இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 23-வது லீக் போட்டியானது நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற பெங்களூரு அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
ஒரு கேப்டனாக வேறு என்ன எனக்கு வேணும் : ரஜத் பட்டிதார் மகிழ்ச்சி
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி பெங்களூரு அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 146 ரன்கள் மட்டுமே குவித்தது. லக்னோ அணி சார்பாக அதிகபட்சமாக மிட்சல் மார்ஷ் 40 ரன்களையும், முகுல் சவுத்ரி 39 ரன்களையும் குவித்தனர்.
பின்னர் 147 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 15.1 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை குவித்து 5 விக்கெட் வித்யாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றது. இந்த போட்டியின் போது ஆர்.சி.பி அணி சார்பாக அதிகபட்சமாக விராட் கோலி 49 ரன்களையும், பட்டிதார் 27 ரன்களையும் குவித்தனர். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய ஆர்.சி.பி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் கூறுகையில் :
உண்மையிலேயே இந்த போட்டியில் எங்களது அணியின் பந்துவீச்சு மிகச் சிறப்பாக இருந்தது. டாசில் வெற்றி பெற்ற பிறகு நாங்கள் எடுத்த முடிவு சரியானது என பந்துவீச்சாளர்கள் நிரூபித்து காட்டினர். வேகப்பந்து வீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்து வீசியிருந்தார்கள். அதேபோன்று க்ருனால் பாண்டியாவும் அட்டகாசமாக பந்து வீசியிருந்தார். சுயாஷ் சர்மாவும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார். புவனேஸ்வர் குமார் மற்றும் ஹேசல்வுட் போன்ற ஸ்பெஷலிஸ்ட் பந்துவீச்சாளர்கள் இருக்கும்போது வேறு என்ன வேண்டும்? அவர்களுக்கு நான் எதுவும் கூற வேண்டாம்.
இதையும் படிங்க : அடுத்த போட்டியில் ரிஷப் பண்ட் விளையாட வாய்ப்பில்லை.. கேப்டனாக மாறிய நிக்கோலஸ் பூரான் – என்ன நடந்தது?
அவர்களே அனுபவம் வாய்ந்த மிகச் சிறப்பான வீரர்கள் என்பதனால் அவர்களுடைய வேலையை அவர்களே பூர்த்தி செய்து விடுகிறார்கள். அதேபோன்று மத்த பந்துவீச்சாளர்களுக்கும் அவர்கள் உதவுகிறார்கள். பீல்டிங்கிலும் எங்களது அணியின் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அதிலும் பிலிப் சால்ட் அற்புதமாக செயல்பட்டு வருகிறார். இப்படி பௌலிங் மற்றும் பீல்டிங் என இரண்டிலும் இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டு அற்புதமான வெற்றியை பெற்றுள்ளோம் என ரஜத் பட்டிதார் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.



