57/4 டூ 168/5.. 216 ஸ்ட்ரைக் ரேட்டில் தூக்கி நிறுத்திய ராஜ்குமார் அதிரடியில்.. தமிழ்நாடு முதல் வெற்றி

Tamil nadu Team
- Advertisement -

இந்தியாவில் சயீத் முஸ்டாக் அலி கோப்பை 2025 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகின்றது. அந்தத் தொடரில் வருண் சக்கரவர்த்தி தலைமையில் களமிறங்கியுள்ள தமிழ்நாடு அணி தங்களது முதல் 2 போட்டிகளில் ராஜஸ்தான் மற்றும் டெல்லியிடம் தோற்றது. அதைத் தொடர்ந்து தமிழ்நாடு தங்களின் 3வது போட்டியில் உத்தரகாண்ட் அணியை நவம்பர் 30ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் எதிர்கொண்டது.

அந்தப் போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய உத்தரகாண்ட் அணி 20 ஓவரில் போராடி 164/6 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக யுவ்ராஜ் சௌத்ரி அதிரடியாக 74 (53), கேப்டன் குணால் சண்டேலா 47 (32) ரன்கள் எடுத்தனர். ஆனால் மற்ற வீரர்கள் யாருமே 20 ரன்கள் கூட தாண்டவில்லை.

- Advertisement -

ராஜ்குமார் அசத்தல்:

அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய தமிழ்நாடு அணிக்கு நடராஜன், வருண் சக்கரவர்த்தி, சோனு யாதவ், குர்ஜப்நீத் சிங் தலா 1 விக்கெட் எடுத்து அசத்தினார்கள். அடுத்ததாக 165 ரன்களை துரத்திய தமிழ்நாடு அணிக்கு முதல் ஓவரிலேயே துசார் ரஹிஜா டக் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். அடுத்த ஓவரில் அடுத்து வந்த சாய் சுதர்சன் 1 (3) ரன்னில் அவுட்டாகி பெரிய பின்னடைவை ஏற்படுத்தினார்.

அதே போல மறுபுறம் அதிரடி காட்ட முயற்சித்த அமித் சாத்விக் 24 (17) ரன்னில் பெவிலியன் திரும்பினார். இருப்பினும் அடுத்து வந்த ராஜ்குமார் அதிரடியாக விளையாடினார். ஆனால் எதிர்ப்புறம் கை கொடுக்க முயற்சித்த நம்பிக்கை நட்சத்திரம் நாராயன் ஜெகதீசன் 20 (15) ரன்களில் அவுட்டாகி பெருத்த ஏமாற்றத்தையே கொடுத்தார்.

- Advertisement -

தமிழ்நாடு வெற்றி:

அதனால் 57/4 எனத் தடுமாறிய தமிழக அணியின் வெற்றி கேள்விக்குறியானது. அப்போது மறுபக்கம் ராஜ்குமார் பொறுப்பாகவும் அதே சமயம் அதிரடியாகவும் விளையாடி அரை சதமடித்து தமிழக அணியை தூக்கி நிறுத்தினார். அவருக்கு எதிர்ப்புறம் கைகொடுக்க முயற்சித்த சாருக்கான் 7 (9) ரன்னில் விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக வந்த சோனு யாதவ் நங்கூரமாக விளையாடி 17* (14) ரன்கள் குவித்து அசத்தினார்.

இதையும் படிங்க: ரிக்கி பாண்டிங்கின் மாபெரும் சாதனை முறியடித்து வரலாறு படைத்த விராட் கோலி – விவரம் இதோ

அதைப் பயன்படுத்திய ஆர்.ராஜ்குமார் கடைசி வரை அவுட்டாகாமல் 6 பவுண்டரி 8 சிக்சரை பறக்க விட்டு 93* (43) ரன்களை 216.28 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி ஃபினிஷிங் செய்தார். அதனால் 17.1 ஓவரிலேயே 168/5 ரன்களை எடுத்த தமிழ்நாடு அணி போராடி தங்களது முதல் வெற்றியைப் பெற்றது. அதனால் எலைட் குரூப் டி பிரிவின் புள்ளிப்பட்டியலில் தமிழ்நாடு அணி 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. உத்தரகாண்ட் அணிக்கு அதிகபட்சமாக யுவராஜ் சௌத்ரி 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.

Advertisement