மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 44-வது லீக் ஆட்டத்தில் விளையாடிய சி.எஸ்.கே அணியானது 8 விக்கெட் வித்யாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்று முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் அடித்தது.
கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கொடுத்த அட்வைஸ் இதுதான் : கார்த்திக் சர்மா
பின்னர் 160 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 18.1 ஓவரில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 160 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது சி.எஸ்.கே அணி சார்பாக ருதுராஜ் கெய்க்வாட் 67 ரன்களையும், கார்த்திக் சர்மா 54 ரன்களையும் குவித்து சென்னை அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
அதிலும் குறிப்பாக இளம் வீரரான கார்த்திக் சர்மா 40 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் என 54 ரன்கள் குவித்து ஐ.பி.எல் போட்டியில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்து சென்னை அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தனது சிறப்பான செயல்பாடு குறித்து பேசிய கார்த்திக் சர்மா கூறியதாவது :
இந்த போட்டியில் நான் இறுதிவரை நின்று போட்டியை வெற்றிகரமாக முடித்துக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அந்த நேரத்தில் ருதுராஜ் கெய்க்வாட் நான் களமிறங்கும் போது என்னிடம் வந்து “நீ உன்னுடைய இயல்பான ஆட்டத்தை விளையாடு”, வேறு எதையும் புதிதாக முயற்சி செய்ய வேண்டாம். நீ உன்னுடைய ஆட்டத்தை விளையாடி அணிக்கு வெற்றியை தேடித்தர வேண்டும் என்று எனக்கு நம்பிக்கை ஊட்டினார்.
இதையும் படிங்க : எங்களை விட அவங்க ரொம்ப சூப்பரா ஆடிட்டாங்க.. தோல்விக்கு பிறகு உண்மையை ஒப்புக்கொண்ட – ஹார்டிக் பாண்டியா
அவர் கூறியபடியே நான் இந்த மைதானத்தின் தன்மையை கணித்து நன்றாக பேட்டிங் செய்ததாக உணர்கிறேன். இது என்னுடைய முதல் ஐ.பி.எல் அரைசதம் இந்த அரைசதம் மும்பை அணிக்கு எதிராக வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அதிலும் குறிப்பாக இந்த அரைசதம் வெற்றியுடன் முடிந்துள்ளது கூடுதல் மகிழ்ச்சி என கார்த்திக் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.



