
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 67-வது லீக் போட்டியில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 256 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை துரத்தி 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை மட்டுமே குவித்ததால் 55 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. ஆனாலும் ரன் ரேட் அடிப்படையில் இந்த தொடரின் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்து அசத்தியது.
இந்த போட்டியின் போது இரண்டாவதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பேட்டிங் செய்கையில் : அந்த அணி சார்பாக நான்காவது வீரராக களமிறங்கிய கேப்டன் ரஜத் பட்டிதார் 39 பந்துகளை சந்தித்து 6 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 56 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். நேற்றைய போட்டியில் அவர் அடித்த ஒரு சிக்சரின் மூலம் ஐ.பி.எல் போட்டிகளில் மாபெரும் சாதனை ஒன்றினை முறியடித்துள்ளார்.
அதிலும் குறிப்பாக சி.எஸ்.கே அணியின் நட்சத்திர வீரரான ஷிவம் துபேவின் சாதனையை அவர் நேற்றைய போட்டியில் முறியடித்தது குறிப்பிடத்தக்கது. அதாவது நேற்றைய போட்டியில் ரஜத் பட்டிதார் நிகழ்த்திய சாதனை யாதெனில் : இதுவரை ஐபிஎல் போட்டிகளில் குறைந்த பந்துகளில் 100 சிக்ஸர்களை அடித்த இந்திய வீரராக ஷிவம் துபே 992 பந்துகளில் 100 சிக்ஸர்களை அடித்து முதலிடத்தில் இருந்தார்.
அவரது இந்த சாதனையை ரஜத் பட்டிதார் நேற்றைய போட்டியின் மூலம் முறியடித்தார். நேற்று ரஜத் பட்டிதார் அடித்த ஒரு சிக்சரின் மூலம் 933 பந்துகளில் 100 சிக்ஸர்களை அடித்து அவரை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார். ஒட்டுமொத்தமாக ஐ.பி.எல் போட்டிகளில் ஆண்ட்ரே ரசல் 657 பந்துகளில் 100 சிக்ஸர்களை அடித்து முதலிடத்திலும், நிக்கோலஸ் பூரான் 884 பந்துகளில் 100 சிக்ஸர்களை அடித்து இரண்டாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஆர்.சி.பி அணிக்கெதிரான வெற்றிக்கு இவர்களே காரணம்.. பேட் கம்மின்ஸ் மகிழ்ச்சி – விவரம் இதோ
நேற்றைய போட்டியில் ஆர்.சி.பி அணி தோல்வியை சந்தித்திருந்தாலும் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளதால் குவாலிபயர் 1 போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து தரம்சாலா நகரில் நடைபெறவுள்ள போட்டியில் விளையாடயிருப்பது குறிப்பிடத்தக்கது.