
இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 2025 சீசன் மார்ச் 22ஆம் தேதி கோலாகலமாக துவங்குகிறது. இம்முறை கொல்கத்தாவில் துவங்கும் அந்தத் தொடரில் கோப்பையை வெல்வதற்கு 10 அணிகளும் தயாராக உள்ளன. இந்த வருடத்தின் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
உலகின் நம்பர் ஒன் பிரீமியர் லீக் டி20 தொடராக கருதப்படும் இத்தொடருக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கோடிக்கணக்கான ரூபாய்களை வருமானமாக பெற்றுத் தரும் இந்தத் தொடரை வெற்றிகரமாக துவங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அதற்காக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கலை நிகழ்ச்சிகளுக்கு பிசிசிஐ ஏற்பாடு செய்துள்ளது.
அந்த கலை நிகழ்ச்சிகளில் பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல், பாடகர் கரண் அஜூளா ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். அப்படியே பிரபல பாலிவுட் நடிகை தீசா படானி பங்கேற்கும் நடன நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. அந்த வகையில் கலை நிகழ்ச்சிகளுடன் துவங்கும் ஐபிஎல் தொடருக்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
ஆனால் அந்த நிகழ்ச்சிகளில் மழையும் விளையாடுவதற்கு தயாராகியுள்ளது. ஆம் மேற்கு வங்க மாநிலத்தில் மார்ச் 20 முதல் 22ஆம் தேதி வரை இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக கொல்கத்தா மண்டல வானிலை மையம் அறிவித்துள்ளது. வங்காள வெரிகுடாவில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தம் காரணமாக மேற்குவங்க மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவிக்கிறது.
எனவே மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அதனால் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகள் மழை காரணமாக நடைபெறுமா? என்பது கேள்விக்குறியாகியுள்ளது. மேலும் போட்டி நடைபெறும் இரவு நேரத்திலும் மழை பெய்வதற்கு 50% வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கை தெரிவிக்கிறது.
இதையும் படிங்க: பாகிஸ்தானின் வீழ்ச்சிக்கு இந்தியாவை பகைச்சுகிட்டதே காரணம்.. எங்கேயும் ஜெய்க்க முடியல.. இயன் ஸ்மித் பேட்டி
எனவே கொல்கத்தா – பெங்களூரு ஓப்பனிங் போட்டியும் முழுமையாக நடைபெறுமா? என்பது சந்தேகம் நிலவுகிறது. இருப்பினும் 50% மட்டுமே மழைக்கான வாய்ப்பு இருக்கிறது. எனவே முடிந்தளவுக்கு ஓவர்களை குறைத்து கொல்கத்தா – பெங்களூரு ஓப்பனிங் போட்டியை முடிவு கிடைக்கும் அளவுக்கு நடுவர்கள் நடத்துவார்கள் நடைபெறும் என்று நம்பலாம்.