நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான 18-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஆரம்பகட்ட லீக் போட்டிகள் தற்போது தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில் நேற்று சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி அணிகளுக்கு இடையேயான 8-ஆவது லீக் ஆட்டமானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சி.எஸ்.கே அணியும், ரஜத் பட்டிதார் தலைமையிலான பெங்களூரு அணியும் மோதின.
சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்த தல தோனி :
அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய பெங்களூரு அணியானது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் குவித்தது.
பின்னர் 197 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களை மட்டுமே குவிக்க முடிந்ததால் 50 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் போது சென்னை அணியின் சார்பாக ஒன்பதாவது வீரராக களமிறங்கிய மகேந்திர சிங் தோனி 16 பந்துகளை சந்தித்து 3 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் என 30 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார். அவர் அடித்த இந்த 30 ரன்கள் முன்னாள் சிஎஸ்கே வீரரான சுரேஷ் ரெய்னாவின் மாபெரும் சாதனை ஒன்றினையும் முறியடித்துள்ளார். அதுகுறித்த தகவல் தற்போது வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த வகையில் இதுவரை ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரராக சுரேஷ் ரெய்னா முதலிடத்தில் இருந்தார். கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை 171 இன்னிங்ஸ்களில் சி.எஸ்.கே அணிக்காக விளையாடியுள்ள ரெய்னா ஒரு சதம் மற்றும் 33 அரைசதம் என 4687 ரன்களை குவித்திருந்தார். அவரது இந்த சாதனையை தான் தற்போது தோனி முறியடித்துள்ளார்.
இதையும் படிங்க : ஷிகர் தவானை பின்னுக்கு தள்ளி சி.எஸ்.கே அணிக்கு எதிராக சரித்திரம் படைத்த விராட் கோலி – விவரம் இதோ
இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 204 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள அவர் 22 அரைசதங்களுடன், 40.25 ரன்கள் சராசரியுடன் 4699 ரன்கள் குவித்து சிஎஸ்கே அணி சார்பாக அதிக ரன்கள் குவித்த வீரராக முதலிடத்திற்கு முன்னேறி வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



