
Dravid
விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணியானது ஐசிசி நடத்திய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்ததை அடுத்து, இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் அடுத்த மாதம் நடைபெற உள்ள இலங்கை அணிக்கு எதிரான தொடரின் பக்கம் திரும்பியுள்ளது. ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடிய பல இளம் வீரர்களுக்கு இந்த தொடர்களுக்கான இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் பேட்ஸ்மேனான ராகுல் ட்ராவிட்தான் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னராக யு19 அணிகளுக்கு பயிற்சியாளராக செயல்பட்மிருந்தாலும், சர்வதேச போட்டிகளில் முதல் முறையாக பயிற்சியாளராக செயல்பட இருக்கும் அவரிடம் எடுத்த பேட்டியில், கிரிக்கெட்டை மீண்டும் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பாக இந்த தொடர் அமைந்திருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.
முன்னனி வீரர்கள் அடங்கிய இந்திய டெஸ்ட் அணி இங்கிலாந்தில் இருப்பதால், இரண்டாவது சர்வதேச அணியை இலங்கை தொடருக்காக தேர்வு செய்திருக்கும் பிசிசிஐ, அனைவரும் எதிர்பார்த்ததை போலவே ராகுல் ட்ராவிட்டை பயிற்சியாளராக நியமித்தது. இந்நிலையில் அவரிடம் ஒரு தனியார் சேனல் பேட்டியெடுத்திருக்கிறது. அதில் பேசிய அவர் கூறியதாவது, மூத்த வீரர்கள் மற்றும் இளம் வீரர்கள் அடங்கிய கலவையாக இருக்கும் இந்திய அணிக்கு பயிற்சியாளராக செயல்படபோவது சிறந்த அனுபவமாக இருக்கும். கிரிக்கெட் வீரராக மட்டுமில்லாமல் ஒரு பயிற்சியாளராகவும் ஒவ்வொரு அனுபவத்தில் இருந்தும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்.
நான் யார் என்றும் கிரிக்கெட் என்றால் என்னவென்றும் தெரிந்து கொள்ள மீண்டும் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதைப் பயன்படுத்திக் கொண்டு என்னுடைய திறமையை வளர்த்துக் கொள்வேன் என்று அவர் கூறியுள்ளார். அந்த பேட்டியில் மேலும் பேசிய அவர், இந்திய அணியில் இடம் பிடித்திருக்கும் இளம் வீரர்களுக்கு அறிவுரை ஒன்றையும் வழங்கி உள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ருத்துராஜ் கெய்க்வாட், தேவ்தத் படிக்கல் போன்ற இளம் வீரர்கள் இந்த தொடரில் சிறப்பாக விளையாட ஆர்வமாக உள்ளனர்.
டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வுக் குழுதான் தேர்வு செய்யும். அது அவர்களுடைய வேலை. அதைப்பற்றி நினைக்காமல் இந்த தொடரில் கவனம் செலுத்த வேண்டும். சர்வதேச போட்டிகளில் சிறப்பாக விளையாடினால் தேர்வுக் குழு நிச்சயமாக உங்களை கவனிக்க ஆரம்பித்து விடும். அதை மட்டுமே மனதில் வைத்துக் கொள்ளுங்கள். எந்த ஒரு தொடரும் ஒரு இளம் வீரருக்கு இறுதி தொடராக அமைந்து விடாது. இந்த தொடரும் அதுபோலதான் என்றும் அவர் கூறியுள்ளார்.
அடுத்த மாதம் இலங்கை செல்லவிருக்கும் இந்திய அணியானது, அங்கு சென்ற பின்னர் முதலில் மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் அதற்கடுத்து மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாட இருக்கிறது. அந்நாட்டில் பரவி வரும் கொரானா வைரஸ் காரணமாக அனைத்து போட்டிகளும் கொழும்பு மைதானத்தில் மட்டுமே நடத்தப்பட இருக்கின்றன.