
இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பல்வேறு அணிகளிலும் சில இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்படி கிடைத்த வாய்ப்பில் அசத்தலாக செயல்பட்டு புகழின் வெளிச்சத்தையும் இளம் வீரர்கள் பெற்றிருந்தனர். அந்த வகையில் சிஎஸ்கே அணிக்காக 17 வயதான ஆயுஷ் மாத்ரே என்கிற வீரர் அறிமுகமாகி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். அவரது இந்த சிறப்பான ஆட்டம் காரணமாக சிஎஸ்கே அணியின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திர வீரராகவும் அவர் பார்க்கப்படுகிறார்.
அதேபோன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 14 வயதில் அறிமுகமான வைபவ் சூர்யவன்ஷி தான் சந்தித்த முதல் பந்திலயே சிக்சர் அடித்தது மட்டுமின்றி 14 வயதிலேயே ஐபிஎல் போட்டியில் சதம் அடித்து மிக இளம் வயதில் டி20 போட்டிகளில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையும் நிகழ்த்தியிருந்தார். சர்வதேச பந்துவீச்சாளர்களுக்கு எதிராக இவர் ஆடிய ஆட்டம் பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றிருந்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திர வீரராக தொடர்வார் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த இரண்டு வீரர்களும் 2025 ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய அளவில் கவனிக்கப்பட்ட வீரர்களாக இருந்த வேளையில் ஐபிஎல் தொடருக்கு பின்னர் நடைபெற்ற அண்டர் 19 போட்டிகளிலும் இந்திய அணிக்காக இவ்விருவரும் துவக்க வீரர்களாக களமிறங்கி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக இந்திய அணியிலும் இவர்கள் இருவரும் விரைவில் இடம்பெற வாய்ப்புள்ளதாக பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா : ஆயுஷ் மாத்ரேவை காட்டிலும் வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணிக்காக விரைவில் அறிமுகம் ஆவார் என்று தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : ஆயுஷ் மாத்ரே மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஆகிய இருவரில் இந்திய அணிக்காக முதலில் அறிமுகமாகும் வீரர் என்றால் வைபவ் சூர்யவன்ஷியை தான் நான் பார்க்கிறேன். ஏனெனில் அவருடைய பயமற்ற ஆட்டம் ஒரு எக்ஸ்பெக்டர். எனவே இந்திய அணிக்காக அவர் விரைவில் அறிமுகமாக வாய்ப்புள்ளது என்று நினைக்கிறேன்.
இதையும் படிங்க : 5 ஆண்டுகளுக்கு பிறகு தோனிக்கு முக்கிய பதவியை வழங்க பி.சி.சி.ஐ முடிவு – தோனியின் முடிவு என்ன?
ஆயுஷ் மாத்ரேவும் மிகச் சிறப்பான ஒரு பேட்ஸ்மன் தான். ஆனாலும் அவரை விட முன்னதாக சூரியவன்ஷி இந்திய அணிக்காக விளையாடுவார். போட்டியின் நிலையை மிக வேகமாக மாற்றக்கூடிய ஒரு அதிரடியை அவர் கையில் வைத்திருப்பதால் நிச்சயம் அவரே இந்திய அணிக்கு விரைவில் அறிமுகம் ஆவார் என்று சுரேஷ் ரெய்னா கூறியது குறிப்பிடத்தக்கது.