சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் மிக முக்கிய லீக் போட்டியானது நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெங்களூரு அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி சாதனை நிகழ்த்தியது. கடந்த 2008-ஆம் ஆண்டிற்கு பிறகு 17 ஆண்டுகளுக்கு கழித்து சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து சிஎஸ்கே அணியை தோற்கடித்த ஆர்.சி.பி அணிக்கு தற்போது வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.
சேப்பாக்கத்தில் ரஜத் பட்டிதார் நிகழ்த்திய சாதனை :
நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பெங்களூரு அணி சிஎஸ்கே அணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களை குவித்தது. பின்னர் 197 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய சிஎஸ்கே அணியால் 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது.
இதன் காரணமாக 50 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அசத்தலான வெற்றியை பெற்றது. இந்த போட்டியின் போது டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்ததால் சென்னை அணிக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகம் என்று பலராலும் பேசப்பட்டது. ஆனால் இந்த போட்டியின் துவக்கம் முதலே மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெங்களூர் அணி அதிரடியான ரன் குவிப்பில் ஈடுபட்டது.
பெங்களூரு அணி சார்பாக அதிகபட்சமாக ரஜத் பட்டிதார் 32 பந்துகளை சந்தித்து 4 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் என 51 ரன்கள் குவித்து அந்த அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக திகழ்ந்ததோடு மட்டுமின்றி சென்னை அணிக்கு எதிராக சேப்பாக்கம் மைதானத்தில் ஒரு வித்தியாசமான சாதனையும் நிகழ்த்தியுள்ளார். அதோடு அந்த சாதனையை அவர் நிகழ்த்த சென்னை அணியின் வீரர்களே காரணமாக மாறியது குறித்த தகவலும் வெளியாகி உள்ளது.
அந்த வகையில் கடந்த 2013-ஆம் ஆண்டு சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஆர்சிபி அணியின் கேப்டனாக விராட் கோலி அரைசதம் அடித்திருந்தார். அவரை தவிர்த்து எந்த ஒரு ஆர்.சி.பி கேப்டனும் சேப்பாக்கம் மைதானத்தில் அரைசதம் அடித்தது கிடையாது. இந்நிலையில் அந்த சாதனையை நேற்று பூர்த்தி செய்த ரஜத் பட்டிதார் விராட் கோலிக்கு அடுத்து சேப்பாக்கம் மைதானத்தில் அரைசதம் அடித்த இரண்டாவது ஆர்.சி.பி கேப்டனாக தனது பெயரை பதிவு செய்தார்.
இதையும் படிங்க : சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்து சி.எஸ்.கே அணிக்காக வரலாறு படைத்த தல தோனி – விவரம் இதோ
அதிலும் குறிப்பாக அவர் இந்த அரைசதம் அடிக்க சிஎஸ்கே வீரர்கள் அவருக்கு மூன்று முறை கேட்ச் வாய்ப்பை தவறவிட்டதே காரணமாக அமைந்தது. இந்த போட்டியில் பட்டிதார் 17, 19, 20 ஆகிய ரன்களில் இருந்த போது கொடுத்த எளிதான 3 கேட்ச் வாய்ப்புகளை சிஎஸ்கே அணியின் வீரர்கள் கோட்டை விட்டனர். அந்த அதிர்ஷ்டத்தை சரியாக பயன்படுத்திய அவர் சி.எஸ்.கே பந்துவீச்சாளர்களுக்கு பதிலடி கொடுத்து இந்த அரைசதத்தை விளாசியது குறிப்பிடத்தக்கது.



