கடந்த மார்ச் 28-ஆம் தேதி இந்தியாவில் துவங்கிய 2026-ஆம் ஆண்டிற்கான நடப்பு 19-ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் பத்து அணிகள் பங்கேற்று விளையாடி வரும் இந்த தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று சாம்பியன் பட்டத்தை வெல்லப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. இவ்வேளையில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஜாம்பவான் அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையேயான 44-வது லீக் போட்டியானது நடைபெற்றது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சாதனை நிகழ்த்திய சி.எஸ்.கே :
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் குவித்தது. மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக நமன் தீர் 57 ரன்களையும், ரயான் ரிக்கல்டன் 37 ரன்களையும் குவித்தனர். அதனால் 160 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு சி.எஸ்.கே அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.
அதனை துரத்தி விளையாடிய சி.எஸ்.கே அணியானது மும்பை அணியின் பந்துவீச்சை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு 18.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 160 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பாக அதிகபட்சமாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 67 ரன்களையும், கார்த்திக் சர்மா 54 ரன்களையும் குவித்து ஆட்டமிழக்காமல் சென்னை அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர்.
இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி இந்த தொடரில் தங்களது நான்காவது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் ஆறாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக பெற்ற வெற்றியின் மூலம் மாபெரும் சாதனை ஒன்றினையும் ஐ.பி.எல் போட்டிகளில் நிகழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க : கேப்டன் என்கிட்ட சொன்ன விடயம் இதுதான்.. முதல் அரைசதத்தை பதிவு செய்தது மகிழ்ச்சி – கார்த்திக் சர்மா பூரிப்பு
அதாவது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக இதுவரை எத்தனையோ போட்டிகளில் சி.எஸ்.கே அணி விளையாடி வெற்றி பெற்றிருந்தாலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக அவர்கள் பெற்ற மிகப்பெரிய வெற்றியாக இந்த வெற்றி பதிவாகியுள்ளது. அதோடு கடந்த 2020-ஆம் ஆண்டிற்கு பின்னர் மும்பை அணிக்கு எதிராக 13 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணியானது ஒன்பது வெற்றிகளை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.



