இந்தியாவில் கடந்த மார்ச் 22-ஆம் தேதி துவங்கிய நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான 18-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது ஜூன் 3-ஆம் தேதி நடைபெற்ற மாபெரும் இறுதிப்போட்டியுடன் நிறைவுக்கு வந்தது. இந்த தொடரின் பிளே ஆப் சுற்றிற்கு பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் தகுதி பெற்றிருந்த வேளையில் இறுதி போட்டியில் விளையாட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த இரண்டு அணிகளுமே இதுவரை ஐ.பி.எல் கோப்பையை வெல்லவில்லை என்பதனால் எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்தது.
விராட் கோலிக்காக 18 வருட பாரம்பரியத்தை உடைத்த ரஜத் பட்டிதார் :
அந்த வகையில் நடைபெற்று முடிந்த இந்த மாபெரும் இறுதிப்போட்டியில் : முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 190 ரன்களை குவிக்க அடுத்ததாக விளையாடிய பஞ்சாப் அணியால் 184 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. அதன் காரணமாக 6 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது வெற்றி பெற்று முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி அசத்தியது.
கடந்த 18 ஆண்டுகளாக ஒரு கோப்பைக்காக காத்திருந்த ஆர்சிபி அணியின் ஏக்கமும் இந்த ஆண்டு முடிவுக்கு வந்தது. ஆர்.சி.பி அணியின் இந்த வெற்றியை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி முடிந்த பின்னர் விராட் கோலியின் மீதுள்ள மரியாதை காரணமாக ஆர்.சி.பி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் செய்த செயல் ஒன்று தற்போது இணையத்தில் அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த வகையில் ரஜத் பட்டிதார் செய்தது யாதெனில் : இதுவரை ஐ.பி.எல் கோப்பைகளை கைப்பற்றிய கேப்டன்கள் மட்டுமே இறுதிப்போட்டிக்கு பிறகு கேமராவில் கையொப்பம் இடுவார்கள். அந்த வகையில் ஏற்கனவே ஐபிஎல் கோப்பை வென்ற பல்வேறு கேப்டன்களும் வெற்றிக்கு பிறகு கேமராவில் கையொப்பம் இட்டுள்ளதை நாம் கண்டுள்ளோம். அந்தவகையில் இம்முறை ரஜத் பட்டிதார் தான் வெற்றிக்கு பிறகு கேமராவில் கையெழுத்து இட்டிருக்க வேண்டும்.
ஆனால் 18 ஆண்டுகளாக கோப்பைக்காக காத்திருக்கும் விராட் கோலியை கையொப்பமிடுமாறு ரஜத் பட்டிதார் கேட்டுக்கொண்டார். பின்னர் அவரது வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட விராட் கோலியும் கேமரா அருகில் சென்று தனது கையெழுத்திட்டார்.
இதையும் படிங்க : ஆயுஷ் மாத்ரேவுக்கு இடமில்லை.. ஐபிஎல் 2025 கனவு அன்கேப்ட் லெவனை தேர்ந்தெடுத்த ஆகாஷ் சோப்ரா
வழக்கமாகவே வெற்றிக்கு பின்னர் அந்த அணியின் கேப்டன் கேமராவில் கையெழுத்திட்டு வந்த வேளையில் அந்த 18 ஆண்டுகால பாரம்பரியத்தை விராட் கோலிக்காக ரஜத் பட்டிதார் உடைத்தெறிந்துள்ளார். இத்தனை ஆண்டு காலமாக ஆர்.சி.பி அணிக்கு மிகப்பெரிய பங்களிப்பை வழங்கி வரும் விராட் கோலி தான் இந்த வெற்றிக்கு தகுதியானவர் என்று ரஜத் பட்டிதார் செய்த இந்த செயல் அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.



