எப்போ பாதி மீசைய எடுக்கப்போறீங்க? புஜாரா சிக்ஸரால் அஷ்வினுக்கு பழைய சவாலை நினைவுப்படுத்திய ராஜஸ்தான் அணி

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று ஆரம்பத்திலேயே கோப்பையை தக்க வைத்த இந்தியா தங்களை சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை நிரூபித்தது. ஆனால் இந்தூரில் நடைபெற்ற 3வது போட்டியில் பேட்டிங்கில் சொதப்பிய இந்தியாவை ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் அட்டகாசமாக செயல்பட்டு சாய்த்த ஆஸ்திரேலியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்று பதிலடி கொடுத்துள்ளது. அதனால் தங்களது நம்பர் ஒன் இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ள ஆஸ்திரேலியா ஜூன் மாதம் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷி பைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது.

மறுபுறம் முக்கிய நேரங்களில் சொதப்பிய இந்தியா அகமதாபாத் நகரில் நடைபெறும் கடைசி போட்டியில் வென்றால் தான் ஃபைனலுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக 2வது நாளில் அஸ்வினை முன்கூட்டியே பந்து வீச அழைக்காதது, நல்ல பார்மில் இருந்தும் அக்சர் படேலை முன்கூட்டியே பேட்டிங் செய்ய அனுப்பாதது போன்ற கேப்டன்ஷிப் குளறுபடிகளை செய்த ரோகித் சர்மா 2வது இன்னிங்ஸில் இதர இந்திய பேட்ஸ்மேன்கள் திண்டாடிய போது நங்கூரமாக நின்று 59 ரன்கள் குவித்து போராடிய புஜாராவை அவசரப்படுத்தி அவுட்டாக வைத்ததும் நிறைய விமர்சனங்களை எழுப்பியது.

- Advertisement -

மீசைய எடுங்க:
அதாவது ஃபீல்டர்கள் உள்ளே நிற்பதால் எஞ்சிய விக்கெட்டுகள் விழுவதற்குள் சற்று அதிரடியாக ரன்களை சேர்க்குமாறு இஷான் கிசானிடம் ரோகித் சர்மா சொல்லி அனுப்பினார். அதனால் நேதன் லயன் ஓவரில் இறங்கி வந்து அடித்த புஜாரா 79 மீட்டர் பெரிய சிக்சரை அடித்தது வர்ணையாளர்களையும் ரோகித் சர்மாவையும் வியப்பில் ஆழ்த்தி பாராட்ட வைத்தது. ஆனால் பொதுவாகவே பொறுமையின் சிகரமாக களத்தில் நங்கூரத்தை போட்டு அதிக பந்துகளை எதிர்கொண்டு எதிரணி பவுலர்களை களைப்படையை வைத்து சிங்கிள், டபுள் ரன்கள் வாயிலாக பெரிய ரன்களை குவிக்கும் ஸ்டைலை கொண்ட புஜாரா அதிரடியாக விளையாட வேண்டும் என்ற ரோகித் சர்மாவின் நிர்பந்தத்தால் பதற்றமடைந்து கவனத்தை சிதறவிட்டு அடுத்த சில ஓவர்களில் அவுட்டானதாக ரசிகர்கள் விமர்சித்தனர்.

எது எப்படி இருந்தாலும் கடைசியாக கடந்த 2021ஆம் ஆண்டு மும்பை வான்கடே மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிராக அஜஸ் படேலுக்கு எதிராக சிக்சர் அடித்திருந்த புஜாரா 2 வருடங்கள் கழித்து இப்போட்டியில் இதர வீரர்களை விட பெரிய சிக்சர் அடித்த காரணத்தால் அதற்காக ஸ்பெஷல் விருதை வென்றார். அப்படி புஜாரா சிக்ஸர் அடிப்பது மிகவும் ஆச்சரியம் மற்றும் அரிதாக பார்க்கப்படும் நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அவர் மட்டும் சிக்ஸர் அடித்தால் தன்னுடைய பாதி மீசையை எடுத்துக் கொள்வதாக ரவிச்சந்திரன் அஷ்வின் விளையாட்டாக ஒரு சவாலை வைத்திருந்தார்.

- Advertisement -

அது பற்றி அந்த சமயத்தில் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் அவர்களுடன் தன்னுடைய யூடியூப் பக்கத்தில் அஸ்வின் பேசியது பின்வருமாறு. “இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறப் போகும் இந்த தொடரில் மொய்ன் அலி அல்லது வேறு ஏதாவது ஸ்பின்னர்களை இறங்கி வந்து புஜாரா சிக்ஸர் அடித்தால் அந்தப் போட்டியில் என்னுடைய மீசையில் பாதியை எடுத்துக் கொண்டு நான் விளையாட வருகிறேன். இது வெளிப்படையான சவால்” என்று கலகலப்புடன் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் எதிர்பார்த்தது போலவே அந்த தொடரில் புஜாரா சிக்சர் அடிக்காததால் அஷ்வின் சவாலில் வென்றதால் அந்த பேச்சு அப்படியே மறைந்து போனது. ஆனால் தங்களது அணிக்காக விளையாடி வரும் அஸ்வின் அவ்வாறு பேசியதை தோண்டி எடுத்துள்ள ராஜஸ்தான் ஐபிஎல் அணி நிர்வாகம் இப்போதும் தாமதமாகவில்லை எப்போது மீசையை எடுக்க போகிறீர்கள்? என்ற வகையில் ட்விட்டரில் ஆதாரத்துடன் கிண்டலடிக்ககும் வகையில் கேள்வி எழுப்பியுள்ளது.

இதையும் படிங்க:தோனியே நேரடியா அழைத்து என்னை பாராட்டுனாரு, தினேஷ் கார்த்திக் மகிழ்ச்சி பேட்டி – எதற்குனு பாருங்க

அதற்கு அஸ்வின் என்ன பதில் கொடுப்பார் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். முன்னதாக 101 டெஸ்ட் போட்டிகளில் புஜாரா வெறும் 16 சிக்ஸர்களை அடித்துள்ள நிலையில் லோயர் ஆர்டரில் விளையாடும் அஸ்வின் இதுவரை 91 போட்டியில் 20 சிக்ஸர்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement