20 ரன்ஸ்.. ராஜஸ்தான் அசத்தல்.. கொஞ்சமும் மாறாமல் மீண்டும் தடவிய ராகுல்.. பூரான் போராட்டம் வீணானது எப்படி?

LSG vs RR
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மார்ச் 24ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு ஜெய்ப்பூரில் 4வது போட்டி நடைபெற்றது. அதில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தானுக்கு ஜோஸ் பட்லர் 11, ஜெய்ஸ்வால் 24 என துவக்க வீரர்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

இருப்பினும் அடுத்ததாக ஜோடி சேர்ந்த கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் ரியான பராக் ஆகியோர் அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டனர். அந்த வகையில் மிடில் ஓவர்களில் சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ராஜஸ்தானை வலுப்படுத்திய போது ரியான் பராக் 43 (29) ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

ராஜஸ்தான் அசத்தல்:
அப்போது வந்த சிம்ரோன் ஹெட்மயர் 5 ரன்னில் அவுட்டானாலும் மறுபுறம் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் அரை சதமடித்து 3 பவுண்டரி 6 சிக்ஸருடன் 82* (52) ரன்கள் குவித்து ஃபினிஷிங் கொடுத்தார். அவருடன் துருவ் ஜுரேல் 20* (12) ரன்கள் எடுத்ததால் 20 ஓவர்களில் ராஜஸ்தான் 193/4 ரன்கள் குவித்தது. லக்னோ சார்பில் அதிகபட்சமாக நவீன்-உல்-ஹக் 2 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத் தொடர்ந்து 194 ரன்களை துரத்திய லக்னோவுக்கு முதல் ஓவரிலேயே டீ காக்’கை 4 ரன்களில் காலி செய்த டிரெண்ட் போல்ட் அடுத்ததாக வந்த தேவ்தூத் படிக்களை டக் அவுட்டாக்கினார்.

போதாக்குறைக்கு அடுத்ததாக வந்த ஆயுஷ் பதோனி 1 ரன்னில் அவுட்டானதால் 11/3 என லக்னோ ஆரம்பத்திலேயே தடுமாறியது. இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் மற்றும் கேப்டன் கேஎல் ராகுல் நிதானமாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். அவருக்கு அதிரடியாக விளையாடி கை கொடுக்க முயற்சித்த தீபக் ஹூடா 26 (13) ரன்களில் அவுட்டாகி சென்றார். இருப்பினும் அதற்கடுத்ததாக வந்த நிக்கோலஸ் பூரான் தனது பாணியில் அதிரடியாக விளையாடி ரன்குவிப்பில் ஈடுபட்டார்.

- Advertisement -

ஆனால் எதிர்புறம் கடைசி வரை நிதானம் கலந்த அதிரடியை மட்டுமே வெளிப்படுத்திய ராகுல் அரை சதமடித்து 58 (44) ரன்கள் குவித்து முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார். அப்போது வந்த மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் 3 ரன்களில் அஸ்வின் சுழலில் சிக்கியது போட்டியில் திருப்பு முனையாக அமைந்தது. அதனால் கடைசியில் நிக்கோலஸ் பூரான் 4 பவுண்டரி 4 சிக்சருடன் 64* (41) ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் லக்னோ 172/6 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதையும் படிங்க: 74, 119, 55, 55, 82 ரன்ஸ்.. ராஜஸ்தானுக்காக ஓப்பனிங்கில் மிரட்டிய சஞ்சு சாம்சன்.. பட்லர், ரகானே சாதனை சமன்

அதன் காரணமாக 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரை வெற்றியுடன் துவக்கிய ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ட்ரெண்ட் போல்ட் 2 விக்கெட்டுகள் எடுத்தார். மேலும் டெத் ஓவரில் சந்தீப் சர்மா துல்லியமாக பந்து வீசி வெற்றியில் முக்கிய பங்காற்றினார். மறுபுறம் சேசிங் செய்யக்கூடிய இலக்கை டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் சொதப்பலான ஆட்டத்தால் தவறவிட்ட லக்னோ முதல் போட்டியிலேயே தோல்வியை சந்தித்தது. குறிப்பாக பெரிய ஸ்கோர் அடித்தாலும் 131.82 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் தடவலான பேட்டிங்கை வெளிப்படுத்தி கடைசி வரை அதிரடியை துவக்காத கேப்டன் ராகுல் கடந்த வருடத்தை போலவே மெதுவாக விளையாடி தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தார்.

Advertisement