விராட் கோலி இதை செஞ்சது ஸ்பெஷல்.. அவங்க இருக்கப்போ ஆர்சிபி எந்த ஊர்லயும் ஜெயிக்கும்.. படிதார் பேட்டி

Rajat Patidar
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 13ஆம் தேதி ஜெய்ப்பூரில் மதியம் 3.30 மணிக்கு 28வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணியை அதனுடைய சொந்த மண்ணில் 9 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு தோற்கடித்தது. அப்போட்டியில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் 20 ஓவரில் 174 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 75, ரியான் பராக் 30, துருவ் ஜுரேல் 35* ரன்கள் எடுத்தனர்.

அடுத்து விளையாடிய பெங்களூரு அணி ஆரம்பம் முதலே அதிரடியாக செயல்பட்டு 17.3 ஓவரில் 175-1 ரன்களை எடுத்து எளிதாக தங்களது நான்காவது வெற்றியைப் பெற்றது. அந்த அணிக்கு துவக்க வீரர்கள் பில் சால்ட் 65, விராட் கோலி 62* ரன்கள் எடுத்தார்கள். அவர்களுடன் தேவ்தூத் படிக்கல் 40* (28) ரன்கள் எடுத்து வெற்றியில் உதவினார்.

- Advertisement -

பெங்களூரு வெற்றி:

இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி பெங்களூரு அசத்தி வருகிறது. ஆச்சரியப்படும் வகையில் இந்த வருடம் பெற்றுள்ள 4 வெற்றிகளையும் பெங்களூரு சொந்த மண்ணுக்கு வெளியே பெற்றுள்ளது. இந்நிலையில் எவ்வகையான பிட்ச்சிலும் பவுலிங் செய்யக்கூடிய பவுலர்கள் தங்களிடம் இருப்பதால் ஆர்சிபி அணி எந்த மைதானத்திலும் வெற்றி பெறும் தன்னம்பிக்கையைக் கொண்டுள்ளதாக கேப்டன் ரஜத் படிதார் தெரிவித்துள்ளார்.

மேலும் பில் சால்ட் அதிரடியாக விளையாடிய நிலையில் விராட் கோலி நங்கூரமாக விளையாடி ஸ்ட்ரைக்கை மாற்றியது வெற்றிக்கு முக்கியமானதாக இருந்ததாகவும் அவர் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இது சிறப்பான வெற்றி. எங்களுடைய பவுலர்கள் அவர்களது திட்டங்களை செயல்படுத்தியதைப் பார்ப்பது நன்றாக இருந்தது”

- Advertisement -

4வது வெற்றி:

“இலக்கைப் பற்றி நாங்கள் எந்தக் கவலையும் படவில்லை. பவர் பிளே ஓவர்களில் நாங்கள் பௌலிங் செய்த விதம் ஸ்பெஷல். பிட்ச் பேட்டிங் செய்வதற்கு எளிதாக இல்லை. அதனால் நாங்கள் 150 – 170 ரன்கள் இலக்காக இருக்கலாம் என்று விரும்பினோம். எங்களது பவுலர்களால் நான் தன்னம்பிக்கையை பெற்றுள்ளேன். அவர்கள் எந்த பிட்ச்சிலும் எந்த நேரத்திலும் பவுலிங் செய்ய தயாராக இருக்கிறார்கள்”

இதையும் படிங்க: முதல் 6 ஓவரிலேயே நாங்க செய்ஞ்ச தப்பால் கோலியும், சால்ட்டும் மேட்ச்சை முடிச்சிட்டாங்க – சாம்சன் வருத்தம்

“அது எனக்கு நிறைய தன்னம்பிக்கையைக் கொடுக்கிறது. பிலிப் சால்ட் ஆட்டத்தை ஃபெவிலியனில் அமர்ந்து மகிழ்ச்சியுடன் பார்த்தேன். அவர் அதிரடியாக விளையாடிய சமயத்தில் விராட் கோலி ஸ்ட்ரைக்கை மாற்றியது மிகவும் ஸ்பெஷல். நாங்கள் இதே போல தொடர்ந்து நேர்மறையாக நல்ல கிரிக்கெட்டை விளையாடப் பார்ப்போம்” என்று கூறினார்.

Advertisement