ஐபிஎல் 2023 ஏலம் : சஞ்சு சாம்சன் தலைமையில் கோப்பை முத்தமிட ராஜஸ்தான் தக்க வைத்த – கழற்றி விட்ட வீரர்களின் பட்டியல்

Ravichandran Ashwin RR
- Advertisement -

இந்தியாவின் நம்பர் ஒன் விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் 2023 மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் இந்தியாவிலேயே நடத்துவதற்கான வேலைகளை பிசிசிஐ செய்து வருகிறது. அதில் முதல் கட்டமாக 2023 சீசனுக்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 23ஆம் தேதியன்று கேரள மாநிலம் கொச்சி நகரில் நடைபெறும் என்று அறிவித்துள்ள பிசிசிஐ அதற்கு முன்பாக அனைத்து அணி நிர்வாகங்களும் தாங்கள் தக்க வைத்த மற்றும் விடுவித்த வீரர்களின் இறுதி பட்டியலை நவம்பர் 15ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு கூறியிருந்தது. அதனால் அனைத்து அணிகளும் தங்களது இறுதிப்பட்டியலை நேற்று வெளியிட்ட நிலையில் 2008இல் மறைந்த ஜாம்பவான் ஷேன் வார்னே தலைமையில் முதலும் கடைசியாக கோப்பையை வென்ற ராஜஸ்தான் தங்களுடைய அணியை வெளியிட்டுள்ளது.

சமீப காலங்களாகவே பிளே ஆஃப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் மோசமான தோல்விகளை சந்தித்த அந்த அணி இந்த வருடம் இளம் வீரர் சஞ்சு சாம்சன் தலைமையில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் அபாரமாக செயல்பட்டு 2008க்குப்பின் முதல் முறையாக ஃபைனலுக்கு தகுதி பெற்று அசத்தியது. இருப்பினும் ஃபைனலில் வெற்றிக்கனியை ருசிக்க முடியாத அந்த அணி இம்முறை மீண்டும் கோப்பையை வெல்வதற்கு இந்த வருடம் சிறப்பாக செயல்பட்ட பெரும்பாலான வீரர்களை மீண்டும் தக்க வைத்துள்ளது.

- Advertisement -

ராஜஸ்தான் அணி:
அதில் குறிப்பாக சஞ்சு சாம்சன் மீண்டும் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் துருப்பு சீட்டாக செயல்பட்டு ஆரஞ்சு தொப்பியை வென்று இந்த வருடம் டி20 உலக கோப்பையை கேப்டனாக வென்று மிரட்டியுள்ள இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் முக்கிய வீரராக தக்க வைக்கப்பட்டுள்ளார். மேலும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக கருதப்படும் சுழல் பந்து வீச்சு ஜோடியான ரவிச்சந்திரன் அஸ்வின் – யுஸ்வென்ற சஹால் ஆகியோருடன் சிம்ரோன் ஹெட்மயர், ட்ரெண்ட் போல்ட் போன்ற நட்சத்திரங்களும் யசஸ்வி ஜெய்ஸ்வால், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் சென் போன்ற இளம் இந்திய வீரர்களும் மீண்டும் தக்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

அதே சமயம் தேவ்தூத் படிக்கல், ரியன் பராக் போன்ற இளம் வீரர்கள் இந்த வருடம் சுமாராக செயல்பட்டும் மீண்டும் அந்த அணி தக்க வைத்துள்ளது ரசிகர்களை ஆச்சரியமாக வைத்துள்ளது. ஆனால் டார்ல் மிட்சேல், கருண் நாயர், ராசி வேன் டெர் டுஷன், ஜேம்ஸ் நீசம் போன்ற நட்சத்திர வீரர்கள் திறமை வாய்ந்தவர்களாக இருந்தாலும் சமீப காலங்களில் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்த தவறியதால் அவர்களை ராஜஸ்தான் நிர்வாகம் அதிரடியாக விடுவித்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் மொத்தமாக 9 வீரர்களை கழற்றி விட்டுள்ள ராஜஸ்தான் நிர்வாகம் 16 வீரர்களை 81.80 கோடிகள் செலவில் தக்க வைத்துள்ளதாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக தற்சமயத்தில் அந்த அணியில் அதிகபட்சமாக 9 வீரர்களுக்கான இடம் காலியாக உள்ளது. அதில் அதிகபட்சமாக 4 வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களை அந்த அணியால் வாங்க முடியும். அவர்களை வாங்குவதற்காக வரும் டிசம்பர் 23ஆம் தேதியன்று நடைபெறும் மினி ஏலத்தில் 13.20 கோடிகளுடன் ராஜஸ்தான் அணி நிர்வாகம் களமிறங்குகிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் தக்க வைத்துள்ள வீரர்களின் பட்டியல்: சஞ்சு சாம்சன் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சிம்ரோன் ஹெட்மயேர், தேவ்தூட் படிக்கல், ஜோஸ் பட்லர், துருவ் ஜுரேல், ரியன் பராக், பிரசித் கிருஷ்ணா, ட்ரெண்ட் போல்ட், ஓபேத் மெக்காய், நவ்தீப் சைனி, குல்தீப் சென், குல்தீப் யாதவ், ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வென்ற சஹால் , கேசி காரியப்பா

இதையும் படிங்க: ஐபிஎல் 2023 ஏலம் : பாண்டியா தலைமையில் மீண்டும் கோப்பை வாங்க குஜராத் தக்க வைத்த – விடுவித்த வீரர்களின் பட்டியல்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விடுவித்துள்ள வீரர்களின் பட்டியல்: அனுனாய் சிங், கார்பின் போஸ்க், டார்ல் மிட்செல், ஜேம்ஸ் நீசம், கருண் நாயர், நாதன் கோல்டெர் நைல், ராசி வன் டெர் டுசென், சுபம் கர்வால், தேஜஸ் பரோகா

Advertisement