? என்பதும் சந்தேகமாகியுள்ளது.
இதையும் படிங்க : மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக மாபெரும் சாதனையுடன் வெற்றியை பதிவுசெய்த சி.எஸ்.கே – விவரம் இதோ
இருப்பினும் போட்டி முடிந்து அவரது காயம் குறித்து பேசிய சென்னை அணியின் பயிற்சியாளர் பிளமிங் கூறுகையில் : அவர் சிறிய தசை பிடிப்பினால் தான் அவதிப்பட்டு உள்ளார் அடுத்த போட்டிக்கு இன்னும் இடைவெளி இருப்பதால் அவர் அடுத்த போட்டிக்குள் தயாராகி விடுவார் என்று தெரிவித்துள்ளார். இப்படி அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது சிறிய ஏமாற்றம் தான் என்றும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



