3வது போட்டியிலிருந்து இரவோடு இரவாக அஸ்வின் விலகியது ஏன்? பின்னணியை உடைத்த பிசிசிஐ துணை தலைவர்

Rajiv Shukla
- Advertisement -

ராஜ்கோட் நகரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதி வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 15ஆம் தேதி துவங்கிய அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா கேப்டன் ரோஹித் சர்மா 131, ரவீந்திர ஜடேஜா 112, சர்பராஸ் கான் 62 ரன்கள் எடுத்த உதவியுடன் முதல் இன்னிங்சில் 445 ரன்கள் எடுத்து அசத்தியது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்துக்கு ஜாக் கிராவ்லி 15, ஓலி போப் 39 ரன்களில் அவுட்டானாலும் பென் டக்கேட் அதிரடியாக விளையாடி சதமடித்து 153 (151) ரன்கள் எடுத்தார். அதனால் இங்கிலாந்து 290 ரன்கள் கடந்து இந்த போட்டியில் இந்தியாவுக்கு சவாலை கொடுத்து வருகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் அனுபவமிகுந்த நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இப்போட்டியிலிருந்து விலகியுள்ளது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

காரணம் என்ன:
குறிப்பாக குடும்பத்தில் ஏற்பட்ட அவசர சூழ்நிலை காரணமாக ரவிச்சந்திரன் அஸ்வின் பாதியிலேயே வெளியேறுவதாக அறிவித்த பிசிசிஐ அவருக்கு தேவையான ஆதரவை கொடுப்போம் என்று கூறியுள்ளது. 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக் கோப்பை ஃபைனலில் பெஞ்சில் இருந்த அஸ்வின் எப்போதுமே தமக்கு விளையாடும் 11 பேர் அணியில் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை இந்தியாவுக்காக விளையாட தயாராக இருப்பேன் என்ற கோட்பாட்டை கொண்டவர்.

அப்படிப்பட்ட அவர் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது இப்படி பாதியிலேயே இரவோடு இரவாக வெளியேறியுள்ளார் என்றால் நிச்சயமாக குடும்பத்தில் ஏதோ ஒரு அவசர நிலை ஏற்பட்டிருக்கும் என்றே சொல்லலாம். எனவே அதை புரிந்துக் கொண்டு ரசிகர்களும் அஸ்வினுக்கு தேவையான வாழ்த்துகளும் ஆதரவும் தெரிவித்து வருகின்றார்கள்.

- Advertisement -

இந்நிலையில் தம்முடைய அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தாலேயே ராஜ்கோட் டெஸ்ட் போட்டியிலிருந்து அஸ்வின் பாதியிலேயே வெளியேறியதாக பிசிசிஐ துணை செயலாளர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். அது பற்றிய பின்னணியை ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “ரவிச்சந்திரன் அஸ்வினின் அம்மா விரைவில் குணமடைவதற்கு வாழ்த்துகிறேன். தன்னுடைய அம்மாவுடன் இருக்க வேண்டிய காரணத்தாலேயே ராஜ்கோட் டெஸ்ட் போட்டியிலிருந்து அவர் அவசரமாக வெளியேறினார்” என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: வெறும் 29 இன்னிங்ஸில் 13 முறை.. டக்கட்டை அவுட்டாக்கிய குல்தீப்.. ரூட்டை காலி செய்த பும்ரா அசத்தல் சாதனை

முன்னதாக இப்போட்டியில் ஜாக் கிராவ்லி விக்கெட்டை எடுத்த அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை எடுத்த இரண்டாவது இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனை படைத்தார். அத்துடன் முத்தையா முரளிதரனுக்கு பின் அதிவேகமாக 500 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்த இரண்டாவது வீரர் என்ற வரலாற்றையும் அஸ்வின் படைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement