ஐபிஎல் தொடருக்காக திருமணத்தை தள்ளி போட்ட ஆர்சிபி இளம் வீரர் – வெளியான சுவாரசிய தகவல்

Rajat Patidar 112
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடர் கடந்த ஒரு மாதங்களுக்கும் மேலாக ரசிகர்களை மகிழ்வித்து லீக் சுற்றை கடந்து இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த அணிகள் பிளே ஆஃப் சுற்றில் பலப்பரிட்சை நடத்தி வரும் நிலையில் மே 25-ஆம் தேதியன்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் புள்ளிபட்டியலில் 3, 4 ஆகிய இடங்களைப் பிடித்த லக்னோ மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் சந்தித்தன. கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற அந்த பரபரப்பான போட்டியில் 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பெங்களூரு மே 27இல் நடைபெறும் குவாலிபயர் 2 போட்டியில் காத்திருக்கும் ராஜஸ்தானுடன் மோதுவதற்கு தகுதி பெற்றது.

patidar 1

- Advertisement -

அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடியாக பேட்டிங் செய்து 207/4 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு கேப்டன் டு பிளசிஸ், விராட் கோலி போன்ற நட்சத்திர வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினாலும் முதல் ஓவரில் களமிறங்கி கடைசி வரை அவுட்டாகாமல் லக்னோ பவுலர்களை பிரித்து மேய்ந்து சொல்லி அடித்த இளம் வீரர் ரஜத் படிடார் யாருமே எதிர்பாராத வகையில் 12 பவுண்டரி 7 சிக்சருடன் சதமடித்து 112* (54) ரன்கள் விளாசினார்.

ஸ்டாராக படிடார்:
அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் எலிமினேட்டர் போட்டியில் சதம் அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற வரலாற்று சாதனையும் படைத்தார். அதைத்தொடர்ந்து 208 என்ற இலக்கை துரத்திய லக்னத்துக்கு கேப்டன் கேஎல் ராகுல் 79 (58) தீபக் ஹூடா 45 (21) ரன்கள் எடுத்து போராடிய போதிலும் இதர பேட்ஸ்மேன்கள் கைகொடுத்த தவறியதால் 20 ஓவர்களில் 193/6 ரன்களை மட்டுமே எடுத்த அந்த அணி தோல்வியடைந்து ஐபிஎல் தொடரிலிருந்து பரிதாபமாக வெளியேறியது. இந்த வெற்றிக்கு பயமறியாத காளையாக சீறி பாய்ந்து சதமடித்த ரஜத் படிடார் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Rajat Patidar 112 2

எலிமினேட்டர் போன்ற அதிகப்படியான அழுத்தம் நிறைந்த போட்டியில் விராட் கோலி போன்ற நட்சத்திரங்கள் சொதப்பிய நிலையில் அட்டகாசமாக பேட்டிங் செய்த அவரை பல முன்னாள் ஜாம்பவான் வீரர்களும் ரசிகர்களும் மனதார பாராட்டி வருகின்றனர். மத்தியபிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த இவர் உள்ளூர் கிரிக்கெட்டில் ஓரளவு சிறப்பாக செயல்பட்டதால் கடந்த 2021இல் முதல் முறையாக 20 லட்சத்துக்கு பெங்களூரு அணிக்காக வாங்கப்பட்டார். அதில் 4 போட்டிகளில் விளையாடி 71 ரன்கள் மட்டுமே எடுத்ததால் இந்த வருட ஏலத்தில் பெங்களூர் அணியும் வாங்கவில்லை.

- Advertisement -

கல்யாணம் நிறுத்தம்:
அந்த நிலைமையில் மற்றொரு இளம் வீரர் லூவினித் சிசோடியா காயமடைந்ததால் அவருக்கு பதிலாக ரஜத் படிடார் மீண்டும் அதே தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்த வகையில் லீக் சுற்றில் 6 போட்டிகளில் வாய்ப்புப் பெற்ற அவர் மீண்டும் சுமாராக செயல்பட்டாலும் முக்கியமான எலிமினேட்டர் போட்டியில் முழு திறமையை வெளிப்படுத்தி பெங்களூருவின் வெற்றி நாயகனாக உருவெடுத்துள்ளார். இப்படி பாதியில் வந்து நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ள அவர் இந்த ஐபிஎல் தொடருக்காக கல்யாணத்தை தள்ளி போட்டு விட்டு பெங்களூர் அணிக்காக விளையாடி வருவதாக அவரின் தந்தை தற்போது கூறியுள்ளார்.

இது பற்றி இன்று அவர் பேசியது பின்வருமாறு. “மே 9-ஆம் தேதி அவருடைய திருமணத்தை நடத்த திட்டமிட்டிருந்தோம். சிறிய அளவில் நடத்தலாம் என்று நினைத்த நாங்கள் அதற்காக இந்தூரில் ஒரு சிறிய ஹோட்டலையும் புக் செய்திருந்தோம். அந்த திருமணத்தை சிறிய அளவில் நடத்த திட்டமிட்டிருந்ததால் பெரிய அளவில் அழைப்பிதழ்கள் அச்சடிக்கவில்லை. அதேப்போல் குறைவான விருந்தினர்களுக்கு மட்டுமே ஹோட்டல் புக் செய்திருந்தோம். ஆனால் அவர் கிரிக்கெட் விளையாட சென்றதால் அந்த திட்டத்தை ஜூலை மாதத்திற்கு மாற்றியுள்ளோம். மத்தியபிரதேச அணிக்காக ரஞ்சி கோப்பையில் விளையாடிய பின்பு மீண்டும் அதை நடத்த உள்ளோம்” என்று கூறினார்.

- Advertisement -

திருமணத்தை விட கிரிக்கெட் தான் முக்கியம் என கருதிய ரஜத் படிடார் அதில் விளையாட சென்று விட்டதால் வேறு வழியின்றி திருமணத்தை தள்ளிப்போட்டதாக கூறும் அவரின் தந்தை ஐபிஎல் முடிந்தும் கூட அதன் பின் நடைபெறும் ரஞ்சி கோப்பையில் அவர் விளையாடும் மத்திய பிரதேசம் நாக்அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளதால் அந்த ரஞ்சி கோப்பை முடிந்த பின்புதான் திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : 2ஆவது குவாலிபயர் போட்டிக்கு முன்னர் ராஜஸ்தான் அணியில் இருந்து வெளியேறிய வெளிநாட்டு வீரர் – விவரம் இதோ

மொத்தத்தில் கிரிக்கெட் மீது அவருக்கு இருக்கும் கடமை உணர்ச்சி ரசிகர்களை நெகிழ வைக்கிறது. இப்படி ஒரு கடின உழைப்பும் கடமை உணர்வும் அவரை வரும் காலங்களில் பெரிய அளவில் கொண்டுவரும் என்பதில் சந்தேகமில்லை.

Advertisement