ஐ.பி.எல் தொடரில் இருந்து ஒதுக்கப்பட்ட சுரேஷ் ரெய்னாவுக்கு – விருது வழங்கி கௌரவித்த வெளிநாடு

Raina
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கடந்த 2020-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். குறிப்பாக கடந்த 2020-ஆம் ஆண்டு இந்தியாவின் சுதந்திர தினத்தன்று தனது ஆருயிர் நண்பர் மற்றும் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி ஓய்வு பெற்ற அதே நாளில் அவர் ஓய்வை அறிவித்த அடுத்த ஒரு சில நிமிடங்களில் தனது ஓய்வை அறிவித்து நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தார்.

கடந்த 2005-ஆம் ஆண்டு இந்தியாவிற்காக கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் அதன்பின் மிடில் ஆர்டரில் ஒரு முக்கிய வீரராக உருவெடுத்து இந்தியாவிற்கு பல வெற்றிகளை தேடி கொடுத்தார். குறிப்பாக 2011 உலகக் கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் ட்ராபி ஆகிய ஐசிசி உலக கோப்பைகளை வென்ற இந்திய அணியில் அவர் துருப்புச் சீட்டாக செயல்பட்டார்.

- Advertisement -

மிஸ்டர் ஐபிஎல் சுரேஷ் ரெய்னா:
அதேபோல் ஐபிஎல் உருவாக்கப்பட்ட 2008-ஆம் ஆண்டு முதல் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிரடியாக விளையாடி வந்த அவர் அந்த அணிக்கு பல வெற்றிகளை தேடிக் கொடுத்தார். ஒரு காலத்தில் எத்தனையோ தரமான பந்துவீச்சாளர்களையும் அசால்டாக எதிர்கொண்ட அவர் பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பறக்கவிட்டு ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்து பல சாதனைகளைப் படைத்தார்.

ஐபிஎல் தொடரில் 5000 ரன்களை எடுத்த முதல் வீரர் உள்ளிட்ட பல சாதனைகள் படைத்த அவரை மிஸ்டர் ஐபிஎல் என ஜாம்பவான்களும் வல்லுநர்களும் அழைத்தனர். காலப்போக்கில் சென்னை அணியில் எம்எஸ் தோனிக்கு பின் அடுத்த கேப்டன் என்ற அளவுக்கு வளர்ந்த அவரை அதன் ரசிகர்கள் “சின்னத் தல” என்று தலையில் வைத்துக் கொண்டாடினார்கள்.

- Advertisement -

ஒதுக்கப்பட்ட ரெய்னா:
அப்படிப்பட்ட வேளையில் 2008 முதல் 2018 வரை தொடர்ந்து ஒவ்வொரு சீசனிலும் குறைந்தது 400க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்த ஒரே வீரர் என்ற மாபெரும் சாதனை படைத்து வந்த அவர் அதன்பின் ரன்கள் குவிக்க முடியாமல் தடுமாறினார். போதாகுறைக்கு ஓய்வுபெற்ற பின் உள்ளூர் கிரிக்கெட்டிலும் பங்கேற்காமல் இருந்து வந்த அவர் இழந்த தனது பார்மை மீட்டெடுக்க எந்த முயற்சியும் செய்யாத காரணத்தால் சமீபத்தில் நடந்த ஏலத்தில் அவரை எந்த அணியும் வாங்கவில்லை. குறிப்பாக கடந்த பல வருடங்களாக தங்கள் அணிக்கு ஆற்றிய அளப்பரிய பங்கை மறந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் கூட அவரை வாங்காமல் ஒதுக்கியது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

அந்த வேளையில் புதிதாக உருவாக்கப்பட்ட குஜராத் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட ஜேசன் ராய் விலகியதை அடுத்து அந்த இடத்தில் சுரேஷ் ரெய்னா விளையாடுவார் என தகவல்கள் வந்தது. ஆனால் அவரைப் போன்ற பார்ம் இல்லாத ஒரு வீரரை வாங்கும் எண்ணம் சுத்தமாக இல்லை என அறிவித்த குஜராத் அணி நிர்வாகம் அந்த செய்திகள் அனைத்தும் வதந்தி என தெரிவித்தது.

- Advertisement -

கௌரவித்த மாலத்தீவுகள்:
இப்படி சென்னை உட்பட அனைவராலும் ஒதுக்கப்பட்ட சுரேஷ் ரெய்னாவுக்கு இந்தியாவின் அண்டை நாடான மாலத்தீவுகள் கௌரவ விருது வழங்கி பாராட்டியுள்ளது. கடந்த 10 வருடங்களாக விளையாட்டில் பல சாதனைகளைப் படைத்து இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் அவருக்கு மாலத்தீவு நாட்டின் உயரிய விளையாட்டு விருதான “ஸ்போர்ட்ஸ் ஐகான்” எனும் கௌரவ விருதை அந்நாட்டு விளையாட்டுத்துறை அளித்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் உலக அளவில் சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்களுக்கு மாலத்தீவு சார்பில் விருது அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடத்திற்கான விருது வழங்குவதற்கு இந்தியாவின் சுரேஷ் ரெய்னா, இலங்கையின் முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூரியா உள்ளிட்ட 16 பேர் பரிந்துரைக்கப்பட்டனர். அதில் சுரேஷ் ரெய்னா வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டதை அடுத்து அந்நாட்டில் நடைபெற்ற “மாலத்தீவு விளையாட்டு விருதுகள் 2022” விழாவில் ரெய்னாவுக்கு விருது வழங்கப்பட்டது.

இதையும் படிங்க : விசா கிடைக்காததால் அணியுடன் இணைய முடியாமல் தவிக்கும் சி.எஸ்.கே வீரர் – பரிதாப நிலை

இந்த விருதை அந்நாட்டின் அதிபர் அஹமட் நஷீர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர்கள் சுரேஷ் ரெய்னாவுக்கு வழங்கி கௌரவித்தார்கள். உலக அரங்கில் இந்தியாவிற்காக விளையாடி பெருமைகளை சேர்ந்த சுரேஷ் ரெய்னாவின் பங்கு அளப்பரியது என அவர்கள் பாராட்டினார்கள். அதற்கு நன்றி தெரிவித்த சுரேஷ் ரெய்னா இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

Advertisement